உயிர் கொடு கடவுளே!

பெட்டிக் கதை!
உயிர் கொடு கடவுளே!

-விக்னேஷ் பகவதி

ஓவியம்; பிரபுராம்

       திடீரென்று நடந்தது இத்துயரம். மீளாத்துயரம் என்று கூட சொல்லலாம். ராஜீக்கு குழந்தை பிறந்து மூன்றே நாட்கள் ஆகி இருந்தன. அதுவும் ஆபரேஷன் செய்து குழந்தை எடுத்தாகும் நிலையாகிவிட்டது.

       பிரசவ வலி என்றால் என்னவென்று தெரியாமல் வலி மறக்கடிக்கப்பட்டு ஒருவழியாக ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். வீட்டிற்கு வந்து மூணாவது நாளில் இருந்து சோறு, தண்ணி இல்லாமல் நெஞ்சு முதுகு வலி எடுத்து, அட்டாக் வருவது போல குப்பென்ற வியர்வையுடன் வார்த்தை வராமல் வாயிருக்கத்துடன் திணறல் ஏற்பட்டது. நடுராத்திரி ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.

       “ஐயோ வலிக்கிற வலில இந்த ஆட்டோ போடுற டான்ஸில நெஞ்சுவலி அதிகமாகி ஆட்டோலயே உசுரு போயிரும் போல” என்று மனதிற்குள் அழுது நிஜத்திலும் தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்.

       டாக்டர் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு ராஜீயின் கணவன் சரணை அழைத்து,

“மிஸ்டர் சரண் உங்க மனைவிக்கு பித்தபைல கல் நிறைஞ்சிருக்கு. அதுவும் ரொம்ப சிவியரா இருக்கு. பித்தபை குழாய்லயும் இருக்கலாம். லேப்ரஸ்கோப்பி பண்ணி ரிமூவ் பண்ணிறனும். இல்ல மஞ்சள் காமாலை வந்து உங்க மனைவிக்கும் அவங்க தாய்ப்பால் கொடுக்கும் உங்க குழந்தைக்கும் ஆபத்து” என்று எச்சரித்தார். இருவரும் வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் தோளின் மீது சாய்ந்து அழுதனர்.

      பிள்ளைப் பெற்று வீடு திரும்பி ஒரு நாள் கூட உண்டு உறங்காத கண்கள் மறுபடியும் இன்னொரு அறுவை சிகிச்சைக்கு சென்று அவசர சிகிச்சையில் படுத்திருக்கும் காட்சி காலனுக்கே கவலையாய் இருந்தது.

       முதற்கட்ட சிகிச்சையாய் எண்டோஸ்கோப்பி செய்வதற்கு ராஜீயை தயார் செய்தார்கள்.

       “ஏம்மா ராஜீ இந்தா ஒம் மகனுக்கு கொஞ்சம் வயித்துக்கு கொடுத்துட்டு தா. அப்பறம் நா பாத்துக்குறேன்” என்றாள்  - அவள் மாமியார்.

       எண்டோஸ்கோபி  செய்வதற்கு  இரண்டு நாள் முன்பு உணவின்றி,, தண்ணீரின்றி வெறும் வயிராக இருத்தல் வேண்டும். அதன்படி ராஜீ சோறு, தண்ணி இல்லாமல் இருந்து, , இன்று வெறும் குளுக்கோஸ் மட்டும் சென்றது.

‘பாவம் பச்சபிள்ளைக்காரி. அதும் ஆம்பிள பிள்ள உறிஞ்சிற உறிஞ்சிக்கு கொல பட்டினியா கிடக்கு! எம் பிள்ள…” என்று அழுதாள் ராஜியின் அம்மா மரகதம்.

       குளுக்கோஸ் ஏறிய சத்தில் தாய்ப்பால் பெருகியது. அத்தனை நீர்சத்தினையும் சர்ரென்று உறிந்தது அக்குழந்தை.

       ராஜீ எண்டோஸ்கோப்பி அறைக்குச் சென்றாள். மிட்டாயை கொடுத்து தின்ன வற்புறுத்துவது போல கேமரா கொண்ட ஸ்கோப்பை திணித்து விழுங்க வைத்தனர். சிகிச்சை முடிந்து உயிர் மட்டும் இருந்தது. மனதிடம், உடல் திடம்  இன்றி மயக்க நிலையில் அதே படுக்கைக்கு வந்தாள். ‘எப்படியும் என் இரண்டு பிள்ளைக்களுக்காகவாவது எனக்கு உயிரை கொடுத்திரு கடவுளே’ என்ற அரை மயக்க புலம்பலுடன்…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com