இந்திய மக்களை அச்சுறுத்தும் வீடியோ, ஆடியோ அழைப்பு மோசடி. எப்படி தப்பிக்கலாம்?

இந்திய மக்களை அச்சுறுத்தும் வீடியோ, ஆடியோ அழைப்பு மோசடி. எப்படி தப்பிக்கலாம்?

ப்போதெல்லாம் மக்கள் பொதுவாகவே தங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் அல்லது வெளிநாட்டில் உள்ள நெருங்கியவர்களிடம் பேசுவதற்கு வீடியோ அழைப்புகளையே தேர்வு செய்கிறார்கள். அப்படி பேசும்போது அந்த நபரின் முகம் குரல் மற்றும் சுற்றி இருக்கும் விஷயங்களையும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் வீடியோ அழைப்பின்போது வித்தியாசமான பின்னணி, வீடியோவின் அளவு, வீடியோவின் தரம், ஏதாவது வாட்டர் மார்க் போன்றவற்றை நீங்கள் பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம்? ஒருவேளை அது உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஸ்கேமர்களின் அழைப்பாக இருக்கலாம். 

வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவானது, உலகளவில் அப்பாவி மக்களின் பணத்தை மோசடி செய்பவர்களுக்கு உதவியாக இருக்கிறது. Deep Fake என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய, Ai வீடியோ அழைப்பு மூலமாக மோசடி செய்பவர்கள் தன் கைவரிசையை காட்டுகின்றனர். சமீபத்தில் கூட இதே போன்ற ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது. 

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய நண்பராகக் காட்டி, அவரிடமிருந்து 5 கோடி ரூபாயை ஒருவர் திருடி இருக்கிறார். இதில் திருடப்பட்ட பணத்தின் பெரும் பகுதியை மீட்டெடுத்து, மீதமுள்ள தொகையை கண்டுபிடிக்க விடாமுயற்சியுடன் போலீசார் உழைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து சீனா இத்தகைய தொழில்நுட்பத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட பாதுகாப்பை வழங்குவதற்காக புதிய விதிகளையும் அமல்படுத்தியது. 

எனவே போலி வீடியோ அழைப்பை எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. போலியான தொடர்பு எண், போலியான பெயர்கள், வழக்கத்திற்கு மாறான பின்னணி போன்ற சிக்கல்களைத் தவிர்க்க திருடர்கள் சில தந்திரங்களைப் பயன்படுத்தினாலும், ஒரு சில விஷயங்களை அவர்களால் ஒருபோதும் மாற்ற முடியாது. 

வீடியோ தரம்: பொதுவாகவே போலியாக வீடியோ காலில் வந்து ஏமாற்ற நினைப்பவர்களின் வீடியோ தரம் மோசமாகவே இருக்கும். இணையத்தில் ஒருவரது முகம் போலியாக சிமுலேட் செய்யப்பட்டு வீடியோவாக வருவதால் அதன் தரம் மோசமாக இருக்கும்.  

அழைப்பவரின் தொடர்புத் தகவல்: ஒருவர் உங்களுக்கு வீடியோ அழைப்பு செய்கிறார் என்றால், உங்களுக்கு தெரிந்த எண்ணிலிருந்து வந்தாலும் அதை ஒருமுறை சரியானதா என்று உறுதி செய்துகொள்வது நல்லது. உண்மையிலேயே அது உங்களுக்கு தெரிந்தவரின் எண் தானா? நாம் நமது செல்போனில் சேமித்து வைத்துள்ள பெயர் சரியாக வருகிறதா? போன்றவற்றை சரிபார்க்க வேண்டும். உங்களுக்கு தெரிந்தவர்களே சிலர் இதுவரை எந்தவித வீடியோ காலும் செய்திருக்க மாட்டார்கள். அதுபோன்ற நபரிடமிருந்து திடீரென வீடியோ அழைப்பு வந்தால், சற்று யோசித்து செயல்படுவது நல்லது. 

வீடியோவின் அளவு: ஒரு நபர் போலியான வீடியோ அழைப்பு செய்தால், பெரும்பாலும் அவர்கள் வெப்கேம் தான் பயன்படுத்துவார்கள். அப்படி அதிலிருந்து வீடியோ கால் செய்யும்போது, செல்போனில் வீடியோ ரிசல்யூஷன் வடிவம் மாற்றிக் காட்டப்படும். அப்படி உங்களுக்கு வீடியோ அளவில் வித்தியாசங்கள் தெரிந்தாலும் கவனமாக இருங்கள். எனவே, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோசடிகள் அதிகம் நடப்பதால், ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக வீடியோ அல்லது குரல் அழைப்புகளின் போது சற்று எச்சரிக்கையாகவே இருங்கள். 

இதுபோன்ற மோசடிகளில் 83 சதவீத இந்தியர்கள் தங்கள் பணத்தை இழுந்திருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com