அப்பாவின் தோட்டம்!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி – 2022
அப்பாவின் தோட்டம்!

ஓவியம்: சேகர்

பரிசுக்கதை – 12   

நடுவர் பார்வையில்...

அழகான தன் தோட்டத்தையும், அப்பாவையும் நேசிக்கும் பெண்ணின் மனப்போராட்டம். மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தாய் என ஒரு பெண்ணின் உணர்வுகள் தெளிவான நடையில் சொல்லப் பட்டிருக்கிறது.

ப்ரஸன்னா வெங்கடேஷ்
ப்ரஸன்னா வெங்கடேஷ்

ளர்மதி எத்தனை நேரம் அதே இடத்தில் உட்கார்ந்தி ருந்தாள் என்று அவளுக்கே தெரியாது. கோயில் பணியாள் வந்து, “அம்மா, கோயில் கதவை மூடணும்” என்று தயங்கியபடியே சொன்னதும்தான் எழுந்துகொண்டாள்.  கைகள் தன்னிச்சையாகச் செல்போனை நாடின. அவள் கணவன் ஜெயந்தன் மூன்றுமுறை கால் செய்திருந்தான். அவளால் போனை மட்டும்தான் ஸைலண்ட் செய்ய முடிந்திருந்தது.  அவள் மனமோ எண்ணங்களால் கொதித்துத் தளும்பிக்கொண்டிருந்தது. மெதுவாகச் சுதாரித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வளர்மதி. 

“என்ன மதி, இன்னிக்கு இந்நேரத்துக்கு கோயில்லேர்ந்து வரியே?  தினமும் டிபன் செய்யணும்னு அரக்கப் பரக்க ஓடுவ?” என்று விசாலம் கேட்டாள்.

“என்னவோ அக்கா, இன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரம் சாமிகிட்ட இருக்கணும்னு தோணுச்சு...” என்று சமாளித்தாள். 

“சரி, சரி. நான் பழம் வாங்க வந்தேன்.  பாத்து போ.  தெருவிளக்கு வேற எரியல” என்று சொல்லிச் சென்றாள் விசாலம். 

இன்றைக்கு நேற்றைக்கா வளர்மதி கோயிலுக்கு வருகிறாள். அவளுக்குத் திருமணம் ஆன முதல் நாள், கணவன் ஜெயந்தனோடு வந்தாள். சிகப்புப் புடைவையில் ரோஜா மலர்களைச் சூடிக்கொண்டு அம்பிகை தெய்வீகமாய் இருந்தாள். அன்றிலிருந்து சந்தோஷமோ, வருத்தமோ எல்லாமே அந்த அம்பாளோடு பகிர்ந்து கொள்வாள். ஒரு நாள் கோயிலுக்குப் போக முடியவில்லை என்றால்கூட அவள் மனம் தவித்துப் போய் விடும்.

வீட்டை அடைந்தவுடன், ஜெயந்தன் கவலையுடன், “என்ன மதி, நீ இப்பிடி வெசனமாவே இருந்தா மட்டும் எல்லாம் மாறிடப் போகுதா? நம்மளால செய்ய முடிஞ்ச விஷயத்த பத்தி யோசிக்கலாம்.  நம்ம கைக்கு மீறின விஷயத்துல என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். 

இன்னும் ஒரு வாரம் இருக்கிறதே. அதற்குள் ஏதாவது அற்புதம் நிகழாதா என்று வளர்மதி நினைத்தாள். சூடான இட்லிகளையும் தக்காளி சட்னியையும்  தட்டில் வைத்து ஜெயந்தனிடம் தந்தாள். டிவியில் யாரோ மாடித்தோட்டத்தைப் பற்றி விளக்கிக் கொண்டி ருந்தார்கள். வளர்மதியின் மனம் கோயமுத்தூரில் உள்ள அவள் பிறந்த வீட்டை நோக்கிச் சென்றது. 

“அம்மா, இன்னும் கொஞ்சம் நீளமா பூ வெச்சி விடுங்க. எனக்குத்தான் முடி நெறய இருக்கே” என்று வளர்மதி ஸ்கூலுக்குப் போகும்போது அடம் பிடிப்பாள். “உனக்கு முடி இருக்கு, பூவும் நிறைய இருக்கு. ஆனா, காலங்கார்த்தால யாரு இத்தனை பூவைத் தொடுக்கிறது? நீ பாட்ல படிப்பு, பாட்டுன்னு ஓடுற. சமையல்ல எனக்கு உதவி செய்யறியா ஒரு நாளைக்காவது? போ, கொஞ்சம் கறிவேப்பிலை பறிச்சுகிட்டு வா. ரசத்துல போடணும்” என்று வளர் மதியின் அம்மா சொல்வாள். கீரையோ, வாழை யிலையோ, பச்சைமிளகாயோ… எல்லாமே அவர்களுடைய வீட்டுத் தோட்டத்தில் விளைந்ததுதான். பூஜைக்கும் தலையில் சூடிக்கொள்வதற்கும் குண்டு மல்லியும் நித்திய மல்லியும் பூத்துக் குலுங்கும்.  அந்தப் பக்கம் போனாலே, மனதை மயக்கும் மணம் வீசும்.  எல்லாமே வளர்மதியின் அப்பாவின் உழைப்பு. தோட்டம் போடுவதில் அவருக்கிருந்த அலாதி ஆசை...  இதனால்தான் பூ, காய், பழங்கள் என அவர்கள் வீடு பசுமை மயமாய் இருக்கும்.

வீட்டு வாசலில் இரண்டு பக்கமும் செம்பருத்திச் செடிகளும் கனகாம்பரச் செடிகளும் பூத்து நிற்கும். கொய்யா மரம் காய்த்துத் தள்ளும்.  தோட்டக்காரர் வீடு என்றே தெருக்காரர்கள் அவர்கள் வீட்டைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள்.  வளர்மதி படிப்பதே தோட்டத்தில் அமர்ந்துதான்.  பறவைகளையும் அணில்களையும் ரசித்துக்கொண்டே வீட்டுப் பாடம் எழுதுவாள். அவளுடைய அப்பா,  “ஏ மதி, இங்கிட்டு வா.  அந்த மஞ்ச ரோஜாச் செடி மூணு மொட்டு விட்டிருக்கு பாத்தியா. தக்காளிச் செடியில காய் வந்திருக்கு பாரு” என்று ஆசைஆசையாய் ஒவ்வொரு செடியாய் பார்த்துக் கொண்டு வருவார்.  அப்போது அவர் முகத்தில் தெரியும் சந்தோஷம், ஒரு விதமான பெருமை, நெகிழ்வு … அதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றும் வளர்மதிக்கு.

வளர்மதியையும் சேர்த்து மூன்று குழந்தைகள். அண்ணன், அக்கா, கடைசி கடைக்குட்டி வளர்மதி. ஆனால், மற்ற இருவருக்கும் செடி, கொடியின் மீது பெரிய ஆசை இல்லை.  வளர்மதி மட்டும் ஸ்கூல் விடுமுறை என்றால் தோட்டத்திலேயேதான் இருப்பாள்.  அண்ணனுக்கும் அக்காவுக்கும் கல்யாணம் ஆனது.  இவர்கள் வீட்டு வாழைமரத்தைத்தான் கல்யாண சத்திர வாசலில் கட்டினார்கள்.  அக்கா மதுரையில் வாழ்க்கைப்பட்டாள்.  மாசா மாசம் அம்மா வீட்டுக்கு வரும்போது மாங்காய், தேங்காய், கொய்யா, வாழைப்பழம், எலுமிச்சை, நெல்லி,  மல்லி என்று அள்ளிக்கொண்டு போவாள்.  “என்னடி, இன்னும் தோட்டம், செடின்னு பைத்தியமா இருக்கியா? நாளைக்குக் கல்யாணம் ஆனா புருஷனைக் கவனிக்காம இருந்துடப் போற” என்று வளர்மதியைக் கிண்டல் செய்வாள்.

ஒரு நாள் இரவு பூராவும் பேய் மழை பெய்தது.  காற்று வேறு வீசி வீசி அடித்ததில், ரெண்டு வாழைமரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன.  காலையில் அப்பா போய் தோட்டத்தைப் பார்த்துவிட்டு, வாழைமரங்களின் பக்கத்தில் அமர்ந்து விசும்ப ஆரம்பித்து விட்டார்.  வளர்மதிதான் அப்பாவின் தோளைத் தட்டி ஆறுதல் சொன்னாள். “அப்பாவும் பொண்ணும் உருகினது போதும். சேத்துத் தண்ணில நிக்காதீங்க” என்று விரட்டினாள் அம்மா. இரண்டு மூன்று நாட்கள் அப்பா முகம் சுரத்தாகவே இல்லை. 

வளர்மதிக்குக் கல்யாணம் என்று பேசத் தொடங்கியதும், “எனக்கு இதே ஊர்ல மாப்பிள்ளை பாருங்கப்பா.  இந்த தோட்டத்த, செடிகளைப் பாக்காம என்னால இருக்க முடியாது” என்று கூறினாள். 

“ஆமாண்டி, கல்யாணம்னா எத்தனை விஷயம் பாக்கணும்? நீ என்னாடான்னா புதுசா கண்டிஷன் போடுற” என்று வளர்மதியின் அம்மா சிடுசிடுத்தாள்.

ஆனால், அமைந்ததென்னவோ சென்னை மாப்பிள்ளை தான்.  ஜெயந்தன் ரொம்ப நல்ல மாதிரியாக இருந்தான். மனைவியின் செடிகள் மீதான ஆசையைப் புரிந்து கொண்டு, வீட்டு பால்கனியில் தொட்டிகளில் செடிகள் வளர்க்க உதவினான்.  ஆனால்,  மாதம் ஒரு முறை கோயமுத்தூர் சென்று இரண்டு நாட்கள் தங்கி ஆசைதீர தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்த்து விட்டுத்தான் வருவாள் வளர்மதி.

தன் ப்ரசவத்தின்போது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அம்மா வீட்டில் தங்கிய சமயம், தோட்டத்தில் அங்கும் இங்கும் நின்று போஸ் கொடுத்தபடி தன் அப்பாவை போட்டோக்கள் எடுக்கச் சொன்னாள்.  அப்பாவால் முன் போல ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை.  குனிந்து நிமிர்ந்து, பைப்பைத் தூக்கி செடிகளுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் முட்டி வலி வேறு. 

“இன்னும் என்னத்துக்கு இத்தனை செடிகளை வெச்சிருக்கீங்க.  நீங்க பாட்டுக்கு முடியலன்னு உக்காந்துடறீங்க.  என்னால சமையல் வேலை, தோட்ட வேலைன்னு பாக்க முடியல. எனக்கும்தான் வயசாகுது. ரெண்டு பொண்களுக்கு ப்ரசவம் பாத்து ஓஞ்சுட்டேன்” என்று அம்மா அலுத்துக்கொள்வாள்.

அண்ணன் குடும்பத்தோடு கல்கத்தாவில் இருந்தான்.  ஒரு தடவை வளர்மதி அம்மா வீட்டுக்குப் போனபோது, அப்பாவுக்கு உடம்பு முடியவில்லை. அப்போது கூட, “மதி, இத்தன வருஷம் காய்க்காம இருந்த முருங்கக்கா நல்லா காச்சிருக்குமா.  நீ போறச்ச எடுத்துட்டுப் போ...” என்று அன்புடன் சொன்னார். அடுத்த தடவை வளர்மதி போனது அப்பாவின் மறைவுக்குத்தான்.  தோட்டத்தில் மலர்ந்த ரோஜா, அரளி மாலைகள் அவர் உடலை அலங்கரிக்க அவரின் கடைசிப் பயணம் நடந்தது.  கடைசி காரியங்கள் முடிந்த பிறகு வளர்மதி அம்மாவிடம், “அம்மா, உங்களால முடியலைன்னா யாராவது ஆளயாவது வெச்சு தோட்டத்த பாத்துக்குங்க” என்று அழுதபடி சொன்னாள்.

ஆனால், அம்மா அண்ணனோடு கல்கத்தாவுக்குப் போய் விட்டாள்.  பராமரிப்பவர்கள் யாருமின்றி செடிகள் தானாகவே வாடி வதங்கி இறந்து விட்டன.  எத்தனையோ இரவுகள் இதை நினைத்து வளர்மதி கண்ணீர் உகுத்திருக்கிறாள்.  எப்படியாவது கோயமுத்தூர் போய் விட வேண்டும் என்று அவ்வப்போது ஒரு வேகம் வரும்.  ஆனால், கணவனின் வேலை, குழந்தைகள் படிப்பு என்று ஆயிரம் விஷயங்களால் அவளது ஆசை அமுங்கிவிடும்.  இப்போது… அண்ணன் அந்த வீட்டை விற்று விடப் போகிறானாம்.

இந்த விஷயத்தை அம்மா போனில் சொன்னபோதுதான் வளர்மதி மிகவும் வேதனைப் பட்டாள்.  “யாரும் அந்த வீட்டைப் பாத்துக்க இல்லை.  உங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் நேரமே கிடையாது.  நானும் இனிமேல் அங்க வந்து தனியா இருக்க முடியாது. இங்க, உங்க அண்ணன் குழந்தைகளைப் பாத்துக்கணும். அதுவும் தவிர, எனக்கும் இப்பல்லாம் அடிக்கடி டாக்டரைப் பாக்க வேண்டியிருக்கு” என்று அம்மா அடுக்கடுக்காய் காரணங்களைச் சொன்னாலும் வளர்மதியின் மனம் சமாதானமாகவில்லை. 

ஆனால்,  அவளால் என்ன செய்ய முடியும்.  கோயிலில் தன்னை மறந்து கவலையோடு உட்கார்ந்ததோடு சரி. பிறகு வீட்டு வேலைகள். குழந்தைகளின் படிப்பு என்று நாட்கள் பறந்தன. 

கடைசியாய் ஒரு முறை வீட்டுக்குப் போய் பார்த்து விட்டு வருகிறேன் என்று அவள் சொன்னபோது, ஜெயந்தன் “வேணாம் மதி. உன் மனசு இன்னும் சங்கடப்பட்டுப் போய் பிபி அதிகமாகும்” என்று சொல்லி நிறுத்தி விட்டான்.  அன்றுதான் வீட்டை வாங்கப் போகிறார்கள். காலை யிலிருந்து வளர்மதி திடீர் திடீர் என்று பொங்கி அழுவதும் சமாதானமாவதுமாய் இருந்தாள். அப்போதுதான் தினசரியில் வந்த விளம்பரத்தைப் பார்த்தாள். 

தாம்பரம் தாண்டி கணபதி ஃபார்ம்ஸ் என்று ஒரு அழகான தோட்டம் விலைக்கு வந்திருந்தது.  உடனே போன் செய்து பேசினாள்.  அவர்கள் அந்த நிலத்தை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் அனுப்பினார்கள். தென்னை மரங்கள், பூச்செடிகள், வெற்றிலைக் கொடிகள் என்று பார்க்க அழகாய் இருந்தது. எட்டு லட்சம் என்று விலை சொன்னார்கள். கோயமுத்தூரில் வீடு விற்கப்பட்டு வளர்மதியின் பங்காக பத்து லட்சம் தந்தார்கள். அந்தப் பணம் வந்த ரெண்டே நாட்களில், வளர்மதி கணபதி ஃபார்ம்ஸை வாங்கி விட்டாள். புதிதாய் வேப்பங்கன்றுகளையும் அப்பாவுக்குப் பிடித்த நந்தியாவட்டைச் செடியையும் நட்டு வைத்தாள். “அப்பா, உங்க பேர்லயே ஒரு தோட்டம் வாங்கிட்டேன்” என்று ஆனந்தக் கண்ணீருடன் மானசீகமாய் அப்பாவிடம் சொன்னாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com