பிள்ளைகளை அவசியம் அழைத்துச் செல்ல வேண்டிய 7 இடங்கள்!

குழந்தைகளை பூங்கா, ஓட்டல், சினிமா, தியேட்டர், பீச், பிக்னிக், தீம் பார்க், டூர் என தவறாமல் அழைத்துச் செல்கிறோம். இது போன்ற இடங்களில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பர். விரும்பிய உணவுகளை உண்டு, விளையாடி மகிழ்ந்து, பிடித்த காட்சிகளை கண்டு களிப்பர். ஆனால், வாழ்வின் இன்பமான நிலையை மட்டுமே அவர்கள் அனுபவித்தால் போதுமா? கீழ்க்கண்ட இடங்களுக்கும் அவர்களை அடிக்கடி அழைத்துச் சென்று நடைமுறை வாழ்வின் நிதர்சனத்தை புரிய வைப்பதும் பெற்றோரின் கடமைதானே!
பிள்ளைகளை அவசியம் அழைத்துச் செல்ல வேண்டிய 7  இடங்கள்!

1. கோவில்

ன்மீக உணர்வை குழந்தைகளின் மனதில் ஆழமாக விதைப்பதில் ஆலய தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தனக்கு நேரும், துன்பங்களை சோதனைகளை எதிர்கொள்ள பிள்ளைகளுக்கு ஆன்ம பலம் அவசியம். கடவுள் நம்பிக்கையும் வழிபாடுகளும் அவர்களை நேர்வழியில் செலுத்தும். குறைந்தது மாதம் ஒரு முறையோ இரண்டு முறையோ அவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைப்பது நன்று. 

2. உறவினர் வீட்டு விசேஷங்கள்

னிக் குடும்பங்களும் ஒற்றைப் பிள்ளைகளும் பெருகிவிட்ட நிலையில் அம்மா அப்பாவின் உடன் பிறந்த சகோதர சகோதரிகளையே அரிதாகத்தான் சந்திக்கின்றனர் பிள்ளைகள். சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, பெரியம்மா பெரியப்பா என்ற நெருங்கிய உறவுகளின் பாசம், நிறைய பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. ஒன்றுவிட்ட மாமா, சித்தப்பா போன்ற உறவுகளை எல்லாம் சில பிள்ளைகளுக்கு யார் என்றே தெரிவதில்லை. அவர்களின் வீட்டு விசேஷங்களுக்காவது பிள்ளைகளை தவறாமல் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் உறவு முறை பாராட்டி வளர பிள்ளைகள் கற்றுக் கொள்வர். தனக்கு கூடப்பிறந்த அண்ணன், தம்பி, தங்கை இல்லாதபோது சித்தப்பா, பெரியப்பாவின் வாரிசுகளை தங்கள் சகோதர சகோதரிகளாக பாவித்து பாசம் செலுத்த ஏதுவாக லீவு நாட்களில் பிள்ளைகளை உறவினர் வீட்டிற்கு அழைத்து செல்லலாம்.

3. நூலகம்

ல்டி பிளக்ஸில் சினிமா பார்க்க பிள்ளைகளை அழைத்துச் சென்று டிக்கெட்டிற்கும், தின்பண்டங்களுக்கும், ஆயிரக்கணக்கில் செலவழிக்கின்றனர் பெற்றோர். அதேபோல மால்கள், ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று கணக்கு வழக்கு இல்லாமல் செலவழிக்கின்றனர். ஆனால் நாடு முழுக்க, சிறு கிராமங்களில் கூட அமைந்திருக்கும் நூலகத்திற்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் மிகக் குறைவு என்பது வருத்தமான விஷயம். வெறுமனே பாடப்புத்தகத்தை மட்டும் படித்து மதிப்பெண் பெறும் இயந்திரமாக குழந்தைகளை எண்ணாமல் கதைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை, பொது அறிவு, அறிவியல், வரலாற்று  நூல்களை வாசிக்கும் பழக்கத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். புத்தகம் படித்து வளரும் குழந்தை மற்ற குழந்தைகளிலிருந்து தனித்து தெரியும். அதன் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். புத்தகங்களை தோழனாகக் கொண்ட குழந்தை வாழ்வில் தோற்பதே இல்லை. மிக சுலபமாக தான் நினைத்ததை சாதிக்கும். இதில் சந்தேகமும் இல்லை!

4. வங்கி, தபால் அலுவலகம்

ற்போது ஆன்லைன் பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்த பின்பு வங்கிக்கு மக்கள் செல்வது குறைந்துவிட்டது. ஆனாலும் அவ்வப்போது பிள்ளைகளை வங்கிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளின் படிப்பிற்காக தந்தை வங்கியில் கடன் வாங்கி இருக்கலாம். வயது முதிர்ந்த பெரியவர்கள் பென்ஷன் வாங்க அங்கே காத்திருப்பர். கல்விக் கடன், நகைக் கடன், விவசாயக் கடன் வாங்க வரும் நபர்களை பார்க்கும் போதும், கடன் பெறுவதற்கான நடைமுறை சிக்கல்கள், கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் இதையெல்லாம் பார்க்கும்போது, பணம் அவ்வளவு எளிதில் நமக்கு கிடைத்து விடாது, அதை சம்பாதிக்க பெரும் முயற்சியும் படிப்பும் அவசியம் என்ற எண்ணம் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அதே போல தபால் அலுவலகங்களிலும் அவர்கள் பார்த்து கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்கள் உண்டு.

5. மளிகை, காய்கறிக் கடைகள்

ங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் என குழந்தைகளின் உணவுப் பழக்கம் மாறிவிட்டதால் அவர்களுக்கு நிறையக் காய்கறிகளின் பெயர்கள்கூட தெரிவதில்லை. அவற்றில் இருக்கும் சத்துக்களின் அருமையும் புரிவதில்லை. அவர்களை காய்கறி கடைகளுக்கு அழைத்துச் சென்று அவற்றின்  பெயரையும் சத்துக்களையும் எடுத்துச் சொல்லி அவற்றை எப்படி பார்த்து வாங்குவது என்பதையும் கற்றுத் தர வேண்டும். காய்கறிகளின் விலையைக் கேட்கும் போது இத்தனை பணம் போட்டு வாங்கும் காய்களை இனி சாப்பிடாமல் வீணாக்கும் பழக்கத்தை கைவிடும் எண்ணம் தோன்றும். அதேபோல மளிகை கடைகளுக்கும் அழைத்துச் சென்று தரமான மளிகை பொருட்களை எக்ஸ்பைரி டேட்  பார்த்து வாங்குவது எப்படி என்ற பிராக்டிகல் அறிவை புகுத்த வேண்டும். வீட்டில் இருந்து கிளம்பும்போது வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலை அவர்களை விட்டே எழுதச் சொல்லவேண்டும். லிஸ்ட் பார்த்து வாங்குவதால் தேவையில்லாத பொருட்களை வாங்கி பணத்தை வீணடிக்கக் கூடாது, நேரமும் விரயமாகாது என்ற பாடத்தையும் குழந்தை அறிந்துகொள்ளும்.

6.  மருத்துவமனை

பொதுவாக உறவினர்களோ நண்பர்களோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு பெரியவர்கள் மட்டுமே செல்வது வழக்கம். ஆனால் நோயுற்றவர்களைப் பார்க்கச் செல்லும்போது அவர்களையும் அழைத்துச் செல்லலாம். நோயாளிகளையும், அங்கு பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், நோயாளிகளுக்கு உடனிருந்து உதவும் அவரது குடும்பத்தார், உறவினர்களைப் பார்க்கும் குழந்தைகள் சேவை மனப்பான்மையைக் கற்றுக்கொள்ளும். ஆரோக்கியத்தின் அருமை புரியும். பின்னாட்களில் தன் வீட்டுப் பெரியவர்களை அக்கறையுடன் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வார்கள்.

7. ஆதரவற்றோர் இல்லம்

திலும் நிறைவுறாத்தன்மை எனும் குணம் தற்காலக் குழந்தைகளிடம் விரவிக் கிடக்கிறது. எத்தனை தான் வாங்கிக் கொடுத்தாலும் எத்தனை வசதிகளை செய்து கொடுத்தாலும் திருப்தி அடையாத குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வருடத்துக்கு இரு முறையாவது கூட்டிச் செல்ல வேண்டும். தனக்கு அன்பு காட்டவும், வேண்டியதை வாங்கித் தரவும் பெற்றோர் இருக்கின்றனர் என்ற நன்றிஉணர்வு எழும். மேலும் இல்லாத எளியோருக்கு உதவுவது நம் கடமை என்ற எண்ணத்தையும் அவர்கள் மனதில் ஆழ விதைக்க முடியும். இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான பொருள்களை வாங்கி அவர்கள் கையாலேயே  கொடுக்க சொல்ல வேண்டும். சகமனிதர்கள் மீதான பரிவும், அக்கறை, கருணை போன்ற உணர்வுகளும் பெருகும்.

சமூகத்தில் வெற்றியாளராக வலம் வருவதை விட, மனதில் ஈரமுள்ள, நேசமுள்ள நெஞ்சத்திற்கு சொந்தக்காரர்களாகட்டும் நம் பிள்ளைகள்           

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com