சினிமா சான்ஸ்!

சிறுகதை
சினிமா சான்ஸ்!

 ஓவியம்: பிள்ளை

 “டேய் மணி, போன வாரம் பொள்ளாச்சியில எங்க பெரியம்மா வீட்டுக்கு போயிருந்தேன்டா... அங்கே ஒரு சூட்டிங்கு நடந்திட்டிருந்துச்சு. அந்தமாதிரி இடத்துக்கெல்லாம் நீ போனா ஏதாவது ஒரு சான்ஸ் கிடைக்குமில்லையா...”

நண்பன் சுரேஷ் சொல்வதைக் கேட்ட மணி சிரித்தான். “டேய்... கூட்டத்தோட கூட்டமா போய் நின்னா நம்மை எவன்டா மதிப்பான்...”

கொஞ்சம் யோசித்தவன், “சரி… அப்போ ஒன்னு பண்ணு. பத்து பதினஞ்சு போஸ்ல, போட்டோ எடுத்து உன் பேரு, மொபைல் நம்பரோட சினிமா கம்பெனிகளுக்கு அனுப்பு... எவன் கண்ணுலயாவது உன் போட்டோ சிக்காமால போகும்... உன் உடம்புவாகுக்கும், முகவெட்டுக்கும் கண்டிப்பா, ஒரு ஹீரோ இல்லேனா வில்லன் ரோலாவது குடுத்துடுவாங்க பாரேன்...”

சுரேஷ் சொன்னதைக் கேட்டதும் கொஞ்சம் பரவசமடைந்தான் மணி.  அதுவும் ஒரு நல்ல வழி என்று தோன்றியது. ஆனாலும் பணத்துக்கு என்ன பண்ணுவது...? அம்மாவிடம் கேட்டால் உதைக்காமல் விடமாட்டார்கள். ஒரு பத்து போட்டோக்களாவது அனுப்ப வேண்டுமே,  எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லையே...என்று யோசித்தபடி நின்றிருந்தவனை கவனித்து, “என்னடா யோசிக்கறே?” என்றான் சுரேஷ்.

தன்னுடைய கவலையைச் சொன்னான் மணி,

“அட... இதுக்கு ஏன்டா யோசிக்கறே...கையில மொபெட் இருக்கில்ல... அதுக்கு ரிப்பேர் பண்ணனும்னு சொல்லி ஐநூறு ரூபா வாங்கு. ஸ்டூடியோவுக்குப் போ, போட்டவை எடு, அனுப்பு... அப்புறம் என்ன, அகன்ற திரைல பார்ப்போம். போ...”

டக்கென ஒரு உத்வேகம் வந்தது. அம்மாவிடம் ஓடினான். சொன்னான். “ஏன்டா, திடீர்னு அவ்ளோ பணத்துக்கு நான் எங்கேடா போவேன்” என்றாள் அவள்.

“அம்மா கடுகு டப்பா, பர்ஸ்னு எங்கேயாவது பணத்தை மடிச்சு மடிச்சு வைச்சிருப்பே இல்லையா, தேடுமா... கிடைக்கும்...” என்றான். தேடினாள். கிடைத்தது. வாங்கிக்கொண்டு ஓடினான் ஸ்டூடியோவைத் தேடி. பத்து போட்டோக்களை எடுத்தான். சாயங்கலாமாக வந்து வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். திரும்பிவிட்டான்.

திடீரென்று சந்தேகம். எந்தக் கம்பெனிக்கு அனுப்புவது, அட்ரஸ் வேண்டுமே என்று யோசித்தான்.  போனவாரம் அவன் பார்த்த ஒரு படத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ, சென்னை என்று ஒரு கார்டு வந்தது. சரி… அதற்கே அனுப்பிவிடலாம் என்று முடிவு செய்துகொண்டான்.

சாயங்கலாமாக போட்டோ கிடைத்தது. கடைக்குப் போய் ஒரு கவர் வாங்கிவந்தான். ஒரு பேப்பரில் தனது பெயர், முகவரி, மொபைல் நம்பரை எழுதி போட்டோவுடன் வைத்து, முகவரியை எழுதி கவரில் போட்டு ஒட்டி, தபாலில் சேர்த்தான். காத்திருக்க ஆரம்பித்தான்.

சினிமா கம்பெனிலேர்ந்து போன் வருமா, அல்லது முகவரியைப் பார்த்து லெட்டர் ஏதும் போடுவார்களா என்று யோசித்துக்கொண்டே படுத்திருந்தவன் அப்படியே தூங்கியும் விட்டான்.

திடீரென்று மொபைல் அடித்தது. எடுத்தான்.

“சார்...நாங்க சென்னைல இருந்து பேசறோம்... உங்கே போட்டோ கிடைச்சது...”

குறுக்கிட்டான் மணி. “ஏ.வி.எம்.ஸ்டூடியோலேர்ந்தா பேசறீங்க...”

“ஆமாம் சார்... பெரிய பட்ஜெட்ல ஒரு படம் எடுக்கப் போறோம்... அதுல ரெண்டு வில்லங்க. உங்க முகவெட்டு ஒரு வில்லனுக்கு ஏத்ததா இருக்கு. நீங்க நடிக்கத் தயாரா... சரின்னா... நீங்க உடனே சென்னைக்கு வரணும். எங்க டைரக்டர் கதை சொல்லுவார். உங்களுக்கு பிடிச்சிருந்தா உடனே அக்ரீமென்ட் போட்டுடலாம்...அடுத்த மாசம் பொள்ளாச்சி, அப்புறம் முதுமலைனு சூட்டிங் நடக்கும் ... “

உடனே எவ்வளவு பணம் தருவார்கள் என்று கேட்க நினைத்து சட்டென மனதை மாற்றிக்கொண்டான்.

“ச்சே...ச்சே...நமக்கு சான்ஸ் கிடைத்தே கடவுள் புண்ணியம்... ஒருவேளை அவர்களாகவே ஐந்து லட்சமோ பத்து லட்சமோ கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம்...” என்று நினைத்துக்கொண்டவனாய், “சரிங்க... நான் ரெடி...” என்றான்.

“ ரொம்ப சந்தோஷம் சார்... டைரக்டர் சங்கரோட அசிஸ்டன்ட் உங்களை கூப்பிடுவார்....”‘

குறுக்கிட்டான் மணி, “இந்த இந்திரன், சிவாஜி, இந்தியன்லாம் டைரக்ட் பண்ணுனாறே அந்த சங்கரா...”

“அவரேதான்...அவரோட அசிஸ்டன்ட் உங்களுக்கு போன் போட்டு நீங்க சென்னைல எந்த ஹோட்டலுக்கு வரணும்னு சொல்லுவார்...”  போன் கட்டானது.

“மணி...மணி....” என்று சத்தம் போட்டபடி அம்மா தட்டி எழுப்ப, திடுக்கிட்டு எழுந்தான்.

“ஏண்டா... ஒரு தபால் கவர் வந்திருக்குடா...” என்று கவரை நீட்டினாள்.

அவன் ஸ்டூடியோவுக்கு அனுப்பிய கவர், “சரியான விலாசமில்லை” என்று குறிப்பிடப்பட்டு அவனுக்கே திரும்பி வந்திருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com