காவடி ஆட்டமும் காந்திமதியின் காதலும்...

காவடி ஆட்டமும் காந்திமதியின் காதலும்...

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப்போட்டி – 2022

ஓவியம் - இளையபாரதி

பரிசுக்கதை – 8

நடுவர் பார்வையில்...

ஊரே மறைக்கப் பார்க்கும் விஷயத்தை பெற்ற தாய் பகிரங்கம் ஆக்கிவிடுகிறாள். அதுதான் கிராமத்து வெள்ளை மனம்.

காவிரியாற்றிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் பழனி செல்லும் வழியில்  வேப்பம்பாளையம் இருந்ததால் பங்குனி உத்திரம் சமயத்தில் வருடா  வருடம் அந்த ஊருக்கு களை கட்டும்.    காவிரியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு நடைப் பயணமாக பழனி செல்லும் பக்தர்கள் இந்த ஊரைக்கடந்துதான் செல்ல வேண்டும். பங்குனி உத்திரத்தன்று பழனியில் இருக்க வேண்டுமாதலால், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இருந்தே காவடிக் குழுக்கள் காவிரிக் கரையில் இருந்து கிளம்பி விடும்.  

அப்படி தீர்த்தம் எடுத்துக்கொண்டு கிளம்பும் காவடிக்குழுக்கள், பகல் நேரம் வழியில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு  விடிய விடிய நடக்கத்தொடங்கும்.   அப்படி இவர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது உடன் வந்திருக்கும் சமையல் ஆட்கள் இவர்களுக்கான உணவைத் தயார் செய்யத்தொடங்குவார்கள்.  சமையல் முடியும் வரை இவர்கள் ஓய்வெடுக்கும் வேளையில், இவர்கள் உடன் அழைத்து வந்திருக்கும் நடனக் கலைஞர்கள் மேள தாளத்துடன் கரகாட்டம், காவடியாட்டம் போன்றவற்றை நிகழ்த்தி இவர்கள் களைப்பைப்போக்குவார்கள்.

வேப்பம்பாளையம் பெயருக்கேற்றவாறு மரங்களும், மணல்வெளிகளும், நீர் வசதியும்கொண்ட ஊராக இருந்ததால், அந்த வழியில் வரும் காவடிக்குழுக்கள் இங்கு தங்காமல் போனதில்லை. அதற்கு ஏற்றாற்போல் அந்த ஊர் மக்களும் விருந்தோம்பலில் சளைக்காமல் உத்திரத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஏற்பாடுகள் செய்யத் தொடங்குவார்கள்.   ஊர்ப்பெண்கள் தண்ணீர்ப் பந்தல் என்ற அந்த விசாலமான இடத்தை சாணமும், சுண்ணாம்பும் இட்டு மெழுகுவார்கள்.

இளைஞர்கள் போட்டி போட்டி போட்டுக்கொண்டு பச்சைத் தென்னை மட்டைகளையும், இளநீர்க் காய்களையும் வெட்டி தங்களின் வண்டி மூலம் கொண்டு வந்து தண்ணீர் பந்தலில் இறக்கிப்போடுவார்கள்.

யதில் மூத்தவர்கள் இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து தென்னை மட்டைகளைப்பின்ன ஆரம்பித்து விடுவார்கள்.  அடுக்கி வைத்திருக்கும் மூங்கில்களை நட்டு பந்தலும் போடப்பட்டுவிடும். இந்தப் பந்தலில் இருந்து கொண்டுதான் காவடி எடுத்து வருபவர்களுக்கு தண்ணீர், நீர்மோர், பானகம் என்று கேட்பதற்கு ஏற்றாற்போல் விநியோகிக்கப்படும்.  இளநீர் மாத்திரம் பச்சைப்ப‌ட்டினிக்காரர்களுக்கு (எதுவும் சாப்பிடாமல் விரதத்தோடு வருபவர்கள்) மட்டும் வழங்கப்படும்.

இதில் எல்லா வயதினராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, ரசிக்கப்படும் நிகழ்ச்சி காவடியாட்டம்தான்.  சிறுவர் களுக்கு கோமாளி, பபூன் ஆகியோரின் வேடிக்கைகள், இளையோருக்கு குறவன், குறத்தி மற்றும் கரகாட்டம் (இரட்டை அர்த்தத்தில் இவர்கள் பேசும் பேச்சுக்கள் கிளுகிளுப்பூட்டும்) பெரியோர்களுக்கு காவடி மற்றும் மேள வாத்தியங்கள் போன்றவை பிடித்தமானவை.  அவர்களுக்கு ஏமாற்றம் கொடுப்பது என்னவென்றால் ஒரு இடத்தில் கரகாட்டம் களை கட்டும்போது வேறொரு இடத்தில் குறவன் குறத்தி ஆட்டம் பட்டையக் கிளப்பும். இதைப் பார்ப்பதா, அதைப் பார்ப்பதா என்ற குழப்பம் வரும். சிறுவர்கள் இங்கேயும் அங்கேயும் அலைபாய்வார்கள்.  தண்ணீர்ப் பந்தலின் மதிலை ஒட்டியுள்ள இடத்தில் நிரந்தரமாக ஒரு குழு ஊர்த் தலைவரின் முன்பு ஆடுவார்கள்.  அதனால் அந்த மதிலைப்பிடித்து அதன் மேல் உட்கார்ந்து கொள்வதற்கு எப்போதும் போட்டி இருக்கும்.  முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

அன்று காந்திமதியும் அவளின் அம்மாவும் கொஞ்சம் நேரத்தில் வந்ததால் மதில் மேல் உட்கார இடம் கிடைத்தது. இரவு எட்டு மணிக்கு நெய்க்காரன்பட்டி குழுவின் சூப்பர் காவடி ஆட்டம் தொடங்கியது. பெரிய காவடிக்குழு என்பதால் எல்லா வகை ஆட்டக் காரர்களையும் கூட்டி வந்திருந்தனர்.  தலையில் உள்ள கரகம் கீழே விழாமல் கைகளைப்பின்புறம் கட்டிக்கொண்டு தரையில் மண்டியிட்டு ஊசியைத் தன் கண்களில் எடுத்துக் கொண்டிருந்தாள் அப்பெண்.  படு அமைதியாக இருந்தது சூழ்நிலை.  மேளக்காரர் மட்டும் 'டும்.. டும்' என்று மேலும் மக்களுக்கு திகில்

ட்டிக்கொண்டிருந்தார்.  எல்லோருடைய பார்வையும், கவனமும் அப்பெண்ணின் மேலே குவிந்திருக்கும் வேளையில், காந்திமதியின் கன்னத்தை ஒரு பேப்பர் உருண்டை பறந்து வந்து தாக்கியது.

காகிதம் பறந்து வந்த திசையை நோக்கினாள் காந்திமதி.  அங்கே குழந்தைவேலு நின்று கொண்டு அவளையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் காமம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.  'வா ' என்று ஜாடை காட்டினான்.   காந்திமதியும், குழந்தைவேலுவும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரில் ஒன்றாகப் படித்தவர்கள். பக்கத்துப்பக்கத்து வீடும் கூட.  சிறு வயதிலேயே அவன் அப்பா வரதட்சணைக்கு ஆசைப்பட்டு அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்.  ஒரு பையன், ஒரு பெண் கூடப் பிறந்து விட்டது அவனுக்கு.  அடிக்கடி காந்திமதியின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்த அவன் காந்திமதியை எளிதாக தன் காதல் வலையில் விழவைத்து விட்டான். அவளின் வயது, அவன் ரகசியமாகக் கொண்டு வந்து படிக்கக் கொடுத்த புத்தகங்கள் எல்லாம் சேர்ந்து அவளின் புத்தியைக் கெடுத்து கல்யாணம் ஆன அவன் மேல் பைத்தியம் கொள்ள வைத்துவிட்டது.  'என்ன?' என்று ஜாடையில் கேட்டாள்.  'வா' என்றான் குழந்தைவேலு.  இது போன்ற வாய்ப்பு அவனுக்கு மீண்டும் கிடைக்குமா என்ன?  சுற்றுமுற்றும் பார்த்தாள் காந்திமதி. இவர்கள் இருவரைத் தவிர அனைவரும் கரகம் கீழே விழுந்தால் பிடிப்பதற்கு தயாராய் இருப்பவர்கள் போல ஆட்டத்தில் ஒன்றிப்போய் இருந்தனர்.

அரைமணி நேரம் கழித்து சுய உணர்வு வந்தபோது காந்திமதியின் தாய் அருகில் உட்கார்ந்திருந்த தன் இரண்டாவது மகளிடம் கேட்டாள்,  ' அக்கா எங்கே?'.    கோமாளியின் சேட்டைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த தங்கை, ' அக்கா ஒண்ணுக்கு போயிருக்கும். வருவாம்மா' என்று சொல்லிவிட்டு கோமாளியின் காமெடியில் கவனம் செலுத்தினாள்.  அடுத்த பத்து நிமிடம் கழித்தும் காந்திமதியைக் காணாததால் பதைத்த தாய், ' வாடி..' என்று இளைய மகளை இழுத்துக் கொண்டு மதிலில் இருந்து கீழே இறங்கினாள்.  ஏனோ அந்த தாய்க்கு மனதும், வயிறும் கலங்கியது.  'ஏம்மா.. ஆட்டம் பார்க்க உட மாட்டயா?' என்று சலித்துக்கொண்டே இறங்கினாள் அந்த விபரம் அறியாப் பெண்.  கடந்த முக்கால் மணி நேரமாய் மகள் காணவில்லை என்றதும், அந்தத் தாய் தன் குல தெய்வம் தொடங்கி அனைத்து தெய்வங்களையும் பதட்டத்துடன் வேண்டத்தொடங்கினாள்.

ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்ற எண்ணம் வந்து விட்டது காந்திமதியின் அம்மாவுக்கு.  அந்தக் குழப்பத்திலும் உஷாராகிவிட்ட அந்தத் தாய் சின்ன மகளிடம் குசுகுசுத்தாள். 'நீ சத்தம் போடாம போய் கந்தசாமி அண்ணனை நான் கூப்பிட்டன்னு சொல்லி கூட்டி வா.  ஆனா யாருக்கும் தெரியக்கூடாது.. என்ன?' என்று சொல்லி அனுப்பினாள்.  கொஞ்ச நேரத்தில் கந்தசாமி ' என்ன சித்தி?' என்றவாறு வந்து நின்றான்.  அவனை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்றவள், 'காந்தியைக் காணோமடா.. காவடி பாக்க வந்த எடத்தில எவனாச்சும் மை போட்டு கூட்டிக்கிட்டு போயிருப்பானா? வயித்த கலக்குதடா எனக்கு' என்று கேவினாள்.  'சித்தி.. இங்கதான் இருப்பா.. நீ அழாத..முக்கியமா யார்கிட்டயும் இத சொல்லாத.. இங்கயெ இரு.. நான் எங்கிருந்தாலும் கூட்டியாறன்' கவலையுடன் நகர்ந்தான் கந்தசாமி.   கந்தசாமி நேராக அவனின் நெருங்கிய, நம்பிக்கையுள்ள நண்பர்கள் சோமு, பழனிச்சாமி இருவரையும் தனியே அழைத்து சொன்னான்.

' முதல்ல இந்தக் கூட்டத்தில காந்திமதி இருக்காளா பாருங்க.  அதேமாதிரி குழந்தைவேலு இருக்கானான்னும் பாருங்க. பத்து நிமிசத்தில பார்த்துட்டு இந்த இடத்துக்கு வந்துருங்க. நீங்க பாக்கறதும், தேடறதும் யாருக்கும் தெரியக்கூடாது.. என்ன?. சீக்கிரம்' என்று அனுப்பினான்.  இளைஞர் வட்டாரத்தில் குழந்தைவேலு, காந்திமதியின் காதல் கிசுகிசுப்பாக வலம் வந்து கொண்டிருந்ததால் கந்தசாமிக்கு என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிந்தது.  எதிர்பார்த்தது போலவே நண்பர்கள் இருவரும் வந்து கூறிய தகவல் இருவரும் அந்தக் கூட்டத்தில் இல்லை என்பதே. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கந்தசாமி முடிவு செய்து விட்டான்.  காந்திமதியின் அம்மாவிடம் சென்று, 'சித்தி நீங்க இங்கேயே இருங்க. நாங்க உங்க வீட்டு வரைக்கும் போய் காந்தி இருக்காளான்னு பாத்துட்டு வரோம்' என்று கூறிவிட்டு அவசரமாய்  கிளம்பினர்.   கந்தசாமி நண்பர்களிடம் சொன்னான்,' முதல்ல காந்திவீட்டு சாலையில் போய்ப்பார்க்கலாம் வாங்க'.  மூவரும் சாலையின் வாசலை நெருங்கும்போது கதவைத்திறந்து கொண்டு குழந்தைவேலுவும், காந்திமதியும் வெளியே வந்தனர்.  மூன்று பேரையும் கண்டவுடன் காந்தி சேலையை இழுத்துப்போர்த்திக் கொண்டு தலை கவிழ்ந்தாள்.  குற்ற உணர்வுடன் தலை குனிந்து வந்த குழந்தைவேலு 'மாப்ள மன்னிச்சிருடா' என்றான் பரிதாபமாக.

மனதில் ஒரு முடிவுக்கு வந்த கந்தசாமி,'டேய் குழந்தை.. நீ ஒருவருக்கும் தெரியாமல் போய் உன் வீட்டில் படுத்துக் கொள்.  காந்தி.. நீயும் உன் வீட்டில் போய்ப் படுத்துக் கொள்.  யார் கேட்டாலும் தூக்கம் வந்ததால் காவடி பார்க்காமல் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரமாய் தூங்கிக் கொண்டிருப்பதாய் சொல்.  அம்மா கேட்டாக்கூட. சீக்கிரம் போ' என்று கூறி விட்டு நண்பர்கள் சோமு, பழனிச் சாமியையும் பார்த்து, 'நீங்களும் இதைத்தான் சொல்லனும்' என்றான்.

'இதையெல்லாம் சொல்லணுமா மாப்ள.. நம்ம ஊரு பொண்ணுக்கு ஒரு அவமானம்னா அது நமக்கும் சேத்துத் தானே.. செத்தாலும் நாங்க வெளில சொல்லமாட்டம். சரி..சரி..அவங்கள அனுப்பு' என்று சொல்லி முடிக்கும் போதே பின்னாலிருந்து ஒரு ஓலம் கேட்டது.

' அடி சிறுக்கி.. நம்ம குடும்ப மானத்த கப்பலேத்த எத்தன நாளா நெனச்சிருந்தே.  சண்டாளி.. உன்ன வெட்டிப் போட்டா என்ன?' ஒரு கும்பலையும் கூட்டிக்கொண்டு வந்திருந்த காந்திமதியின் தாய்   நெஞ்சில் அடித்துக் கொண்டே அடி வயிற்றில் இருந்து கதறினாள். ஒரு நொடியில் நிலைமையைப் புரிந்து கொண்ட அந்தக் கும்பலில் இருந்து கிசுகிசுப்பு தொடங்கியது.  மூன்றாவது மனிதர்களால் மூடி மறைக்கப்பட இருந்த அந்தப் பெண்ணின் மானம் அவளின் தாயால் ஏலம் விடப்பட்டுக் கொண்டிருந்தது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com