The Beast...இது தளபதி விஜய் நடித்த படம் பற்றியது அல்ல பின்ன?

The Beast...இது தளபதி விஜய் நடித்த படம் பற்றியது அல்ல பின்ன?

The Beast - அமெரிக்க அதிபரை பாதுகாக்கும் வாகனம் பற்றியது! 

லகில் பல முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பாகவும், கௌரவத்தின் அடையாளமாகவும் இதுபோன்ற தனிச்சிறப்பு மிக்க வாகனங்களே விளங்குகின்றன. இந்த வலிமையான வாகனம் அதிகாரத்தின் சின்னம் மட்டுமல்ல, பொறியியல் மற்றும் பாதுகாப்பு அம்சத்தின் அற்புதமும் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக இந்த வாகனம் அமெரிக்க ஜனாதிபதி பயணிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. "The Beast" வெறும் வாகனம் மட்டுமல்ல; அது நான்கு சக்கரங்கள் கொண்ட கோட்டை என்றால் மிகையாகாது! தி பீஸ்ட் காரின் வரலாறு, வடிவமைப்பு, அம்சங்கள் பற்றி பார்க்கலாமா?

The Beast-ன் தோற்றம்: 

னாதிபதியின் பயணத்தைப் பாதுகாக்க,  லிமோசின் என்ற வலுவூட்டப்பட்ட வாகனத்தை பயன்படுத்தத் தொடங்கியது 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான். 'பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்' ஜனாதிபதியாக இருந்தபோது "சன்ஷைன் ஸ்பெஷல்" என்று அழைக்கப்படும் முதல் கவச லிமோசின் ஜனாதிபதியின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து பல ஆண்டுகளாக, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் தோன்றிய முன்னேற்றங்கள் இதில் பொருத்தப்பட்டு ஜனாதிபதியின் போக்குவரத்தானது மேம்படுத்தப்பட்டது. 

'ஜார்ஜ் டபிள்யூ புஷ்' ஜனாதிபதியாக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டதுதான் நாம் கேள்விப்படும் 'The Beast' எனப்படும் லிமோசின். இந்த வாகனம் ஜனாதிபதிக்கு எப்போதும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. 

வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்:

'The Beast' நீங்கள் நினைப்பது போன்ற ஒரு சராசரி லிமோசின் வாகனம் அல்ல. இது பல விதமான அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வாகன கவசம். இதன் குறிப்பிட்ட அம்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். 

  1. கவச வெளிப்புறம் : இந்த காரின் வெளிப்புறத்தில் மிகக் கடினமான கவச முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த கவசமானது தோட்டாக்கள் மற்றும் ரசாயனத் தாக்குதல்களைக் கூட தாங்கும். ஜன்னல்கள் பல அடுக்குகளால் உருவாக்கப்பட்ட, குண்டு துளைக்காத அளவு தடிமனான கண்ணாடிகளால் ஆனது. 

  2. இரசாயனத் தாக்குதல்களை தாங்கும் திறன் : இந்த வாகனத்தில் அதிபர் ஏறி அமர்ந்ததுமே, காற்று கூட புகாத வகையில் சீல் செய்யப்பட்ட வாகனமாக இது மாறிவிடுகிறது. இதனால் ரசாயனத் தாக்குதலாலும் அதிபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதில் தானியக்க ஆக்ஸிஜன் கருவியும் பொருத்தப் பட்டுள்ளது. 

  3. ரன் ஃபிளாட் டயர்கள் : இதில் அதிக வலுவூட்டப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை டயர்கள் பஞ்சர் ஆனாலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் ஜனாதிபதி தப்பிப்பதை இது உறுதி செய்கிறது. 

  4. தகவல் தொடர்பு : இந்த வாகனத்தை ஒரு 'ரோலிங் கம்யூனிகேஷன் ஹப்' என்று தான் சொல்ல வேண்டும். இதில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் பாதுகாப்பான இன்டர்நெட் வசதி போன்ற மேம்பட்ட பாதுகாப்பான தகவல்தொடர்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி, உலகெங்கிலும் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ள முடியும். 

  5. ஆயுதங்கள் : தற்காப்புக்காக இந்த வாகனத்தில் ஆயுதங்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தாக்குபவர்களை எதிர்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளும் காரில் இருப்பது கூடுதல் சிறப்பாகும். 

  6. அதிக எடை : இதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகப்படியான அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு கவசம் காரணமாக, The Beast நாம் நம்ப முடியாத அளவிற்கு அதிக எடை கொண்டதாகும். இதன் எடை 15,000 முதல் 20000 பவுண்டுகள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு எடையை இயக்க சக்தி வாய்ந்த இயந்திரம் தேவைப்படும் என்பதால், 650 குதிரைத்திறன் (Horse power) கொண்ட டீசல் என்ஜின் இதில் பயன்படுத்தப்படுகிறது.

இத்தனை சிறப்புகளையும் தன்னுள் வைத்துள்ள தி பீஸ்ட், அதிபரின் பாதுகாப்பு மற்றும் சொகுசான பயணத்தையும் உறுதி செய்கிறது. இதை ஒரு போக்குவரத்து வாகனம் என்று சொல்வதைவிட, ஒட்டுமொத்த பாதுகாப்புக் கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் ஜனாதிபதி பயணித்தபடியே வணிகத்தை நடத்தலாம், விளக்கங்களைப் பெறலாம் மற்றும் தேவையான மிக முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம். இந்த வாகனத்தைச் சுற்றி பாதுகாப்பாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு வல்லுனர்களின் வாகனங்கள் போன்றவை எப்போதும் இருக்கும். 

உலகின் மிக முக்கியத் தலைவரை பாதுகாப்பதென்பது அத்தனை சாதாரண விஷயமா என்ன?

‘த பீஸ்ட்’ இருக்க பயம் ஏன்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com