தெருவில் வாரானோ?

தெருவில் வாரானோ?

சிறுகதை
				
மீனாக்ஷி பாலகணேஷ்
மீனாக்ஷி பாலகணேஷ்

ஓவியம்; வேதா

சிவபாக்கியம் சுவாமி சந்நிதியில் நடனமாடிக் கொண்டிருந்தாள். பழந்தக்க (ஆரபி) ராகத்திலமைந்த சம்பந்தப் பெருமானின் தேவாரப்பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். 

       மின்னல் பளீர் பளீரென மின்னிச் சிதறுவது போன்ற அருமையான அடவுகள். பொற்கிண்ணத்தைப் பூங்கரங்களில் ஏந்தி இடை ஒசிய நடைபயிலும் இளம்பெண்; கூண்டிலிருந்து எடுத்து வெளியே விடப்பட்ட அழகானவொரு கிளி. பழகின கிளியானதால் பறந்தோடி விடாது. அதனிடம் அப்பெண் கெஞ்சுகிறாள்; கொஞ்சுகிறாள். அதற்குத் தேன்கலந்த பாலைத் தருவேன் என்கிறாள். அவள் வேண்டுவதெல்லாம் அந்தக்கிளி அவளுடைய உள்ளங்கவர்ந்தவனின் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயொருமுறை கூற வேண்டுமாம்.

       'சிறையாரும் மடக்கிளியே!' எனக் கொஞ்சும்போது சிவபாக்கியத்தின் கனியிதழ்களின் நெளிப்பையும் குரலின் தாபத்தையும் குழையும் உடலின் வனப்பையும் கண்டு கிறங்காத உள்ளங்களும் உண்டோ? பெரிய பண்ணையாராகட்டும், பக்கத்து ஊர் ராஜாவாகட்டும், தவில் வாசிக்கும் சின்னப்பனாகட்டும் அத்தனைபேரும் அவள் தனக்காகவே இப்பாடலைப் பாடுவதாக எண்ணி மயங்கினார்கள். பின்னே? சிவபாக்கியம் சின்னமேளம் எனப்படும் பரதக்கலையில் தேர்ந்தவள்; ருத்ரகணிகையான அவள் கோவிலின் பிரதம நடனமணிகளில் ஒருத்தி. அவள் அபிமானத்தையும் அன்பையும் கடைக்கண் வீச்சையும்பெற ஊர்ப்பெரிய மனிதர்களுக்குள் போட்டாபோட்டி.

       அவளுடைய உள்ளமோ அந்த ஈசனை, அவனிடம் காதலில் உருகும் அடியாளான ஒருத்தியை, அவள் உள்ளத்தவிப்பைத் தனது நடனத்தால் உருவகிப்பதிலேயே முனைந்திருந்தது. அதை அற்புதமாக அவள் ஆடிக் கொண்டிருந்தாள். துளிக்கூட விரசம் கலக்காத தாபத்தையும் காதலையும் வெளிப்படுத்தினாள். பின்னே இருக்காதா? அவளுடைய உள்ளம் அந்தப் பிரானின் பாதகமலங்களில் அல்லவா ஒன்றியிருந்தது. பார்வையாளர்களில் எவரையாவது நோக்கி ஒரு கண்வீச்சு, சங்கேதக் குறிப்பு, ம்ம்... துளியும் இல்லை! நடனத்தில் அவளுக்குப் போட்டியான அன்னக்கிளி கழுத்தை நொடித்துக்கொண்டு தனது தாயை ஏறிட்டாள். "அப்பப்பா! என்னா பக்தி பரவசம்!!" என்று இகழ்ச்சியாகக்கூறி நகைத்தாள் தாய்.

       அந்தப் பதினாறு வயது இளைஞன் ஓர் ஓரமாக ஒதுங்கி அமர்ந்து சிவபாக்கியத்தின் நடனத்திலும், பாடலிலும் தன்னைப் பறிகொடுத்திருந்தான். கூட்டத்தோடு கலந்து உட்கார முடியாமல் செய்துவிட்டது அவனுடைய உடல்பிணி. 'பாக்கியத்தக்கா! நீ குடுத்து வெச்சவ! சுவாமிய இப்பிடிப் போற்றிப் பாடி சந்தோஷப் படறியே!' என மனதில் எண்ணிக்கொண்டான். சிவபாக்கியமும் அவனும் நெருங்கிய நண்பர்கள். அவள் நட்டுவனாருடன் வீட்டில் பயிற்சி செய்யும்போதெல்லாம் அருகிருந்து பார்த்து மகிழ்பவன் அவன். அவன் பெயர் தாண்டவன். 

        தாண்டவனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டாமா? அவன் பெரியமேளம் எனும் பாணர் குலத்தைச் சேர்ந்தவன். சிறுவயதிலேயே தாய்தந்தையை இழந்தவன். வாலிபப் பருவத்தில் பெருநோய் எனும் தொழுநோய் அவனைப் பீடித்ததால் குலத்தொழிலை சரிவரக் கற்றுக் கொள்ள முடியவில்லை. உடன்சேர்த்துக் கொள்வாரும் இல்லை. உறவினர்களின் தயவில் உணவு கிடைத்தது. ஆயினும் அவனுக்கு எதைப்பற்றியுமே கவலையில்லை. அவனுடைய பொழுதுகள் தோணியப்பர் கோவிலில் சுவாமி, அம்பாள் சந்நிதிகளில் நின்று பூசைகளைக் கண்டு களிப்பதிலும், ஓதுவார்கள் பாடும் தேவாரத் திருவாசகப் பாடல்களைக் கேட்டு மகிழ்வதிலும் சென்றன. அப்படிப்பட்ட ஒரு பொழுதில்தான் சிவபாக்கியத்தின் பரிச்சயம் கிடைத்தது.

       திருக்கோவிலில் அவளுடைய நடன முறைநாளில் நடனம் ஆரம்பமாகும் முன்பு அவள் சுவாமி சந்நிதிக்கு வந்து தொழுவாள். அன்று ஆடப்போகும் நடனத்திற்கான பாடலை சுவாமி சந்நிதியில் கணீரென்று பாடுவாள். பின் நடனக் கூடத்திற்குச் சென்று நாட்டியத்தைத் தொடங்குவாள். அன்றும் அவ்வாறே வந்தவள்,

       'முத்தணி கொங்கைகள் ஆட ஆட

              மொய்குழல் வண்டினம் ஆட ஆட

       சித்தம் சிவனொடும் ஆட ஆட

              செங்கயல் கண்பனி ஆட ஆட

       பித்து எம்பிரானொடும் ஆட ஆட' என்று வசந்தா (தமிழ்ப்பண் வகையில் இதன் பெயர் அந்தி) ராகத்தில் பாட ஆரம்பிக்கிறாள். அடடா! என்ன அற்புதமான பாடல். சந்நிதியில் இருந்த சிறுகூட்டம் தலையாட்டி ரசிக்கின்றது. தாண்டவனுக்குப் புல்லரிக்கின்றது. பாடலே எவ்வளவு இனிமை! சொற்களும் நயங்களும் ..... ஆஹா!

       மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகத்தில் பெண்கள் கூடிப் பெருமானுக்காகச் சுண்ணமிடிக்கும் பாடல். அவர்கள் சுண்ணம் இடிக்கும்போது கொங்கைகளும் அணிந்துள்ள முத்தாரங்களும் ஆடுகின்றன. தலையசைந்து கூந்தல், கொண்டைகள் ஆடுவதால் அவற்றில் சூடியமலர்களை மொய்க்கும் வண்டுகளும் ஆடுகின்றன. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சுண்ணம் இடிப்பதிலேயே முனைப்பாக இருக்கும் பெண்களின் சித்தமும் அந்தச் சிவபிரானோடு சேர்ந்து ஒன்றி ஆடுகின்றதாம். அந்தப் பேரானந்த இறையனுபவத்தில் தம்மையும் மறந்து விட்டதனால் ஆனந்தக் கண்ணீர் பெருகியோட, தம்மையே மறந்து பித்தாகி இறைவனோடு உள்ளம் கலந்துவிட்டனராம் இப்பெண்கள்.

       'நான்' எனும் நினைவழிந்து இறையுடன் அன்போடு ஒன்றிவிடும் பேற்றினையல்லவோ இப்பாடல் விளக்குகிறது. தானே இறைவனுடன் எண்ணத்தால், செயலால் ஒன்றிவிட்ட பேரானந்த நிலையல்லவா இது என்று எண்ணிய தாண்டவனின் உள்ளத்தை உருக்கிவிட்டது இப்பாடல். ஐயனே! என் ஐயனே......... கண்ணீர் பெருக்கெடுக்கின்றது அவனுக்கு.

       கைகளைக் குவித்தவாறு தான் ஒதுங்கி நிற்கும் இடத்திலிருந்தே, "யார் அக்கா இந்தப் பாட்டைப் பாடியவர்?" என பவ்யமாகக் கேட்கிறான் தாண்டவன். ஒரு அழகான புன்முறுவலுடன், "மணிவாசகப்பெருந்தகை அப்பா," என விடையிறுக்கிறாள் அவள். கூப்பிய கரங்களுடனும் பெருகிவழியும் கண்ணீருடனும் அமர்ந்து அவளுடைய அபிநயத்தில் லயிக்கிறான். நடனமாடும்போது இடையிடையே தன் அபிமான ரசிகனின் உணர்வுகளை நோக்கி எடைபோட சிவபாக்கியத்தின் கண்கள் தவறவில்லை.      

    ப்படித் தொடங்கிய அவர்கள் நட்பு, தாண்டவன் பெரும் பொழுதுகளைச் சிவபாக்கியத்தின் வீட்டில் அவள் பாடும் பாடல்களை ரசித்த வண்ணமும், அவளுடைய அபிநயத்தில் ஆழ்ந்து ஆன்மாவையும் ஆண்டவனையும் பிணைக்கும் இசை, நாட்டிய நயங்களைக் கண்டு புளகாங்கிதம் அடைவதிலும் வளர்ந்தது. ஆனால் அவன் குடும்பத்தாருக்கு இவை பிடிக்கவில்லையே.

       "வாய்யா, வந்து சாப்பாட்டுக்கு உட்காந்திட்டியே, அந்த நாட்டியப்பெண் வீட்டிலேயே பழியாக் கிடக்கான்னு ஊர் உலகம் சொல்லுது. நம்ப குடும்ப மானம் சந்தி சிரிக்குது. இனிமேல் அங்க போகலேன்னு சொன்னாத்தான் உனக்கு வீட்டுச் சோறு," இது அவன் அத்தை.

       "அது மட்டும் முடியாது அத்தே, அப்பிடியானா எனக்கு சோறு வேண்டாம்," கையை உதறி எழுந்துவிட்டான் தாண்டவன். கோயிலில் ஒருவேளைச் சோறு கிடைக்கும்; அவன் வயிற்றுக்கு அது போதுமே! நாட்கள் ஓடின!

       அன்று சிவபாக்கியம் பாடி ஆடினது, 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்,' என்ற அப்பர் பெருமான் பாட்டுக்கு. தாண்டவன் ஆவல் மீதூர அப்பாடலுக்குக் கோயில் குருக்களிடம் விளக்கம் கேட்டுக் கொண்டான். 'அந்த இளம்பெண் முதலில் காதலனின் பேரைக்கேட்டாள்; பின் ஊரைக் கேட்டாள்; அவனிடம் அடங்காத காதல் கொண்டாள். தாய்தந்தையரை மறந்துவிட்டாள்; தனது ஒழுக்கங்களையும் கைவிட்டாள். தன்னையே மறந்துவிட்டாள்; தனது தலைவனின் தாள்களே கதி என்று ஆகிவிட்டாள்- (தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே)' என்ற பாடல்வரிகள் அவனுடைய ஊனையும் உயிரையும் உருக்கிப் பிழிந்தன.

       அவனுடைய இளம் உள்ளம் இப்போது சிந்தனை வசப்பட்டது. "அது ஏனக்கா அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்கிற எல்லாப் பெரியவர்களும் காதலன் - காதலி (தலைவன் - தலைவி) உறவில் அந்தப் பெருமானை அடைவதை உருகிஉருகிப் பாடியிருக்கிறாங்க?"

       சிவபாக்கியத்துக்கும் சரியாகத் தெரியவில்லை.

       "தம்பீ! பெரியவங்க, ராஜாமாருங்க எல்லாரும், நாங்க கோயிலில் நாட்டியமாடி சுவாமிக்கு வழிபாடு செய்யணும் என்று செய்திருக்காங்க. அதனால இந்தப் பாடல்களைப் பாடித்தான் ஆடறோம். இதுதான் வழக்கம்," என்று கூறிவிட்டாள். 

  ருநாள் பசிமயக்கத்தில் வாகனங்கள் வைத்திருந்த அறையில் மயங்கி உறங்கிவிட்டான் தாண்டவன். அறையும் பூட்டப்பட்டுவிட்டது. நள்ளிரவில் கண்விழித்தவன், பயத்திலும், பசியிலும், தனக்கு யாருமில்லையே எனும் பச்சாதாபத்திலும் விம்மி விம்மி அழலானான். கோயில் அர்ச்சகரின் மகள் போன்ற ஒரு சிறுமி அப்போது அங்குவந்து ஒரு ஏனத்தில் அர்ச்சகர் வீட்டு உணவை அளித்துப் பசி தீர்த்தாள்.

       "என்னப்பா, உனக்கு என்ன குறை? ஏன் வருத்தமாக இருக்கிறாய்?" என்றும் கேட்டாள்.

       "அம்மா, என் வயிற்றுப்பசி தீர்ந்தது; உடற்பிணி எப்போது நீங்கும்?" என்றான் தாண்டவன்.

       "அப்பா, நீ சிதம்பரம் செல்; அங்கு அந்த அம்பலவாணனைப் போற்றிப் பாடு, உன் உடல்பிணி தீரும்" என்றாள்.

       "தாயே! நான் முறையாகக் கற்றவனில்லையே! எவ்வாறு பாடல் எழுதுவேன்?" என்றவனிடம், "ஒவ்வொரு நாளும் நீ காதில் கேட்கும் முதல் வார்த்தையை வைத்துக்கொண்டு பாடல் எழுதப்பா," என்றுசொல்லி அவள் மறைந்ததும்தான் தாண்டவனுக்கு அச்சிறுமி உமாதேவியான அம்பிகையே எனும் எண்ணம் உறுதிப்பட்டது.

                                          *****

       நாட்கள் உருண்டோடின. தாண்டவன் இப்போது முத்துத்தாண்டவராகி தில்லை ஈசனைச் சேவிக்க சிதம்பரம் வந்துவிட்டார். தினமும் யாராவது ஒரு பக்தர் ஆடலரசனின் சன்னிதியில் கூறும் முதல் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு பாடல் எழுதி ஐயனுக்கு அர்ப்பணிப்பார்.  திருக்கோவிலில் கேட்ட முதல் சொல்லில் எழுந்த பாடல்தான் 'பூலோக கைலாசகிரி சிதம்பரம்.' தம் காதால் மட்டுமே கேட்டிருந்த தில்லையின் சிறப்புகளை நேரில் கண்டு ஆனந்தமாக வர்ணித்து எழுதிய பாடல் அது.

       தனது உடல்பிணி தன்னைவிட்டுச் சிறிதுசிறிதாக விலகுவதனை உணர்ந்து அகமகிழ்ந்தார். 'ஆடினதெப்படியோ?' 'மாயவித்தை செய்கிறானே,' எனும் பல அழகான பாடல்கள் நாள்தோறும் இவரிடமிருந்து தோன்றின. நாட்களும் நடனமிட்டு ஆனந்தமாக நகர்ந்தன.

       சிவபாக்கியம் இப்போது முதிர்கன்னி; ஆனால் நடனமும் நளினமும் அவளைவிட்டு விலகவில்லை. இறைவனுக்கு நாட்டிய வழிபாட்டுத் தொண்டாற்றி வந்தாள். முத்துத் தாண்டவரை பிரமபுரீஸ்வரர் சன்னிதியில் அவ்வப்பொழுது பார்ப்பாள். அப்படியான ஒரு தருணத்தில், "சாமி இப்போ சிதம்பரத்து ஆடலரசன் மேல நிறையப் பாட்டெழுதறீங்களாமே? எனக்கும் நாட்டியமாடப் புதுசா நாலு பாட்டெழுதிக் கொடுங்களேன்," என்றாள். "அதுக்கென்ன அக்கா, தருகிறேன்."

       அகத்துறை (சிருங்கார ரசம்) தோய்ந்த பாடல்களை எழுதுவது பற்றி அந்நாள்வரை முத்துத்தாண்டவர் சிந்தித்ததேயில்லை. அவர் பெரிதும் மதித்தது, வியந்தது, போற்றியது எல்லாம் மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகப் பாடல்களைத்தான். ஆனால் அதே மாணிக்கவாசகரிடம் தானே தில்லை ஈசன் 'பாவை பாடிய வாயால் ஒரு (அகத்துறைக்) கோவையையும் பாடச்' சொன்னார்?

       சிந்தித்தார் முத்துத் தாண்டவர்: 'ஆண் - பெண் (தலைவன் - தலைவி) இவர்களிடையே தோன்றி வளரும் பேரன்பை, காதலை, அருமையாக எடுத்துக்கூறி, உலகில் சிறந்த இல்லற வாழ்வில் ஈடுபட்டு, கடைசியில் இறைவனது பேரருளைப் பெறுவது பற்றி அருமையாக விளக்குவனவே அகத்துறை இலக்கியங்கள் (கோவை முதலியன). இவற்றில் இறைவன் ஒருவனே ஆருயிர்க் காதலனான தலைவன். அவனது அருளைப் பெற விழையும் மானிட ஆன்மாக்களே தாபத்தில் உருகும் காதலி, தலைவி அல்லவா?

       'இசை, நடனத்தின் வாயிலாக இறைவனைச் சேரும் அனுபவங்களை சராசரி மாந்தர்களுக்கு விளக்க, இத்தகைய பாடல்களே சிறப்பு; அதனால்தான் இத்தகைய இசை, நாட்டிய வழிபாடுகளை முன்னோர்கள் நம் கோயில்களில் ஏற்படுத்தினார்கள் போலும்,' என்று எண்ணினார்.

       அடுத்த நாள் சிதம்பரம் சென்றவர் செவியில், "தெருவில் சாமி வாரார்," என யாரோ கூறிய சொற்கள் விழுந்து, 'தெருவில் வாரானோ, சற்றே என்னைத் திரும்பிப் பாரானோ' என்ற பாடல் பிறக்க வழிசெய்தது.      

இளம்பெண்ணொருத்தி மலர்மாலைகளைத் தொடுத்துவைத்தும், மணங்கமழும் சந்தனத்தை அரைத்துவைத்தும் காதலனின் வருகையை எதிர்பார்த்திருக்கிறாள். அவன் வருகிறான். யாரவன்? அவன் தான் உருவமற்ற காமனையும் திரிபுரங்களையும் எரித்த நடராசன். அவன் என் வாசல்முன் வந்துநின்று ஒரு வாசகம் (காதல்மொழி எனவும் கொள்ளலாம்; திருவாசகத்துக்கொப்பான அருட்சொற்கள் எனவும் கொள்ளலாம்) சொல்லமாட்டானோ என ஏங்குகிறாள். ஆவலுடன் அவனை அணைப்பேன்; கரும்புவில்லேந்திய காமனை வெல்லுவேன் (இருபொருள் கொள்ளலாம்) என்கிறாள்.

       இதனைத் தொடர்ந்து 'பதம்' எனும் பாணியில் முத்துத் தாண்டவரிடமிருந்து பலப்பல சுவையான பாடல்கள் பிறந்தன. மாணிக்கவாசகரின் வழியில் சென்று தாமும் இத்தகைய பாடல்களை இயற்றினார் முத்துத்தாண்டவர். பின்னொருநாளில் மாணிக்கவாசகரைப் போலவே தாமும் தில்லை ஈசனுடன் ஒன்று கலந்தார்.

       பலப்பல நாட்டியமணிகள் இன்றும் இப்பாடல்களுக்கு நடனமாடி வருகின்றனர்.   

       'தெருவில் வாரானோ, என்னைச் சற்றே திரும்பிப் பாரானோ,'....... இது சௌராஷ்டிரம் (வியாழக்குறிஞ்சி) எனும் ராகத்திலமைந்தது. தற்காலத்தில் கமாஸ் ராகத்தில் பாடப்படுகிறது!

     இதோ அந்தப் பாடல்...

       பல்லவி

       தெருவில் வாரானோ என்னைச் சற்றே

       திரும்பிப் பாரானோ

                        அனுபல்லவி

       உருவிலியொடு திரிபுரத்தையும்

       உடன் எரிசெய்த நடனராசன்

                            சரணம் 1

       வாசல்முன் நில்லானோ எனக்கொரு

       வாசகம் சொல்லானோ

       நேசமாய்ப் புல்லேனோ - கழை வைத்த

       ராசனை வெல்லேனோ

       தேசிகன் அம்பலவாணன் நடம்புரி

       தேவாதிதேவன் சிதம்பரநாதன் (தெருவில்)

                           சரணம் 2

       போது போகுதில்லையே எனக்கொரு

       தூது சொல்வாரில்லையே

       ஈதறிந்தேனில்லையே என்மேல் குற்றம்

       யாதொன்றுமில்லையே

       தேவனுமாலும் மூவாயிரரும் சூழ

       விண்ணவரும் தொழ ஆடிய பாதன் (தெருவில்)

*********************

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com