தலைக்காவேரி!

தலைக்காவேரி!

டிக்கேரியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் தலைக்காவேரியை நாம் அடைந்து விடலாம்.  நம் வாழ்நாளில் காசியையும் இராமேஸ்வரத்தையும் பார்க்க வேண்டும் என்று நாம் எப்படி நினைத்திருக்கிறோமோ அப்படியே இந்த தலைக் காவேரியையும் காண வேண்டும்.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது.

ஸ்ரீ பாகண்டேஸ்வரா ஆலயம்

கூர்க்கிலிருந்து தலைக்காவேரிக்குச் செல்லும் வழியில் ஒரு அற்புதமான சிவன் கோயில் அமைந்துள்ளது.  அதன் பெயர் ஸ்ரீ பாகண்டேஸ்வரா ஆலயமாகும்.   கேரளபாணியில் அமைந்துள்ள இந்த கோயிலில் ஸ்ரீபாகண்டேஸ்வரா லிங்க ரூபத்தில் காட்சிஅளிக்கிறார்.    மேலும் இக்கோயிலில் ஸ்ரீசுப்ரமணியசுவாமி, விநாயகர் போன்ற கடவுள்களுக்குத் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.  கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.

தலைக்காவேரி

லைக்காவேரி ஓர் அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும்.  காரில் பயணித்தால் கூர்க்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நாம் தலைக்காவேரியை அடைந்து விட முடியும்.   பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1276 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புனித பூமி தலைக்காவேரி.  காவிரி ஆறு இந்த இடத்தில்தான் உற்பத்தியாகிறது.  இந்த பகுதியில் ஒரு குளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.   இதற்கு அருகில் மூன்று அடிக்கு மூன்று அடி அளவில் ஒரு சிறிய அமைப்பு காணப்படுகிறது.  இதுதான் காவிரி ஆறின் உற்பத்தி ஸ்தலம்.  இந்த பகுதியில் உற்பத்தியாகும் நீர் பூமிக்கு அடியில் கீழிறங்கி காவிரி ஆறாக வெளிப்படுகிறது.  இந்த பகுதியின் மேற்பகுதியில் அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதியன்று இந்த பகுதியில் இருந்து நீர் உற்றாக பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம்.   இதை கண்டு தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கே கூடுகிறார்கள்.   இங்கிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாகமண்டலா என்ற பகுதியில் காவிரி, கனகே, சுஜ்யோதி என்ற மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன.   அகத்திய முனிவர் தன் கமண்டலத்தில் காவிரி நதியை அடக்கி வைத்திருந்ததாகவும் விநாயகர் காக்கை உருவத்தில் வந்து முனிவர் தவத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அந்த கமண்டலத்தை சாய்த்து காவிரியை மலையிலிருந்து ஓட வைத்ததாகவும்  புராணக்கதை கூறுகிறது.

தலைக்காவேரி உற்பத்தி ஆகும் இடத்திற்கு வலது புறத்தில் சுமார் நூறு படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் ஒரு வியூ பாயிண்ட் உள்ளது.    இந்த இடத்தில் நின்று கொண்டு இந்த பகுதியின் முழு இயற்கை வன அழகினைக் கண்டு ரசிக்கலாம்.

தலைக்காவேரியிலிருந்து மடிக்கேரி வழியாக மைசூரு நோக்கி பயணிக்கும் போது வழியில் நாம் காண வேண்டிய மற்றொரு சுற்றுலாத்தலம் காவேரி நிசார்கதாமா ஆகும்.

காவேரி நிசார்கதாமா

து காவேரி நதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறிய தீவு.  இந்த தீவைச் சுற்றிலும் காவேரி நதி அமைந்துள்ளது.  இந்த இடம் மைசூரு மடிக்கேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குஷார் நகர் என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அறுபத்துநான்கு ஏக்கர் அளவுள்ள அமைதியான பகுதியாகும்.  இந்த இடம் மடிக்கேரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இந்த சிறிய தீவை நகரத்திலிருந்து ஒரு தொங்குபாலம் மூலமாக இணைத்திருக்கிறார்கள்.  இந்த பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்களும் தேக்கு மற்றும் சந்தன மரங்களும் காணப்படுகின்றன.  மான் பூங்கா, முயல் பூங்கா போன்ற பூங்காக்களும் அமைந்துள்ளன.  இந்த இடத்தில் முழுமையான அமைதி நிலவுகிறது.  பூங்காவில் நாம் இயற்கை அழகையும் சிறுசிறு விலங்குகளையும் பார்த்து இரசித்துக் கொண்டே காலார நடந்து  செல்லலாம்.  யானை சவாரியும் படகுச் சவாரியும்கூட உண்டு.

புத்தர் தங்கக்கோயில்

காவேரி நிசார்கதாமாவை கண்டு களித்த பின்னர் அடுத்ததாக காண வேண்டிய இடம் குஷாலா நகருக்கு அருகில் பைலேகுப்பே என்ற இடத்தில் அமைக்கப் பட்டுள்ள புத்தர் தங்கக்கோயிலாகும். இங்கு திபெத்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பகுதிக்கு வந்தால் நாம் திபெத்தில் இருப்பதைப் போல உணருகிறோம்.  அனைவரும் அடர்த்தியான பிரௌன் மற்றும் மஞ்சள் வண்ண உடையினை அணிந்திருக் கிறார்கள்.  இங்கே திபெத்தியர்களுக்கான கல்விக்கூடமும் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளன.   இரண்டு பெரிய புத்த ஆலயங்கள் அமைந்துள்ளன.  இங்கு புத்தபிட்சுகள் தியானம் செய்கிறார்கள்.  கல்வியும் போதிக்கப்படுகிறது.  இந்த இடம் நமக்கு வித்தியாசமான உணர்வினைத் தருகிறது.

மைசூருவிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்குக் காரில் புறப்பட்டால் மேற்காணும் இடங்கள் அனைத்தையும் கண்டுகளித்து இரவு ஒன்பது மணிக்கு மைசூருவிற்குத் திரும்பி விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com