தன்னம்பிக்கையை கண்டறிய உதவும் Solo Travel.
தனியாக பயணம் செய்வதென்பது ஒரு நம்ப முடியாத சாகசமாகும். இதன் மூலம் நாம் புதிய இடங்களுக்குச் செல்கிறோம் என்பதைத் தாண்டி அதிக அனுபவத்தைப் பெற முடியும். இது உங்களின் சுயத்தைக் கண்டறிய பெரிதும் பயன்படும். அதாவது நீங்கள் உங்களுடைய Comfort Zone-ல் இருந்து வெளியேறி, பல விஷயங்களைச் செய்ய இது உங்களை அனுமதிக்கும்.
சுயமாக சிந்திக்கலாம்:
தனியாக பயணம் செய்வது முற்றிலும் உங்களுடைய சுய சிந்தனையின் அடிப்படையிலேயே இருக்கும் ஒன்றாகும். உதாரணத்திற்கு நீங்கள் 4 பேர் கொண்ட குழுவுடன் வெளியே செல்கிறீர்கள் என்றால், அதில் பல தருணங்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக சிந்தித்து முடிவெடுப்பது அரிதானதாகும். ஆனால் தனிமையான பயணத்தில், நீங்கள் எப்படி செல்லப் போகிறீர்கள்? எங்கு தங்கப் போகிறீர்கள்? என்ன சாப்பிடப் போகிறீர்கள்? எப்படி உங்களை தற்காத்துக் கொள்ளப் போகிறீர்கள்? என்பது பற்றிய எல்லா முடிவுகளையுமே நீங்களே சிந்தித்து எடுக்க வேண்டியதாக இருக்கும். இது உங்களின் உண்மையான நுண்ணறிவு மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்:
தனியாக பயணம் செய்வது ஒருவரின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும். ஏனெனில் பல சமயங்களில் நம்முடைய பல முடிவுகள் பிறராலயே எடுக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய பயணத்தில் முழுக்க முழுக்க அனைத்திலும் உங்களுடைய சொந்த பங்களிப்பு இருப்பதால், இது உங்களின் மன தைரியத்தை அதிகரித்து, வாழ்வில் நீங்கள் சோகமாக இருந்தாலும் அதை ரீசார்ஜ் செய்து புத்துணர்ச்சி பெற உதவியாய் இருக்கும்.

படைப்பாற்றல் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கும்:
நீங்கள் தனியாக பயணம் செய்யும்போது அது கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்குகிறது. ஏனென்றால் தனியான பயணத்தில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனவே அத்தகைய தருணங்களில் உங்கள் மனம் ஒரு சர்வைவல் மோடுக்கு சென்றுவிடும். கவனச் சிதறல்களின்றி புதிய அனுபவங்களில் உங்களை புகுத்திக்கொள்வது மூலம், உங்கள் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.
உள்ளுணர்வை நம்புதல்:
தனியாக பயணம் செய்யும்போது பல நேரங்களில் நாம் நம்முடைய உள்ளுணர்வை நம்ப வேண்டும் என்பதை அது கற்றுத்தருகிறது. இது தொடக்கத்தில் பயம் ஏற்படுத்துவதாக இருந்தாலும், இதன் உண்மைத் தன்மையை நீங்கள் புரிந்துகொண்டால், நீங்கள் மன உறுதியடைய இது வழிவகுக்கும்.
இறுதியில், வாழ்க்கை ஒரு பயணமே தவிர, நாம் முன்கூட்டியே நிர்ணயம் செய்த இலக்கல்ல. நீங்கள் உங்கள் வாழ்வில் உன்னதமான விஷயத்தை அறிய விரும்பினால், ஒருமுறையாவது தனியாக பயணம் செய்து பாருங்கள். அதாவது நான் சொல்வது தனியாக வேலைக்கு பயணம் செய்வதல்ல. முற்றிலும் புதுமையான ஓர் இடத்திற்கு தனியாக ஒரு சோலோ டிராவல் செய்து பாருங்கள். நீங்கள் செல்லும்போது இருந்த மனநிலை, திரும்பி வரும்போது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.