
நாசா விஞ்ஞானிகள் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி தொலைதூரத்திலுள்ள K2 18b என்ற எக்ஸோ பிளானட்டைப் பார்த்தபோது, அதில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே அந்த கிரகத்தில் கடல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
K2 18b என்ற கிரகம் பூமியை விட 8.6 மடங்கு பெரியது எனவும், மேலும் அதன் மேற்பரப்புக்கு அடியில் கடல் இருக்கலாம் என்றும், அந்த கிரகத்தில் நிறைந்துள்ள ஹைட்ரஜன் வளிமண்டலத்தைக் கொண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் K2 18 என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இந்த நட்சத்திரத்தில் இருந்து நீரை நீராவியாக்கப் போதுமான ஒளியை இது பெறுகிறது.
லியோ என்ற விண்மீன் தொகுப்பில் இருக்கும் இந்த கிரகம், பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இதை ஒரு "ஹைசியன் கிரகம்" என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது ஹைட்ரஜன் வளிமண்டலத்துடன் வெப்பமான நீரால் மூடப்பட்ட கிரகம் என்பதாகும். எனவே விஞ்ஞானிகள், இத்தகைய ஹைசியன் கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களை தேடுவதற்கு உகந்தது என நம்புகின்றனர்.
இதுகுறித்து நாசா கூறியுள்ளது என்னவென்றால், " மனிதர்கள் வேறு கிரகங்களில் வாழ முடியுமா என்பதற்கான தேடலில் எங்களுடைய ஆய்வு முடிவுகள் பல விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. பல காலமாகவே எக்ஸோபிளானட்களில் உயிர் வாழ்வதற்கான தேடலை நாசா முதன்மை கவனமாகக் கொண்டுள்ளது. எனவே இத்தகைய ஹைசியன் கிரகங்கள் எங்களின் ஆய்வுகளுக்கு மிகவும் உகந்தவை" எனக் கூறியுள்ளது.
எனவே அந்த கிரகத்தில் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் அமோனியாவின் மூலக்கூறுகள் தென்படுவதால், ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தின் கீழ் ஒரு நீர் கடல் மறைந்திருக்ககூடும் என நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த கிரகத்தில் டை மெத்தில் சல்பைட் எனப்படும் மூலக்கூரின் இருப்பையும் அந்த ஆய்வு ஆவணப்படுத்துகிறது. இதுதான் நம்முடைய கிரகத்தில் உயிருக்கு ஆதாரமாக இருப்பதால், K2 18b கிரகத்திலும் உயிர் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
ஆனால் இவை அனைத்துமே அனுமானம்தானே தவிர உறுதியானது அல்ல. மேலும் இதன் உண்மைத் தன்மையை வெப் தொலைநோக்கி பயன்படுத்தி மேற்கொள்ளும் ஆய்வுகளில் உறுதி செய்ய முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.