லக்னோவை சுற்றிப்பார்க்கலாம் வாங்க!

லக்னோவை சுற்றிப்பார்க்கலாம் வாங்க!

சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் உ.பி. யின் தலைநகரான லக்னோவிற்கு சென்றிருந்தோம். என் கணவர் மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்று விட, நான் என் இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு டாக்ஸியில் லக்னோவை சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டேன். இரண்டு நாட்களில் நாங்கள் பார்த்து ரசித்த இடங்களைப் பற்றிய செய்திகள் இதோ.

1. டாக்டர் பீமராவ் அம்பேத்கர் நினைவுப் பூங்கா

கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அம்பேத்கர் பூங்கா லக்னோவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.107 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்தப் பூங்காவில் 10.6 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தால் ஆன டாக்டர் அம்பேத்கரின் மாபெரும் சிலை உள்ளது. மேலும் இங்கு பெரிய மற்றும் சிறிய சிற்பங்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.  பூங்காவின் மையப்பகுதியில் மணற்கற்களால் ஆன 34 மீட்டர் உயரமுள்ள ஸ்தூபி உள்ளது. டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பணியை சித்தரிக்கும் சிலைகள் மற்றும் சிற்பங்களால் இந்த ஸ்தூபி அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும், நூலகத்தில் அம்பேத்கரின் படைப்புகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் ஆவணங்களும் உள்ளன. பூங்காவில் ஒரு குளம் மற்றும் பல நீரூற்றுகள் உள்ளன.

2. லக்னோ விலங்கியல் பூங்கா (நவாப் வாஜித் அலி ஷா விலங்கியல் பூங்கா)

குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் மிகவும் விரும்பிப் பார்க்கும்படி இருந்தது இந்த விலங்கியல் பூங்கா. இங்கு 57 ஊர்வன, 348 பறவைகள் மற்றும் 447 பாலூட்டிகள் உள்ளன. பட்டாம்பூச்சிகளுக்கு என்றே தனியாக இருந்த  பூங்காவில் 28 வகையான பல வண்ணப் பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. வகைவகையான மீன்கள், வண்ணவண்ணப் பறவைகள், வரிக்குதிரைகள், பலவகையான மான்கள், ஆந்தைகள், சிங்கம், புலி,  சிறுத்தை  போன்ற விலங்குகளையும் கண்டு ரசித்தோம்.

இங்கு சிங்கம் மற்றும் புலியை கூண்டுக்குள் அடைக்காமல், இயற்கையான வனச்சூழலில் உலவ விட்டிருப்பது நாமே காட்டிற்கு நேரில் சென்று அவைகளைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியது. பார்வையாளர்களின் வசதிக்காக பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களும் உள்ளன. நாங்கள் நடந்தே பூங்காவை சுற்றிப் பார்த்த பின் பிரிட்டிஷ் கால விண்டேஜ் ரயிலில் காட்டை சுற்றி வந்தது மறக்க முடியாத அனுபவம்.

3. அரசு அருங்காட்சியகம்

து விலங்கியல் பூங்காவின் உள்ளேயே அமைந்துள்ளது. நான்கு தளங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிக்கூடங்களில் சமணக் கலை, இந்திய சிற்பக் கலை, தொல்லியல்,  நவாப்புகளின் கலை மற்றும் காசுகள் காட்சிக்கூடம், புத்தர், எகிப்திய, இயற்கை வரலாற்றுக் காட்சிக்கூடம், உள்ளிட்ட பல காட்சிக்கூடங்கள் உள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் கி.மு.1000த்தை சேர்ந்த  எகிப்திய மம்மி மற்றும் இறந்த உடலை வைக்கக்கூடிய ஒரு மரப்பெட்டியும் உள்ளது. செலவில்லாமல் எகிப்துக்கு சென்று வந்த திருப்தி ஏற்பட்டது.

4. இந்திரா காந்தி கோளரங்கம்

து மற்ற கோளரங்கங்களைப் போல அல்லாமல் மிகவும் வித்தியாசமான பாணியில் கட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் ஐந்து வளையங்களைக் கொண்ட  சனி கிரகத்தை போன்ற புதிய வடிவில் இருந்தது. நட்சத்திரங்கள் மின்னும்  வான்வெளிக்கு நேரில் சென்று வந்த உணர்வைத் தந்தது. இங்கு தினமும் அறிவியல் மற்றும் வானவியல் சார்ந்த 3D அனிமேஷன் காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு வகையான சாட்டிலைட்டுகளின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன.

5. கோமதி ஆற்றங்கரை பூங்கா

க்னோவில் உள்ள மற்றொரு சிறந்த சுற்றுலாத் தலமாக கோமதி ஆற்றங்கரைப் பூங்கா உள்ளது. இங்குள்ள பசுமையான செடிகள், தாவரங்களைப் பார்த்தவாறு நடைப்பயணம் செய்தது அலாதியான அனுபவம்.  உள்ளூர்க் குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்டும் பிரத்யேக தளங்கள், மற்றும் ஓடும் பாதைகள், இரவு நேர இசை நீரூற்றுகள், மற்றும் படகு சவாரி போன்றவற்றால் இந்தப் பூங்கா களைகட்டியது.

6. ரூமி தர்வாசா

238 ஆண்டுகளுக்கு முந்தைய ரூமி தர்வாசா, லக்னோவின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான கட்டிடங்களில் ஒன்று. இதன் கம்பீரமான அறுபது அடி உயர நுழைவாயில் பார்ப்பதற்கே அவ்வளவு அழகு. துருக்கியில் உள்ள கான்ஸ்டாண்டிநோபிளின் உள்ள நுழைவாயிலை ஒத்த அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது.

7. உசைனாபாத் மணிக்கூண்டு கோபுரம்

221 அடியில் 67 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கும் இந்த மணிக்கூண்டு கோபுரம் அழகிய விக்டோரிய மற்றும் முகலாய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.  கோபுர உச்சி அழகிய குவிமாட அமைப்பில் உள்ளது. தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக்காலங்களில் இந்த மணிக்கூண்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்களை கவரும் விதத்தில் இருக்கும் என்று அறிந்து கொண்டோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com