
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியின் மூலமாக, விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுக்கு பல புதிய விஷயங்கள் தெரியவந்துள்ளது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் தனது செயற்கைக்கோளை இறக்கிய முதல் நாடாக இந்தியாவை தடம் பதிக்கச் செய்த சந்திரயான் 3 விண்கலம், தற்போது அதன் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் அனைத்தையும் மிஞ்சி பல புதிய பரிசோதனைகளை செய்து வருகிறது.
சமீபத்தில் விக்ரம் லாண்டரை 40 செண்டி மீட்டர் வரை மேலே உயர்த்தி, வேறு இடத்தில் தரையிறக்கும் பரிசோதனை முயற்சியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. நம் பூமியில் ஒரு பந்தை மேலே தூக்கி எறிந்தால் அது கீழே வந்து எப்படி விழுமோ, அதுபோல ஒரு நிகழ்வை இஸ்ரோ செய்து பார்த்தது. இதில் பூமியைப் போலவே நிலவின் புவியீர்ப்பு விசை காரணமாக பரவலையப் பாதையில் பயணித்து மீண்டும் கீழே இறங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரகியான் ரோவர் அதன் வேலையை முடித்துக்கொண்டு உறக்க நிலையில் உள்ளது. ஏனென்றால் ஆய்வு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு நிலவில் சூரிய வெளிச்சம் இல்லாமல் எல்லாமே பனியால் உறைந்துவிடும். இந்த நிலையில் அவற்றின் சாதனங்களும் பனியால் உறைந்து செயலிழந்துவிடும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இருப்பினும் இது வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி நிலவில் சூரிய ஒளி படும்போது மீண்டும் செயல்படுமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே. அவை தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன. இதையடுத்து அவற்றின் மீதமுள்ள ஆயுட்காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிந்த வரையிலான பரிசோதனைகளைச் செய்ய முயற்சிக்கலாம். செப்டம்பர் 22 ஆம் தேதி ரோவர் இருக்கும் இடத்தில் மீண்டும் சூரிய ஒளி வந்த பிறகு, அது இயங்குவதற்கான வாய்ப்பு மிகச் சிறியதாகவே இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே கூறியுள்ளது.
ஒருவேளை சூரிய ஒளி பட்டதும் அவை மீண்டும் இயங்கினாலும், ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே அவற்றால் தொடர்ந்து இயங்க முடியும். அப்படி அது மீண்டும் இயங்குவதே மிகப்பெரிய சாதனைதான். ஏனென்றால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளைத் தாண்டி இயங்குவது சாதனை தானே? இதன் மூலமாக கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பை இஸ்ரோ நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.