நீண்ட நாள் கனவு... தேசிய நல்லாசிரியர் விருது! மாலதி டீச்சர் கூறுவது என்ன?

ஆசிரியர் தினம்: செப்டம்பர் 05
நீண்ட நாள் கனவு... 
தேசிய நல்லாசிரியர் விருது!  
மாலதி டீச்சர் கூறுவது என்ன?

ந்த ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார் பட்டதாரி அறிவியல் ஆசிரியை மாலதி. தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர், அரசு மேனிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்தத் தேசிய நல்லாசிரியர் விருது என்பது, தன்னுடைய நீண்ட நாள் கனவு என்கிறார், கடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணி புரிந்து வரும் மாலதி டீச்சர்.

மாலதி டீச்சர்
மாலதி டீச்சர்

கல்கி ஆன்லைன், மங்கையர் மலர் வாசகர்களுக்காக
அவர் பகிர்ந்துகொண்டதிலிருந்து...

“2008 ல் திருப்பூர் பெருமாநல்லூர் அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியைப் பணிக்கு வந்து சேர்ந்தேன். மூன்றாண்டுகள் அங்கு ஆசிரியையாக இருந்தேன். பின்னர் தென்காசி ஐசிஐ அரசுப் பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினேன்.  2௦12லிருந்து வீரகேரளம்புதூர் அரசு மேனிலைப்பள்ளியில் தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அந்த நாட்களில்தான் எனக்கு நாமும் தேசிய நல்லாசிரியர் விருது பெற வேண்டும் என்கிற பெருங்கனவு வந்துகொண்டே இருந்தது. அந்தப் பெருங்கனவு 2௦23ல் நனவாகியுள்ளது” என்கிறார் ஆசிரியை மாலதி.

பள்ளியில் எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடங்கள் நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் இவர் ஆற்றிய பணியானது ஆசிரியர்கள் பலருக்கும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்துள்ளது. அது மட்டுமல்ல அந்த இடைவெளி நாட்களில் (பல மாதங்கள்) பள்ளிகளில்  பிள்ளைகளுக்கு கற்றலில் குறைபாடும், கற்றுக் கொள்வதில் தேக்கமும் வந்து விடக்கூடாது என்று ஆசிரியை மாலதி, பல கடினமான முயற்சிகளை மேற்கொண்டு அதில் பெரும் வெற்றியும் கண்டு சாதித்துள்ளார்.

“2௦2௦ ஏப்ரல் மாதத்தில் இருந்து இணைய மொழி என்கிற புது வகையில் பிள்ளைகளுக்கு இணைய வழி வகுப்புகள் தொடங்கினேன். அதில் நிறைய சிரமங்கள். எல்லோர்க்கும் ஆண்ட்ராய்டு மொபைல் இல்லை என்பது முதல் சிரமம். மொபைல் உள்ள மாணவர்களில் ஒருவரோடு இன்னொருவர் இணைக்கத் தொடங்கினோம். அதிலும் நடைமுறையில் பல கஷ்டங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட்டன. எங்களுக்கும் பல சிரமங்கள் ஏற்பட்டன. பின்னர் ஒருவழியாக அதனையும் சமாளித்து சமன் நிலைக்குக் கொண்டு வந்தோம்.

அப்போதுதான் எங்களுக்கும் தெரிந்தது. இணைய வழியாகக் கற்றுத் தருவதில் ஆசிரியப் பணிகளில் இருப்பவர்களுக்கும் பெரும் பின்னடைவு இருக்கிறது என்பது. இணைய வழி கல்வி போதித்தலில் இன்னும் எவ்விதமாகச் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று, நானும் வெளியில் சென்று கற்று வந்தேன். அதன் பின்னரே ஆசிரியர்களுக்கு என தனியாக இணைய வழி கல்வி போதித்தல் எவ்விதம் என்று இணைய வகுப்புகள் நடத்தினோம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி நேரத்தை விட நாங்கள் அதிக நேரம் உழைத்தோம். நாங்கள் என்றால் இதில் நான் மட்டுமல்ல. சக ஆசிரியர்கள், இணைய வழி கற்றலில் பாடங்கள் பார்த்தும் கேட்டும் உணர்ந்தும் பயின்ற மாணவ மாணவியர்கள் அனைவருமாக. இணைய வழி கற்றலில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பலருக்கும் நேர காலமே கிடையாது. அந்த அளவுக்கு அவர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் எங்களுடன் இணைந்து பயணித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். 15.1௦.2௦21 முதல் 2௦22 மார்ச் வரை 132 நாட்களில் தமிழ்நாடு முழுவதுமாக சுமார் 12,௦௦௦ மாணவ மாணவியர்கள் இணைய வழி கற்றலில் இணைந்து கற்றுள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கின் 22௦ நாட்களில் தமிழ்நாடு முழுவதுமாக 25,௦௦௦த்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளும், அதே காலக்கட்டத்தில் 2௦,௦௦௦த்துக்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருமக்களும் அதில் மிக உவகையுடன் பங்கேற்றிருந்தனர்” என்கிறார் ஆசிரியை மாலதி.

“2௦21ல் மாநில நல்லாசிரியர் விருது பெற்றேன். எனக்கு அது மிகவும் உற்சாகத்தைத் தந்தது. வகுப்புப் பிள்ளைகளிடம் ரோபோட்டிக் பயிற்சிகள் தந்து வரும் விபரங்களை, அப்போதே நான் மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்திருந்தேன். மத்திய அரசு என்னைப் பாராட்டி, அதற்கு வெகுமதியாக நான் விரும்பிய ரோபோட்டிக் கிப்ட் பாக்ஸ்களை எனக்கு அனுப்பி வைத்தது. அவைகளை அப்படியே பள்ளிப் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து வழங்கி விட்டேன். மாநில அரசின் நல்லாசிரியர் விருதுத் தொகை ரூபாய் பத்தாயிரமும், நான் பணியாற்றி வருகின்ற பள்ளி வளர்ச்சிக்கு நிதியாகத் தந்து விட்டேன்.”

“எனக்கு வில்லுப்பாட்டு மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். வில்லுப்பாட்டுக்கு என தனியாகப் பாடல்கள் புனைந்து வசனங்களுடன் அதனை நடத்திட வேண்டும். இந்தக் காலத்துப் பள்ளிப் பிள்ளைகளிடமும் அதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்று என் மனதுக்குள் பேரவா. அதனால் நானே பாடல்கள் வசனங்கள் எழுதி நான்கைந்து வில்லுப்பாட்டு நிகழ்வுகளை வகுப்பு மாணவ மாணவியரை மட்டுமே அதில் ஈடுபடுத்தி நடத்தியுள்ளேன். உணவுப் பாதுகாப்பு, வாழ்க்கைத் திறன் கல்வி, மது ஒழிப்பு விழிப்புணர்வு, விலங்குகளை நேசித்தல் போன்ற தலைப்புகளில் வில்லுப்பாட்டு நிகழ்வுகளைப் பிள்ளைகளே நிகழ்த்தியுள்ளனர்.”

“மாணவ மாணவியரை வைத்து நான்கு உலக சாதனைகள் நிகழ்த்தியுள்ளோம். 112 கனிமங்களின் பெயர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் தங்கு தடைகளின்றி கூறுதல், சிலம்பம் சுற்றிக்கொண்டே அந்தக் கனிமங்களின் பெயர்களைக் கூறுதல், ரோபோட்டிக் சாதனங்களை வைத்துப் பல வடிவங்களை உருவாக்குதல், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் அறுபது சதவிகிதம் அறிவாற்றல் குறைபாடு உடைய மாணவனைக் கற்றலில் மேம்படுத்துதல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன். இந்த ஆண்டில் 2௦23 மத்திய அரசின் தேசிய நல்லாசிரியை விருதினை நான் பெறுவது, நான் பணியாற்றுகின்ற பள்ளிக்கும் பெருமை. எனக்கும் பெருமை” என்கிறார் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர், அரசு மேனிலைப்பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியை ச. மாலதி டீச்சர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com