‘சிநேகம்’

சிறுகதை
‘சிநேகம்’

ஓவியம்: வேதா

டுத்தபடியே வாசித்துக்கொண்டிருந்ததில் கழுத்தும் கைகளும் வலித்தன. சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி வேறு கண்களை எரிச்சலடையச் செய்ய,
‘ஏசி போட்டிருக்கலாமோ?’ என்று தோன்றியது. சுகுமார் இருந்தால் இந்நேரம் நிலைமையே வேறு. ஒன்பதரைக் கெல்லாம் ஏசியை ‘டாண்’ என்று ஆன் செய்து விடுவார். காலை ஆறு வரை ஓடிக்கொண்டிருக்கும். அவளுக்குத்தான் ஏசியின் ஜில்லிப்பு பிடிக்காது.

 படுக்கையில் சாய்ந்தபடி அவர் வாட்ஸ் அப்பிலோ, முகநூலிலோ ஆழ்ந்திருக்க, இவள் நாற்காலியில் அமர்ந்தபடி சுந்தரராமசாமியிலோ, ஜெயமோகனிலோ கவனம் கொண்டிருப்பாள். இரண்டடி தூரம்தான். ஆனால், இருவரும் வெவ்வேறு உலகத்தில்.... காமெடியோ, மீம்சோ, பட்டிமன்றமுமோ... ஏதோ ஒன்றைப் பார்த்துவிட்டு அவர்
தன்பாட்டில் சிரித்துக்கொண்டிருப்பார். பதினொன்றரை வாக்கில்  கண்கள் தூக்கத்துக்கு ஏங்கும் வரையோ அல்லது செல்லில் சார்ஜ் தீரும் வரையோ பார்த்துவிட்டு ‘சரி, படுக்கலாமா...?’ என்ற சம்பிரதாயக் கேள்வியுடன் விளக்கணைத்துவிட்டு முதுகு காட்டி உறங்கி விடுவார்.

இவளுக்குத்தான் சட்டென்று உறக்கம் வராது. பலநாட்கள், கதவை மென்மையாகச் சாற்றிவிட்டு வெளியேறி, ஹாலில் அமர்ந்து வாசிப்பைத் தொடர முயற்சிப்பாள். புத்தி வரிகளில் நிலைக்காது. மனசு விழித்துக்கொண்டு விடும்.

‘’ஏன் எனக்கு மட்டும் எளிதில் உறக்கம் வர மறுக்கிறது சமீபகாலமாக..? அறுபது எழுபதுகளில்தானே இந்தப் பிரச்னை வரும் என்பார்கள். இப்போது ஐம்பத்தியிரண்டுதானே ஆகிறது?’’ ஆனால் பத்து வயது குறைச்சலாகவே காண்பிக்கும் தோற்றம் அவளுக்கு. டில்லியிலிருந்து லீவுக்கு வரும் ஆறு வயதுப் பேரன் மிதுனுடன்  வெளியில் சென்றால் பாட்டி, பேரன் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள் புதியவர்கள்.

பாந்தமாக காட்டன் சேலையணிந்து, ‘’ஏங்க, புது புடவை நல்லா இருக்கா?’’

கண்கள் மின்னக் கேட்பவளிடம், நிமிர்ந்து கூடப் பார்க்காமல், லேசான தலையசைப்பு மட்டுமே பதில். கண்கள் டிவியில் ஆழ்ந்திருக்க, கைகளும் வாயும் இயந்திரத்தனமாக உணவை ஆள... ‘’ஏங்க புதுவிதமான டிஷ். யூ - டியூப் பார்த்து செஞ்சது. எப்படி இருக்கு?’’ இவள் கேட்கும்போது, புருவம் சுளித்து ரிமோட்டை எடுத்து பாஸ் மோடில் போட்டு, “என்ன  கேட்டே?” என்ற எரிச்சல் கேள்வியில் ஆர்வமும், ஆவலும் சுத்தமாய் வடிந்துபோகும் அவளுக்கு. ஏதோ முன்பின் தெரியாத ஒருவருடன் உணவருந்துவதைப் போன்ற இறுக்கம் சூழும்.

இதே சுகுமார்… திருமணமான புதிதில், பின்னாலேயே சுற்றி சுற்றி வந்தவர்தானே? அவளுக்கு அறவே சத்தம் பிடிக்காது. அவரோ டேப்பில் ‘பேட்டரேப்’ பாட்டை அலறவிட்டு, நடனமாடியபடியே, அவளையும் இழுத்து ஆடவைத்து... ரயில் பயணங்களில் எதிரில் இருப்பவர்களைப்பற்றி கவலையே படாமல் அவள் கைகளைக் கோர்த்தபடி எத்தனை உரையாடல்கள்? எத்தனை சந்தோஷங்கள்? டெக் எனப்படும் வி.ஸி.பியில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் அவர் மடிமீது அப்படியே தூங்கிப் போவாள். இரண்டு மணி நேரம் கூட அசையாமல் உட்கார்ந்திருப்பார் அவள் நித்திரையை கலைக்க விரும்பாமல்.

 ‘எப்போதிருந்து இந்த விலகலும், இடைவெளியும்?  பத்து, பனிரெண்டு பொதுத் தேர்வுக்கு தயாராகும் மகளின் மேல் கூடுதல் கவனம் செலுத்த  இரவில் அவளுடன் கண்விழித்து, படுக்கையில் விழுந்த மாமியாருக்கு தொடர்ந்து நான்கு வருடங்கள் பணிவிடைகள் செய்து... மதுவின் திருமணம், பிள்ளைப்பேறு என அலைந்து, கண்விழித்து... நாற்பத்தைந்துக்கு மேல் முதுகு வலி, இடுப்பு வலி, சீரற்ற மாதவிடாய் தொந்தரவுகள்,  ஹார்மோன் இம்பேலன்ஸ் சிகிச்சைகள் என அவள் ஒரு புறம் ஓட, பிசினஸ், பிசினஸ் என அவர் மறுபுறம் ஓடி, வீட்டிலிருக்கும் நேரங்களில் செல்போனில் தன்னை ஐக்கியமாகிக்கொள்ள, இவளுக்கோ வாழ்க்கை  உப்புச் சப்பின்றி நகரத் தொடங்கியது.

ஐம்பத்தைந்திலும் கம்பீரமாய் வலம் வரும் கணவன், சொந்த வீடு, சொகுசுக் கார், நகைகள், சவுகரியங்கள்... ஆனால், மனதில் மட்டும் ஏன் இந்தத் தீராத வெறுமை?  அதிலும் இந்த முப்பது வருடத் தாம்பத்தியத்தில், கடந்த பத்து வருடங்களாகவே எதிலும் பிடிப்பின்றி களைப்பும் சலிப்புமாய் நகரும் நாட்கள்...

‘முன்புபோல ஏன் இவர் என் மீது அக்கறை காட்டுவதில்லை? என் முகம் பார்த்து பேசி, சிரித்து பல யுகங்கள் ஆனது போலத் தோன்றுகிறதே...?’ அவருடைய அருகாமைக்கு ஏங்கிற்று மனது. நடுத்தர வயதில் கணவனும், மனைவியும் நல்ல புரிதல் உள்ள சிநேகிதர்களாக வாழ்வது எவ்வளவு கொடுப்பினை? சிறு பெண் போல இவர் கைப்பிடித்து நடக்க வேண்டும். கண்கள் பார்த்து பேசியபடியே உண்ண வேண்டும். இரவுகளில், மொபைலைத் தூக்கிக் கடாசிவிட்டு, பால்கனியில் அமர்ந்து உறக்கம் வரும் வரை பழைய கதைபேசி, குட் நைட் சொல்லி உறங்கவேண்டும். இது போதும் எனக்கு. ஆனால், நடக்கிற காரியமா இது? பெருமூச்சு எழுந்தது அவளுள்.  

மணி ஒன்றைத் தொட, மொபைலை எடுத்துப் பார்க்கையில் வெளியூர் சென்றிருக்கும் சுகுமாரிடமிருந்து ‘ரயில் ஏறி விட்டேன். காலையில் வருகிறேன்’ என்ற குறுஞ்செய்தி வந்திருந்தது. சுவாரஸ்யமின்றி வாட்ஸ் அப்பில் கண்களைப் பதித்தாள். ‘அன்பு மிகச்சிறந்த பரிசு; அதைக் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷம் தரும்’ என்ற தோழியின் ஸ்டேட்டஸ் சட்டென்று அவளை மின்னல் போல தாக்கியது. பெறுவதைப் பற்றி மட்டும் நான் குறைப்படுகிறேனே... கொடுப்பதைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை? இந்த உப்புச் சப்பில்லாத வாழ்க்கைக்கு பாதிக் காரணம் நானும் தானே?

‘நான் நினைப்பது போல அவரும் நினைத்தால்...? அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் நடந்துகொள்கிறேனா? நாள் முழுக்க இடைவிடாத உழைப்பு, வியாபாரத்தில் எத்தனையோ சறுக்கல்கள், ஏமாற்றங்கள்... என்றைக்காவது அவரிடம் அதைப்பற்றி பேசியிருப்பேனா? பிஸினஸ் அவருடைய ஏரியா. அதில் எனக்கு என்ன வேலை என்று ஒதுங்கித்தானே இருந்தேன்? என்ற கேள்விகளுடன் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலையில் வந்து நின்ற சுகுமாரை, ‘வெல்கம் டியர்’ என்று வரவேற்றாள். முன்புபோல எட்ட நின்று, ‘பிரஷ் பண்ணுங்க, காபி போடுறேன்’ என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழையாமல், சோபாவில் அருகில் அமர்ந்துகொண்டாள். ‘’எப்படி இருந்தது ட்ரிப்?’’ என்று அவர் கண்களுக்குள் ஊடுருவிக் கேட்டவளை வியப்பாய் பார்த்தாலும், தன் புது வியாபார ஒப்பந்தங்களைப் பற்றி பத்து நிமிடங்கள் ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார்.

‘’என்னங்க, இந்த பிங்க் கலர் சர்ட் உங்களுக்கு அம்சமா இருக்கு. அப்புறம், இனிமே நான் பக்கத்து வீட்டு அனிதா கூட சாயந்திரம் வாக்கிங் போக மாட்டேன். காலையில உங்க கூடத்தான் வருவேன். பகல்ல புக் படிப்பேன். நைட்டு உங்க கூட சேர்ந்து கொஞ்ச நேரம் ஆக்சன் படம் பார்ப்பேன். சரியா…?’’ குழந்தையின் குதூகலத்துடன் கூறியவளை ஆச்சர்யமாகப் பார்த்து ‘’இது என்ன புதுசா இருக்கு?’’ என்றார். ‘’புதுசு இல்லைங்க... மறந்துபோன பழசுதான்’’ சிரித்தபடி, சலுகையுடன் தோளில் சாய்ந்தவளை மெல்ல அணைத்துக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com