
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த நடிகை டாப்ஸி, தற்சமயம் இந்தியில் படம் தயாரித்து வருகிறார். பாலிவுட்டில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், ஷாருக்கானுடன் இணைந்து ‘டன்கி’ என்கிற படத்தில் நடித்தும் வருகிறார்.
டாப்ஸி தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார். தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருவதோடு, ஜிம் பயிற்சியாளரின் மேற்பார்வையில் உணவுக்கட்டுப்பாடு கடைப்பிடித்து, தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில், தனது ‘சிக்ஸ்பேக்’ தோற்ற போட்டோக்களை அவர் வெளியிட, அவை வைரலோ வைரல். எந்தப் படத்துக்காக இந்த சிக்ஸ் பேக்? என்ற யோசனை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. விடை இன்னும் தெரியவில்லை!
குண்டு துளைக்காத நிஸ்ஸான் கார்!
பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வரும் காரணம், மும்பை போலீஸார் அவருக்குப் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
அவர் வெளியிடங்களுக்கும், சினிமா நிகழ்ச்சிகளுக்கும் செல்லும்போது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சல்மான்கான் குண்டு துளைக்காத டொயோட்டா காரைப் பயன்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், அதிக தொழில்நுட்ப வசதி, விலை கொண்ட குண்டு துளைக்காத ‘நிஸ்ஸான்’ காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளார். வளைகுடா நாடுகளில் பிரபலமான இந்தக் கார், இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஒரு தனியார் நிறுவனம் மூலம் ‘நிஸ்ஸான்’ காரை இறக்குமதி செய்தவர், அதில் பயணித்து முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானியின் கலாசார மைய திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார்.
ஏற்கெனவே சல்மான்கானிடம் உள்ள அத்தனை ஆடம்பரக் கார்களிலும் குண்டு துளைக்காத கண்ணாடிகளை சல்மான்கான் பொருத்தியிருக்கிறார். அவரது பண்ணை வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் கீரவாணி!

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் ‘ஆரோன் மேன் கஹான் தும் தா’ என்கிற இந்திப் படத்தை நீரஜ் பாண்டே இயக்குகிறார். இப்படத்துக்கு இசையமைக்க பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி ஒப்பந்தமாகியுள்ளார். கீரவாணி, தமிழில் மரகதமணி என்கிற பெயரில் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இவரது இசையில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கார் விருதை வெல்ல, இப்போது அதிக வாய்ப்புகள் வருகின்றன.
இது குறித்து கீரவாணி கூறுகையில், “2000 – 2002 ஆண்டுகளில் இந்தி சினிமாவில் பிசியாக இருந்தேன். சில பாடல்கள் பிரபலமாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வர, பாலிவுட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. நீரஜ் பாண்டேயுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நல்ல வாய்ப்புகள் எங்கிருந்து வந்தாலும், கண்டிப்பாக இசை அமைப்பேன்” எனத் தெரிவித்தார்.