திண்டுக்கல்லில் அவசியம் பார்க்க வேண்டிய 10 இடங்கள்!

திண்டுக்கல்லில் அவசியம் பார்க்க வேண்டிய 
10 இடங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.  அவற்றில் மிக முக்கியமான பத்து சுற்றுலாத் தலங்களைப் பார்ப்போம்!

1. மலைக் கோட்டை

திண்டுக்கல்லில் மலைமீது அமைந்துள்ள மலைக்கோட்டை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோட்டையாகும்.  திண்டுக்கல் மலையானது 1209 அடி நீளமும் 900 அடி அகலமும் அடிமட்டத்திலிருந்து 280 அடி உயரமும் கொண்டது.  

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இருந்து மைசூரு மன்னர்கள் கொங்கு நாடு வழியாக மதுரைக்கு வந்து மன்னர்களோடு போரிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  இது போன்ற போர்களில் மதுரையின் நுழைவாயிலாக அமைந்தது திண்டுக்கல்லாகும்.  இதன் காரணமாக திண்டுக்கல் போராளிகளால் அச்சுறுத்தலுக்கு அடிக்கடி உள்ளானது.  இதைச் சமாளிக்க திண்டுக்கல்லில் பாதுகாப்பிற்காக ஒரு கோட்டை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதும் அவசியமாயிற்று.

மலைக்கோட்டையை ஒட்டி தென்கிழக்கு அடிவாரத்தில் ஒரு குளம் அமைந்துள்ளது.   இந்தக் குளம் “கோட்டைக்குளம்” என்று அழைக்கப்படுகிறது.  வடமேற்குப் பகுதியில் மலையை ஒட்டி அமைந்துள்ள மற்றொரு குளம் “அய்யங்குளம்” என்று அழைக்கப்படுகிறது.

மலைக்கோட்டையை மன்னர்கள் எதிரிகளை மறைந்து தாக்க இராணுவமுகாமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.   மலைக்கோட்டை ஆங்கிலேயர் வசமானதும் பாதுகாப்பை பலப்படுத்த விரும்பி பீரங்கிகளை சுற்றிலும் நிறுவி பயன்படுத்தியுள்ளனர்.  

2. கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல்லின் மற்றுமொரு முக்கிய அடையாளம் கோட்டை மாரியம்மன் கோயில்.  விஜய நகரப் பேரரசு காலத்தில் போர் வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கியவர் கோட்டை மாரியம்மன்.     கருவறையில் உள்ள மாரியம்மனுக்கு எட்டு திருக்கரங்கள் அமைந்துள்ளன.  இடதுபுறத்தில் அரிவாள், வில், மணி, கிண்ணம்  முதலானவையும் வலதுபுறத்தில் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம் முதலானவையும் காட்சி தருகின்றன.  திண்டுக்கல் கோட்டையின் அடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் திண்டுக்கல் மலைக்கோட்டைக்குக் கிழக்கே இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

3. கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த கொடைக்கானல் மலைவாச ஸ்தலம் பழனி மலை கிழக்கு திசையில் அமைந்துள்ளது.  கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கொடைக்கானல்.  பிளம்ஸ் மற்றும் சாக்லேட் முதலானவை கொடைக்கானலின் தனிச்சிறப்பு.  வீட்டில் தயார் செய்யும் சாக்லேட்கள் பல கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. கொடைக்கானலில்  கோக்கர்ஸ் வாக் (Coaker's Walk), குறிஞ்சி ஆண்டவர் கோயில், தூண் பாறை, கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, டால்பின் நோஸ் பாறை, குணா குகை, சில்வர் கேஸ்கேடு நீர் வீழ்ச்சி (Silver Cascade), ஃபேரி நீர் வீழ்ச்சி (Fairy Falls),  க்ளென் நீர் வீழ்ச்சி (Glen Falls) முதலான இடங்களை அவசியம் பார்க்க வேண்டும்

4. சிறுமலை

மினி கொடைக்கானல் என அழைக்கப்படும் சிறுமலை திண்டுக்கல்லின் முக்கியமான ஒரு இயற்கை வாசத்தலமாகும். ஐம்பத்தைந்தாயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்ட சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.  திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.   இம்மலையை அடைய 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.   சிறுமலையில் விளையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கப்பக் கிழங்கும் சிறப்பு வாய்ந்தது.  மேலும் சிறுமலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்றது.  இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

5. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது காந்தி கிராமம்.    சிறுமலையின் அடிவாரத்தில் இரயில் பாதையில் இருபக்கமும் பல கட்டடங்களுடன் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது

1956 ஆம் ஆண்டில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.  இப்பல்கலைக்கழகம் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் கிராமிய பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் தொடங்கப்பட்டது.  இப்பல்கலைக்கழகத்தில் காந்திஜியின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது.   இங்கு காந்தி அருங்காட்சியகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.   தனிப்பட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த இந்த பல்கலைக்கழகம் தற்போது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

6. சின்னாளப்பட்டி

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் அமைந்த ஒரு பேரூராட்சி சின்னாளப்பட்டி. சின்னாளப்பட்டியில் முதன்மைத் தொழிலாக கைத்தறி திகழ்கிறது.  வருடம் முழுவதும் இக்கிராமத்தில் சேலை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்குள்ள நெசவாளர்கள் நெய்யும் கைத்தறிப் புடவைகள் குறைந்த எடை உடையதாகவும் தரமானதாகவும் சரியான விலையிலும் கிடைப்பது கூடுதல் சிறப்பு. இந்தோனேஷியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான வெளிநாடுகளிலும் இப்புடவைக்கு மிகச்சிறந்த வரவேற்பு உள்ளது.  மேலும் கர்நாடகா, ஒரிசா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் என நம் நாட்டைச் சேர்ந்த பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

7. பழனி ஸ்ரீதண்டாயுதபாணித் திருக்கோயில்

பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படைவீடாகும். புராண காலத்தில் இவ்வூர் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் சிறப்பான அம்சமே நவபாஷாணத்தைக் கொண்டு சித்தர் போகர் ஸ்தாபித்த முருகன் சிலைதான். திண்டுக்கல்லில் இருந்து பழனி 56 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு செல்ல ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் ரயில் மூலமும் பழனியை அடையலாம்.

8. தாடிக்கொம்பு ஸ்ரீ சௌந்திரராஜப் பெருமாள்

திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் கலைநயம் மிக்க ஒரு வைணவத்தலம் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில். இத்தலம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

இத்தலத்தில் கல்யாண சௌந்தரவல்லித் தாயார் சன்னதியின் முன்னால் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் வைகுண்டநாதர், ராமர், நரசிம்ம- இரண்ய யுத்தம், ரதி, மன்மதன், உலகளந்த பெருமாள், தில்லைகாளி, மகாவிஷ்ணு முதலானோரின் கலைநயமிக்க சிற்பங்கள் காண்போரை வியக்க வைக்கின்றன.

திண்டுக்கல் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் வேடசந்துார் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.

9. ஐவர் மலை

ஐவர் மலை என அழைக்கப்படும் “அயிரை மலை” திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் பழனி நகரத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பழமையான மலையாகும்.  

முற்காலத்தில் இது ஒரு சமணக் குடியிருப்பாக இருந்துள்ளது என்றும் கி.பி.எட்டு முதல் பத்தாம் நூற்றாண்டுகளில் சமண முனிவர்களும் அவர்களுடைய மாணவர்களும் நிறைந்த சமணப் பள்ளியாக இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

ஐவர் மலைக் குன்றில் மூன்று இயற்கைக் குகைகளும் இரண்டு சுனைகளும் காணப்படுகின்றன.  இவை சூரிய புஷ்கரணி மற்றும் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகின்றன. ஐவர் மலையின் கிழக்குப் பகுதியில் ஒரு பெரிய குகையும் வடக்குப் பகுதியில் ஒரு சிறு குகையும் மேற்குப் பகுதியில் ஒரு நடுத்தரமான குகையும் ஆக மூன்று இயற்கையான குகைகள் அமைந்துள்ளன.  

10. ஆத்தூர் காமராஜர் அணை

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த ஆத்தூரிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இந்த அணை அமைந்துள்ளது.  மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் பாறைகளின் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாறு, கூழையாற்றில் இருந்து வரும் தண்ணீர் இந்த அணையில் சேகரிக்கப்படுகிறது.  23.5 அடி உயரம் கொண்ட இந்த அணையானது அன்றைய முதல்வர் மாண்புமிகு காமராஜர் அவர்களால் 1955 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.    இந்த அணையில் 158.7 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்க இயலும்.  திண்டுக்கல் நகரத்தின் முக்கிய நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.  மேலும் அணைக்கு வரும் நீரால் இடைவழியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடைகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com