
தினசரி ஒரே மாதிரியான வாழ்க்கை சூழலில் இருந்து விடுபட்டு வெளியிடங்களுக்கு பயணம் செல்வது அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் உற்சாகமாக ஆரம்பித்த பயணம் முடிவு வரை ஆனந்தமாக இல்லாமல் சில சமயம் திடீரென்று உடல் நலத்தில் கோளாறு ஏற்படலாம். அப்போது உடனடியாக மருத்துவரிடம் சென்று பார்க்கமுடியாத நிலையில், நாம் கையேடு எடுத்துச் செல்லும் சில பொருட்கள் ஆபத்பாந்தவனாக உதவக்கூடும்.
பஸ், கார், ரயிலில் இரண்டு மூன்று நாட்கள் தொடர் பயணம் செல்லும் போது தண்ணீர் பாட்டில், எலுமிச்சம்பழம், ஓமம், நாட்டுச்சர்க்கரை, பொடி உப்பு, வீட்டில் தயாரித்த எலுமிச்சை ஜூஸ் அடங்கிய பாட்டில், திருநீற்றுப்பச்சிலை, துளசி இலைகள், இஞ்சி, கிராம்பு, சில சாக்லேட்டுகள் எடுத்துச்செல்ல வேண்டும்.
சிலருக்கு பயணத்தின்போது தலைசுற்றல், மயக்கம் வரும். உற்சாகமான பயண மனநிலையைக் கெடுத்து, உடலும் மனதும் சோர்ந்து போகும். மலைப்பிரதேசத்திற்கு செல்லும்போது நிலைமை இன்னும் மோசமாகும். இவர்கள் கையில் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து, அதை அடிக்கடி முகர்ந்து பார்த்துக்கொண்டே வந்தால், தலைசுற்றல் நிற்கும். திருநீற்றுப்பச்சிலை இலைகளையும் கசக்கி முகரலாம்.
சிலருக்கு குமட்டல் அதிகமாகி வாந்தியெடுத்து விடுவார்கள். அவர்களுக்கு எலுமிச்சை ஜூஸ் தந்து ஆசுவாசப்படுத்தலாம்.சிறிதளவு இஞ்சியை தோல் சீவி, மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொண்டு, அவ்வப்போது வாயில் போட்டு சுவைக்கவும்
திடீரென பல்வலி வந்துவிட்டால் ஒரு கிராம்பை வாயில் அடக்கிக் கொண்டால் வலி குறையும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் மயக்கம் வரும். அவர்கள் உடனடியாக ஒரு சாக்லேட் அல்லது கொஞ்சம் சர்க்கரையை சாப்பிட வேண்டும். வயிற்றுவலி, வயிறு உப்புசம் ஏற்பட்டால் ஓமத்தை சிறிதளவு வாயில் போட்டு மென்று தண்ணீர் குடிக்க வேண்டும். மிகவும் களைப்பாக இருக்கும் போது ரு டம்ளர் நீரில் சிறிது உப்பும் சர்க்கரையும் கலந்து குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும்.
பயணத்தின்போது அதிக உணவு எடுத்து கொள்ளாமல் மிதமாக சாப்பிடுவது நல்லது. கண்டிப்பாக வறுத்த, பொறித்த உணவுகள், தின்பண்டங்கள் வேண்டாம். இருக்கையில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து, நிதானமாக மூச்சை உள்ளித்து வர வேண்டும். மனதையும், உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும்.