மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம்..!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி – 2022
மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம்..!

ஓவியம்: வேதா

 பரிசுக்கதை - 10

எஸ். ராமன்
எஸ். ராமன்

நடுவர் பார்வையில்...

தாயுள்ளம் கொண்ட ஆசிரியையின் பார்வை, ஒரு கொடுஞ்செயல் தடுக்க அவரின் சமயோசிதமான செயல் நல்ல நடையில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

 ருளோடு பனி படர்ந்த மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதில், டொக்..டொக்கென்று வாசல் கதவு தட்டும் சத்தம்,  தலையில் குட்டுவது போல் கேட்டதும், மங்களம் திடுக்கிட்டு கண் விழித்தாள். 

 கணவனுக்கு அடிக்கடி இடம் மாற்ற பணி. மேல் படிப்புக்காக, மகன் ஹாஸ்டல் வாசம். ஆசிரியை பணி மீது இருந்த தீவிர பற்றால், வேலையை விட மனமில்லாமல், அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தாள். அந்தப் பணியில் கிடைக்கும் மன திருப்தி, வேறு எந்தத் துறையிலும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது அவளுடைய தனிப்பட்ட கருத்து.

 “இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யாராக இருக்கும்... ஏதாவது பிரமையா?”  என்ற நினைப்பில், ஜன்னல் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். தெரு விளக்குகள் அணைந்து, வெளியில் இருள் மட்டும் ஆட்சி செய்துகொண்டிருந்தது.  மின்சாரம் தடைப் பட்டதால் வீட்டிற்குள்ளும் வெளிச்சத்துக்குப் பஞ்சம். வெளியே கும்மிருட்டில், வீட்டு வாசலில் ஒரு உருவம் நிற்பது மட்டும், மங்கலாக கண்ணுக்குத் தெரிந்தது.

 “இந்த நேரத்தில் யார் அது... என்ன வேணும்?” குரலை சற்று உயர்த்தினாள்.

 “உமா...” பதிலை சுமந்து வந்த குரலில் லேசான பதட்டம் வெளிப்பட்டது.

 “உமான்னா... எங்கிருந்து வரீங்க…?”

 “மிஸ்... உங்கக் கிளாஸில் படிக்கிற உமா...” குரலின் மென்மை, அது ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தியது.

 “தெளிவாக புரியும்படியாக, வேறு ஏதாவது அடையாளம் சொல்லு?”

 “மனதிலுறுதி வேண்டும்,

வாக்கினிலேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

இந்த பாரதியார் கவிதை வரிகளை, மெட்டுப் போட்டு, பாட்டாகப் பாடி, இரண்டு நாட்களுக்கு முன்பு, சொல்லிக் கொடுத்தீங்களே... வகுப்பில் ஒருத்தர் விடாம ரசிச்சு, ஒண்ணா சேர்ந்து திரும்ப,  திரும்ப பாடினோமே…?”  அந்தக் குளிரிலும், கவிதை வரிகள் வெடித்துச் சிதறின.

 பாரதியார் கவிதை வரிகளை கேட்டவுடன், மங்களத்தின் கண்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த தூக்க கலக்கம் முற்றிலும் விலகி, அடையாளம் உறுதியானது.

 “முதல் பென்ச் உமாவா..?”

“ஆமா மிஸ்...”

 கதவைத் திறந்தவள், ‘இந்த குளிரில் எதுக்குத் தனியா இங்கே... உள்ளே வா...”  தலையை வாஞ்சையாக வருடிக் கொடுத்து, தன் மீதிருந்த சால்வையை உமாவின் மீது போர்த்தி, குளிரின் தாக்கத்தைச் சுருக்கி,  மெழுகு வர்த்தியை ஏற்றி, வெளிச்சத்தைப் பெருக்கினாள்.

 குரலில் உறுதி தெரிந்தாலும், உமாவின் கண்களிலிருந்து வெளிப்பட்ட கலக்கத்தை, அங்கு பரவிய வெளிச்சம் திரையிட்டுக் காட்டியது.

உடனடியாக கேள்விகளைத் தொடுத்து, அந்தக் கலக்கத்தைப் பெருக்குவதற்கு மங்களத்துக்கு விருப்பமில்லை.

 “உட்கார்...டீ போட்டு தரேன்...” என்றவள் அடுப்பளைக்குள் நுழைந்தாள்.

 டுப்பை பற்ற வைத்ததோடு, தன் நினைவுகளையும் பற்ற வைத்தாள்.

கடந்த ஒரு வருடமாக, உமா அவளுடைய வகுப்பு மாணவி. ஏதோ படிக்க வேண்டுமே என்று படிக்காமல்,  மிகுந்த ஈடுபாட்டுடன் படிக்கும் உமா மீது, அவளுடைய கவனம் படிந்தது. உமாவின் துறுதுறுப்பும், அச்சுக் கோர்த்தது போன்ற கையெழுத்தும், ஆசிரியர்களுக்கு தரும் மரியாதையும், அந்தக் கவனத்தை வளர்த்தது. 

 கடந்த மாதத்தில் ஒரு நாள், “எங்க வீட்டில், இன்றைக்கு கூட்டாஞ்சோறு. உங்களுக்குத் தனியா கொண்டு வந்துருக்கேன் மிஸ்…” உமா ஆசையோடு கொடுத்த வாழை இலை பொட்டலத்தைப் பிரித்து சுவைத்தாள்.

 “சுவை மட்டுமில்லை. காய்கறிகளின் கூட்டு என்பதால், இதில், உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டசத்துகள் இருக்கு. கிராமத்துச் சமையலான இது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. ரொம்ப நன்றி உமா...” என்றாள்.

 “உங்களையும் எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு மிஸ். உங்களை மாதிரியே நானும் தமிழ் ஆசிரியை ஆகணும்னு ஆசை…”  உமாவின் வெள்ளந்தியான பேச்சு, மங்களத்தை நெகிழ வைத்தது.

 “என்னை ஏன் பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லையே?”

 “நீங்க பாடம் சொல்லிக் கொடுக்கற விதம் ரொம்பப் பிடிச்சிருக்கு மிஸ். ஒவ்வொரு தமிழ் வகுப்புக்கு பிறகு, என் உலக அறிவு கொஞ்சம் வளர்ந்துட்டா மாதிரி தோணுது” ஒன்பதாம் வகுப்பு மாணவி, பெரிய மனுஷி போல் பேசினாள்.

 தமிழ் ஆசிரியையான மங்களம், மாணவ, மாணவிகள் தமிழை விரும்பிப் படிக்க, அந்த வகுப்பை, எவ்வளவு சுவாரஸ்யமாக்க முடியுமோ அவ்வளவு  சுவாரஸ்யமாக்குவாள். தினம் ஒரு திருக்குறளில்,  ஒவ்வொரு குறளின் பொருளையும் விளக்குவதோடு மட்டுமல்லாமல், அந்தக் கருத்து தினசரி வாழ்க்கை முறைக்கு எப்படிப் பொருந்தும் என்பதையும், எளிதான உதாரணங்கள் மூலம் சொல்லுவாள். அந்த விளக்கத்தில் நீதிக் கதைகளை பொருத்தி, தமிழின் மீது, மாணவ மாணவிகளின் ஈர்ப்பை அதிகப்படுத்துவாள்.

 பகைவரால் கொள்ளை கொள்ள முடியாத அழிவையும் காக்கும் கருவி அறிவு.  யார் எதைப் பேசக் கேட்பினும் உண்மைப் பொருளை உணர்வதே அறிவு. உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு. நடுக்கமோ, பயமோ, அஞ்சுவதோ இல்லாமல் தேவையான எல்லாம் உடையவரே அறிவுடைவர்..என்ற பொருளுடைய

‘எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை

அதிர வருவதோர் நோய்’...

என்ற குறளை விளக்கும்போது, வாழ்க்கைக்கு சமயோசித அறிவின் முக்கியத்துவம், சமூக வளைதளங்களில் காணப்படும் விஷயங்களை எப்படிச் சரிவர பயன்படுத்துவது, வதந்திகளால் விளையக்கூடிய ஆபத்துகள் போன்றவற்றை, அவை சார்ந்த சமீபத்திய செய்திகளோடு ஒப்பிட்டு, மாணவர்களை, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங் களுக்கும் அழைத்துச் செல்வாள். ‘சமூக வலைதலங்களில் புதைந்திருக்கும் அறிவு புதையல்களை நோக்கி கவனத்தைச் செலுத்துங்கள்; அதில் பரவியிருக்கும் குப்பைகளை ஒதுக்கித் தள்ளுங்கள்…’ போன்ற மனதில் பதியும்படியான அறிவுரைகளைச் சொல்லுவாள். 

 படிப்பறிவோடு கலந்த சமயோசித அறிவைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளை எளிதாக கடக்கலாம் என்பதை உண்மை சம்பவங்களைக் கோர்த்து, மாணவ மாணவிகளுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லுவாள். 

ஒரு முறை, ‘மிஸ்..உங்களை ஒரே ஒரு தரம் கட்டிப் பிடிச்சுக்கணும் போல இருக்கு’ என்ற உமாவை, இரு கரம் நீட்டி, அணைத்துக்கொண்டாள்.

ஆசிரியர் என்ற உறவை மீறி, தன்னை ஒரு தோழியாக உமா பாவிக்கிறாள் என்பது மங்களத்துக்கு புரிந்தது.

 “மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ரோல் மாடலாக இருக்க வேண்டும். அந்த உறவை சரிவர பயன்படுத்தி, எதிர் கால வாழ்க்கை மீது, மாணவர்களின் கண்ணோட்டத்தை மேம்படுத்த வேண்டும்”… என்ற சித்தாந்தத்தில் அதீத நம்பிக்கை கொண்டவள் என்பதால், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், பொறுப்பு துறக்காமல், அந்தச் சித்தாந்தத்தை செயல் படுத்திக்கொண்டிருந்தாள்.

 தோழமை மனப்பான்மையில்தான், ஏதோ பிரச்னையைச் சுமந்து, தன்னை சந்திக்க உமா வந்திருக்கிறாள் என்பது அவளுக்கு ஓரளவு புரிந்ததாலும், ‘என்ன பிரச்னையாக இருக்கும்?’ என்ற யோசித்துக் கொண்டிருந்தாள்.

 நினைவலைகள் அடங்கி, அடுப்பை அணைத்து,  டீயை உமாவோடு பகிர்ந்துகொண்டவள், எண்ணப் பகிரலுக்கு தயாரானாள். 

நாவில் பட்ட டீ, சில்லிட்ட உடலுக்கு இதமாக இருந்தது. 

“என்னம்மா... இந்த நேரத்தில் தனியா வந்திருக்கே. இது தப்பில்லையா.. வீட்டில் தேட மாட்டாங்களா..?”  உமாவுடன் இதமாக பேச ஆரம்பித்தாள்.

 “தப்புதான் மிஸ். ஆனா, எனக்கு வேர வழி தெரியலை மிஸ்...”

 “காலையில் பள்ளியில் சந்திக்கும்போது பேசியிருக் கலாமே... ஏதாவது அவசர பிரச்னையாம்மா?

 “விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்

சாத்திரங்கள் பல பல கற்பராம்

சவுரியங்கள் பல பல செய்வராம்

மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்

மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பராம்”

விளக்கத்தோடு, நீங்கள் வகுப்பில் சொல்லிக் கொடுத்த இந்த பாரதி பாடல்படி, ஒரு பெண்ணுக்கு கல்வி ரொம்ப முக்கியம்தானே மிஸ்…?”

 “ஆமா... அதில் எந்த சந்தேகமும் இல்லை…”

 “கல்வி கற்பது ஒரு தவம் மாதிரின்னு ஒரு தடவை சொல்லியிருக்கீங்க மிஸ்...”

 “ஆமா... எப்பவோ சொன்னதை நல்லா ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்கே..”

 “அந்தத் தவத்துக்குத் தடை ஏற்பட்டா என்ன செய்யறது மிஸ்?”

 தான் வகுப்பில் சொல்லிக் கொடுத்தவைகளை கேள்வியாக மாற்றிக்கொண்டிருக்கும் தன் மாணவியின் பிரச்னை என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடியாமல், அவளை ஆச்சரியத்தோடு பார்த்தாள் மங்களம்.

 “நேற்று மாலை, பக்கத்து ஊரில் இருக்கிற உறவுக்காரங்க வீட்டுக்கு போன அம்மா, அப்பா, இன்னைக்கு காலையில் 10 மணிக்குத் திரும்பி வந்துடுவாங்க. அதற்குள் உங்களைப் பார்த்துட்டு போனால்,  மனசுக்கு ஒரு தெம்பும், தைரியமும் கிடைக்கும்னுதான், அவ்வளவு தூரம் சைக்கிளை மிதிச்சுக்கிட்டு, இந்த நேரத்தில் வந்தேன்…” 

 “உன்னைத் தனியா விட்டுட்டா போயிருக்காங்க... எதுக்கு போயிருக்காங்க?”

 “நான் வயசுக்கு வந்துட்டதால, எனக்கு கல்யாண ஏற்பாடுகளைச் செய்யறதுக்காக போயிருக்காங்க. சொந்தமும், சொத்தும் வெளியே போயிடக்கூடாதுன்னு, 35 வயதான உறவுக்காரப் பையனுக்கு என்னைப் பேசி முடிக்கத்தான் அவுங்க இடத்துக்குப் போயிருக்காங்க. அப்பா ஒரு முடிவு எடுத்துட்டாருன்னா, அதை மாற்றவே முடியாது மிஸ்.  ஓரிரு நாட்களில், செங்காளியம்மன் கோயிலில் அருள்வாக்கு கேட்டு, ஒப்புதல் வாங்கிகிட்டு, தை மாதத்தில் கல்யாணம்னு பேசிக்கிட்டு இருக்காங்க. நான் படிக்கணும் மிஸ். எனக்குக் கல்யாணம் வேண்டாம் மிஸ்…”  அதுவரை உடையாமல் இருந்த உமா, மங்களத்தின் மடியில் முகத்தை புதைத்து, கேவி, கேவி அழ ஆரம்பித்தாள்.

மங்களத்துக்கு பிரச்னையும், அதன் தீவிரமும் புரிந்தது. வேறு எந்த விபரீத முடிவை நோக்கி நகர்ந்து விடாமல் இருக்க, உமாவின் மனதில், தைரியத்தைப் புகட்ட வேண்டிய தருணம் இது... என்பதை மனதில் முடிவு செய்துகொண்டாள்.

 “படிக்க வேண்டிய வயசில் எந்தத் தடையும் இல்லாமல் படிச்சாகணும்... திருமணம் செய்துகொள்ள வேண்டிய வயதில் திருமணம் செய்துகொள்ளணும். எப்ப, யாரை திருமணம் செய்துகொள்ளணுங்கற முடிவு எடுப் பதற்கு, உனக்கு முழு சுதந்திரம் உண்டு. நான் உங்க வீட்டுக்கு வந்து பேசறேன். இந்தத் தருணத்தில், மன தைரியம் மட்டும்தான் தேவை..” முதல் கட்டமாக, உமாவின் மனதில் தைரிய விதைகளை விதைத்தாள். 

 ன்று மாலை, அழையா விருந்தாளியாக  உமாவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மங்களம்.

முறுக்கிய மீசையுடன், வெளிப்பட்டவர், உமாவின் தந்தை என்பதை புரிந்துகொண்டாள்.

 “ஐயா... வணக்கம். என் பெயர் மங்களம். உமாவோட, தமிழ் டீச்சர்..”

 “ஓ... நீங்கதானா அவுங்க... அடிக்கொரு தரம், எங்க மிஸ்..மிஸ்னு சொல்லிக்கிட்டு இருக்கும். உட்காருங்க. உமாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் பண்ணிக்கிட்டு இருக்கோம்…” கேள்வி இல்லாமலேயே தகவலைப் பகிர்ந்தார்.

 “உங்க மகளுக்குப் பதினைஞ்சு வயசுதான் ஆகுது. அதுக்குள்ள கல்யாணமா..?”  நேரடியாக சப்ஜெட்டுக்குள் நுழைந்தாள் மங்களம்.

 “எங்க ஜாதிப்படி இதுதான் வழக்கம்…” 

 “உமா இதுக்குச் சம்மதிச்சாளா..?”

 “பெத்தவங்க நாங்க இருக்கும்போது, அவ சம்மதம் எதுக்கு? யாருக்கு கழுத்த நீட்ட சொல்றமோ, அந்தப் பையனுக்கு கழுத்தை நீட்டறதை மட்டும்தான் அவ செய்யணும்..”

 அவருடைய பேச்சில், ஆண் ஆதிக்கம், ஜாதி ஆகிய அழுக்கு நுரைகள் கொப்பளித்து நின்றதை உணர முடிந்தது.

 “கல்வியில்லாத பெண்கள் களர் நிலம்! அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை” னு பாரதிதாசன் சொல்லியிருக்கார்.

மகள் படிப்பு முடிந்தபிறகு கல்யாணத்தை பற்றி யோசிக்கலாமே..” முயற்சியை கைவிடாமல் பேசினாள் மங்களம்.

 “அதுவரைக்கும், ஜாதி ஜனம் சும்மா இருக்காது. இது மாதிரி, சொத்து இருக்கிற இடமும் கிடைக்காது. ஆமா..பொட்ட புள்ளைக்கு எதுக்கு படிப்பு..? 

 “கல்வியை விட, பெண்களுக்கு வேறு எதுவும் பெரிய சொத்தா இருக்க முடியாதுங்க...”  ஒரு பெண் நேருக்கு நேர் பார்த்து சொன்னதில், உமாவின் தந்தை மீசையை முறுக்கி, அந்த பேச்சுக்கு தன் ஒப்புதல் இன்மையை வெளிப்படுத்தி, விருட்டென்று எழுந்து, கைப்பேசி அழைப்பை ஏற்க, வாசல் பக்கம் போனார்.

 அந்த சமயத்தில், எதிர் அறையிலிருந்து இரு ஜோடி விழிகள், மங்களத்தை அழைத்தன.

 கிடைத்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டவள்,  உமாவும், அவளுடைய அம்மாவும் இருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள்.

 “என் பெண்ணை எப்படியாவது காப்பாத்துங்க...”  இரு கரம் குவித்து, அவள் காலை தொட்ட உமாவின் அம்மாவிடம் பேசி, சில விஷயங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, அறியாமை, ஆண் ஆதிக்கம் என்ற கொம்புகளை சுற்றி வளர்ந்த வரட்டு பிடிவாதம் என்ற விஷ செடியை அழிக்க தேவையான ஆயுதத்தை தேடி,  அங்கிருந்து புறப்பட்டாள்.

 மூன்று நாட்களுக்கு பிறகு, பள்ளிக்கு வந்த உமாவின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் படிந்திருந்தன.

 “இன்னும் ஆறு வருடத்துக்குப் பிறகுதான் என்னுடைய கல்யாணப் பேச்சை எடுக்கணும். இல்லைன்னா, அப்பாவின் உயிருக்கு ஆபத்து” ன்னு அருள்வாக்கு சொன்னாங்களாம். அதனால், கல்யாணம் நின்னு போச்சு மிஸ்..!” படிப்பைத் தொடரப் போகும் குதூகலம், உமாவின் குரலில் இழைந்தோடியதைக்
கண்டபோது, தன் முயற்சி வெற்றி பெற்றதை நினைத்து, ஆண்டவனுக்கு நன்றி சொன்னாள் மங்களம்.

 உமாவின் தந்தையைச் சந்தித்த பிறகு, அருள்வாக்கு சொல்லும் கோயில் பூசாரியைச் சந்தித்தது, பெண்ணின் சம்மதமில்லாத பால்ய விவாகம், பெண் கல்வியின் முக்கியத்துவம் ஆகியவைகளைப் பற்றி விரிவாக அவரிடம் எடுத்து சொன்னது, அவருக்கும் அந்த வயதில் ஒரு பெண் இருப்பதால், சொன்னதைப் புரிந்து கொண்டு, திருமணத்தை நிறுத்த தன்னால் இயன்ற உதவியை செய்வதாக அவர் உறுதி அளித்தது, அதற்கேற்றபடி, தன்னை மறந்து அருள்வாக்கு சொல்லும் பழக்கத்திலிருந்து விலகி, உடுக்கு அடித்து அருள்வாக்கு சொல்வது போல் நடித்து, உமாவின் தந்தைக்கு மரண பயத்தை ஏற்படுத்தியது ஆகிய பின்னோட்ட நிகழ்வுகள், தனக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கட்டும் என்று மங்களம் முடிவு செய்திருந்தாள்.

 “பொய் சொல்லலாமா..?” என்று பூசாரி கேட்டபோது, 

‘குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்’… என்ற பொருளுடைய

‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்’ என்ற குறளை மேற்கோள் காட்டி,  அவரைச் சமாதானப்படுத்தினாள் என்பதும் இன்றுவரை பரம ரகசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com