மின்சார வாகன உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் வகையில் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் பேட்டரியை சீனாவைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த பேட்டரியில் 10 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 400 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது மின்சார வாகனத்தினுடைய தேவை அதிகரித்து வருகிறது. இதனால் மின்சார வாகன உற்பத்தி சர்வதேச சந்தையில் முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது. உலகின் மிகப்பெரிய வர்த்தகமாக மாறி இருக்கக்கூடிய மின்சார வாகன விற்பனையை மேலும் அதிகரிக்க புதிய புதிய கண்டுபிடிப்புகளை மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு மக்களை பெருமளவில் மின்சார வாகனத்தை நோக்கி நகர காரணமாக மாறி இருக்கிறது.
இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த கன்டெம்பரரி ஆம்பெரெக்ர் டெக்னாலஜி என்ற நிறுவனம் மின்சார வாகனத்திற்கு தேவையான பேட்டரியில் மிகப்பெரிய மாறுதலை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய பேட்டரிக்கு சொன்க்சிங் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் 10 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 400 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றி பயன்படுத்தினால் 700 கிலோமீட்டர் தூரம் வரை பயன்படுத்தும் வகையில் இந்த புதிய சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களுடைய அவசரத் தேவையை உணர்ந்தும், மேலும் வாகன பேட்டரிக்கு சார்ஜ் செய்ய காலதாமதம் ஏற்படுவதை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிகிறது. மேலும் இது 4 சி காப்பர், எல் எஃப் பி பேட்டரி வகையாகும். லித்தியம் அயன் பேட்டரியின் பகுதியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி மூலம் மின்சார வாகனத்தின் விற்பனை மற்றும் தேவை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை நடப்பாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அந்த நிர்வணம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேலும் இந்த பேட்டரியை விற்பனை செய்ய உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சீனாவை சேர்ந்த அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.