மனைவி  அழகானாள்…

மனைவி அழகானாள்…

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி - 2022

பரிசுக் கதை - 4

ஓவியம்; இளையராஜா

ட்டோவிலிருந்து  இறங்கி  நிதானமாக  எக்மோர்  ரயில் நிலையத்துக்குள்  நுழைந்தேன் .  வைகை  புறப்பட இன்னும்  நேரமிருக்கிறது .  என் ஃபிரண்ட்  ரவி  ஆன்லைனிலேயே  டிக்கெட்  போட்டுக்  கொடுத்து விட்டதால் டிக்கெட் , ரிசர்வேஷன்  சம்பந்தமான  எல்லா  தகவல்களும் என்  செல்போனில் அடக்கமாகி  இருந்தன .   ஒரு  கையில்  சூட்கேஸ் ,  இன்னொரு  கையில் " வேண்டாம்மா .. வைகையில் சாப்பாடு வரும் .. வாங்கி சாப்பிட்டுக்கிறேன் " என்று சொல்லியும் கேட்காமல்  ரவியின் மனைவி மீனாட்சி  கட்டிக்  கொடுத்த சாம்பார் சாதம் , தயிர் சாதம் , சப்பாத்தி அடங்கிய பை.   ஜன்னலோர சீட்  வசதியாக உட்கார்ந்ததும்  போன் அடித்தது .  என் மனைவி  கஸ்தூரிதான்.

விஜயலக்ஷ்மி
விஜயலக்ஷ்மி

               " ம்..  டிரெயின் ஏறிட்டேன் .  நைட் பத்து மணிக்குள்ள வந்துடுவேன்" என்றேன்.  " கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாளாயிடுச்சு..  உங்க  ஃபிரண்ட் பொண்டாட்டி விட மாட்டேனு  சொல்லிட்டாளா...  இல்லை  கல்யாணத்துல கண்ணுக்கழகா  பொண்ணுகளை  பார்த்து  பின்னாலேயே  சுத்திட்டு இருந்தீங்களா.? " மறுமுனை  புலம்ப  ஆரம்பித்தது.   விட்டால்  இல்லாத கற்பனையெல்லாம் பண்ணி, வேண்டாத வார்த்தைகளைக் கொட்டுவாள் .  பழகியது தான்.  ஆனால் நிம்மதியான பயணத்தை  கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.  " சரி .. டிரெயின் புறப்படப் போகுது. வீட்டுக்கு வந்து பேசிக்குவோம் " என்று கட்  பண்ணினேன்.

             அத்தனை  அழகில்லாத,  வெறும்  எட்டாம்  கிளாஸ் வரை  மட்டுமே படித்த, பணக்கார  பெண்ணுக்கு,  அழகான, நல்ல ரசனையுள்ள,  இன்ஜினியரிங் படித்த , நடுத்தர  குடும்பத்து  பையன்  கணவனாக  ஆகும்போது  பேலன்ஸ் இல்லாமல் வாழ்க்கைப்  படகு  தள்ளாடத் தான் செய்யும்   என்பது  என்  அனுபவம்  கற்றுத் தந்த பாடம் .

           நான்  கொஞ்சம்  கலகலப்பானவன் .   அழகான  பெண்களை  ரசிப்பதில் தவறு இருப்பதாக  எனக்கு  தோன்றாதது தான்  அவள்  கோபத்திற்கு காரணம் .  படிப்பு முடிந்ததும்  அப்பா  சொன்னதற்காக  ரியல் எஸ்டேட் பார்க்கும்  ரங்கநாதனின் சிமெண்ட்  கடையில்  தற்காலிகமாக  வேலைக்கு  சேர்ந்தேன்.  அரசு  போட்டி தேர்வு  எழுதப் போனபோது  கல்லூரி  தோழி   நிவேதாவும்  வந்திருந்தாள்.  கேரளத்துப் பெண்.  கல்லூரியில்  அழகிலும்,  அறிவிலும்  என்னோடு  போட்டி போடுபவள்.  ரொம்ப நாள்  கழித்து  பார்த்ததில்,  தேர்வு  முடிந்ததும்  பேசிக் கொண்டே  அவளை  வழியனுப்ப  ரயில்  நிலையத்துக்கு சென்றேன்.  அப்போது அங்கு  வந்த  ரங்கநாதன்  கண்ணில் பட்டு,  அவர்  அப்பாவிடம்  சொல்லப் போக அப்பாவை  சமாதானப்படுத்த  பெரும்பாடாயிற்று .  ரங்கநாதன் வேறு விதமாக யோசித்தார் .  என்ன தான் பணம் இருந்தாலும் , அவருடைய பெண்ணுக்கு அழகு , படிப்பு  இல்லாததால்  கல்யாணம்  தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது .

               'பையன் படிச்சிருக்கான். பார்க்க நல்லா இருக்கான். வயசுக் கோளாறு அப்படி இப்படித்தான் இருப்பான். நம்ம பொண்ணை  இவனுக்கு  கல்யாணம் பண்ணிக் கொடுத்து  நம் கைக்குள் வச்சுக்கிட்டா தொழிலுக்கும் உதவியா இருப்பான் ' என்று கணக்கு போட்டு அப்பாவிடம் பேச, அவருக்கு தலைகால் புரியாத சந்தோஷம் .  அம்மாவும்  'பொண்ணுக்கு  அழகா முக்கியம் ? குடும்பத்துக்கு  ஏத்தவளா  இருந்தா போதும் '  என்று  எனக்கு  உருப் போட, எனக்கும் மறுக்க காரணம் ஏதுமில்லை.  கஸ்தூரி  என் மனைவியானாள் .

          அவள் அப்பாவின் ரியல் எஸ்டேட் பிசினெஸ் , சிமெண்ட் கடை எல்லாவற்றுக்கும்  சம்பளமில்லா  வேலைக்காரனானேன்.  " அப்பா உங்களைப் பத்தி எல்லாம் சொல்லிட்டாரு.  கொஞ்சம் அழகா  பொண்ணுங்க  கண்ணுல பட்டுட்டா  பின்னாலேயே  நாய் மாதிரி  ஓடுவீங்கன்னு தெரியும்.  இனிமேலாவது  ஒழுங்கா இருங்க. " என்று  ஏதோ  கொலைக்  குற்றவாளிக்கு  கருணை காட்டுவது  போலத் தான் பேசுவாள்.

                   என் நண்பன் ரவி, என் உறவுக்கார பெண் மீனாட்சியை காதலித்து என்னை  தூது அனுப்பினான் .  நானும் உறவை சாக்கு சொல்லிக் கொண்டு அவள் வீட்டுக்கு சென்று பேசினேன்.  பார்க், கோவில் என்று அவளை கூட்டிப் போய்  ரவியுடன் பேச வைத்தேன்.  "உன் மாப்பிள்ளை ஒரு பொண்ணு கூட ஊர் சுத்திட்டு இருக்கான். என்னான்னு பாரு " என்று  உறவினர்கள் பேச்சு காதில் விழ, கஸ்தூரியின் அப்பா , மாமா , சித்தப்பா என்று ஒரு படையே திரண்டு வீட்டுக்கு வந்து விட்டது .  அப்புறம்  உண்மையை  எடுத்துச்  சொல்லி  ரவிக்கும்  மீனாட்சிக்கும் கல்யாணம்    ஆன   பிறகு தான் அந்த குடைச்சல்  நின்றது. 

     "கஸ்தூரி! நமக்கு கல்யாணம் ஆகி  அஞ்சு வருஷமாச்சு. அழகுங்கறது ரசிக்கறதுக்கு மட்டும் தான்.  அன்பு தான் என்னைக்கும் நிலைக்கும் .  நம்ம அன்புக்கு அடையாளமா மூணு வயசுல நம்ம பையன் இருக்கான். " என்று என்ன சொன்னாலும் பொறுமையுடன் கேட்க மாட்டாள் .  பையன் பிறந்ததும் உடல் பெருத்துப் போக, அவள் தாழ்வு மனப்பான்மை இன்னும்  அதிகரித்து அவள் கோபம்  ஏவுகணைகளாக என் மீது  பாய்ந்து கொண்டு தான் இருக்கிறது .

          "  சார் மதுரையா ..? " குரல் கேட்டதும்  நினைவுகளிலிருந்து  விடுபட்டேன்.  கேட்டவரைப் பார்த்து   புன்னகைத்தவாறே ' ஆம் ' என்று   தலை யாட்டினேன்.  "  நாங்க  திருச்சி போய்  சமயபுரம்  போறோம். ஒரு வேண்டுதல் "  கேட்காமலேயே சொல்லிக் கொண்டு போனார்.  எதிர் சீட்டு ஜன்னலோரம் அவர் பையன்கள், அவர், அவர் மனைவி உட்கார்ந்திருந்தார்கள் .  என் சீட்டையொட்டி வயதான தம்பதிகள், அதையடுத்து  இளம் தம்பதிகள் என்று குடும்பம் , குடும்பமாக இருக்க நான் மட்டும் தனி ஒருவனாக இருந்தேன் . 

                  ரயில் விரைவு பிடிக்க , சில்லென்ற காற்று , பச்சை கம்பளம் போர்த்தி இருந்த வயல்கள்  என்று ரசித்துக் கொண்டே வர, தாம்பரத்தில் ரயில் நின்றது .  உஷ்ணம் பொறுக்க முடியாமல் காற்று வாங்க கதவருகே நின்று கொண்டேன்.  ரயில் புறப்பட ஆரம்பித்ததும் , மூச்சிறைக்க ஓடி வந்தாள், அவள் . 

             அழகு ரோஜா நிறம் , தொளதொளவென்ற வயலட் நிற  டீ ஷர்ட், இளஞ் சிவப்பு ஜீன்ஸ் , தலை முடியை உயர்த்தி சீவி பின்னால் கிளிப் போட்டிருந்தாள்.  இரண்டு கைகளிலும்  பெட்டிகளைப்  பிடித்தபடி என் கோச்சுக்குள் ஏற  முயன்றவளை கையை பிடித்து பெட்டிக்குள் இழுத்து விட்டேன்.  " தாங்க்ஸ் " என்றபடி உள்ளே வந்தவள்  காலியாக இருந்த கடைசி சீட்டில் உட்கார்ந்தாள்.    ஹேண்ட் பேக்கிலிருந்து கர்சீப்பை எடுத்து முகமெங்கும் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை துடைத்துக் கொண்டிருந்த அவள் மீதே அனைவர் கண்களும் பதிந்தன .  இருபது வயது இருக்கும் .  மாசு மருவற்ற பளிங்கு முகம் .. கச்சிதமான உடல் , உடை.

              ரயில் புறப்பட்டு சிறிது நேரம் சென்ற பிறகு அவரவர் கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.  அந்தப் பெண்  சாப்பாடு  விற்றுக் கொண்டு வந்தவரிடம் , " கர்ட் ரைஸ் " என்று தயிர் சாதம் மட்டும் வாங்கிக் கொண்டு பிரித்தாள்.

           " பார்த்தால் பஞ்சாபி பொண்ணு மாதிரி இருக்கு .  தமிழ் தெரியுமோ... என்னவோ ..." என்று ஆரம்பித்தார் , வயதான பெண்மணி.

            " எனக்கு தமிழ் நல்லா தெரியும் , பாட்டி " மழலைத் தமிழில் அவள் பேசியதும் வியப்புடன் அவளைப் பார்த்தோம் . 

             "  நான் மும்பையிலிருந்து தான் வர்றேன் ..  என் அப்பாவும் , அம்மாவும் தமிழ் தான்.  லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு மும்பை போயிட்டாங்க. நான் அங்கேயே பிறந்து , வளர்ந்தாலும் தமிழ்காரங்க ஏரியாவுல தான் அப்பா சின்னதா ஹோட்டல் வச்சிருந்தார்.  வீட்லேயும் தமிழ் தான் பேசுவோம்."

             " தனியா போறியேம்மா ,, கூட யாரும்  வரலையா? " எதிர் சீட்டுக்காரர் கேட்டார்.

             " இல்லை , சார்... ஒரு மாசம் முன்னால மும்பையில் ஒரு விபத்துல என் பேரண்ட்ஸ் இறந்துட்டாங்க .. என்னால அங்கே தனியா இருக்க முடியல. சென்னையில் அப்பாவோட ஃபிரண்ட் வீட்ல இருந்து ஏதாவது வேலை ட்ரை பண்ணலாம்னு  நெனைச்சேன். அதுவும் சரியா வரலை.  இப்போ மதுரைக்கு பக்கத்துல மேலூர்ல அம்மாவோட பேரண்ட்ஸ் அதாவது என் தாத்தா , பாட்டி இருக்காங்க.  அவங்க வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன்.  "தடுமாறாமல் சொல்லி முடித்தாலும் அவள் வார்த்தைகளின் பின்னாலிருந்த சோகம் என்னை சங்கடப்படுத்தியது.

             கோச்சுக்குள்  'த்சொ.. த்சொ..' என்று அனுதாப அலை பரவியது .  தங்கள் சாப்பாட்டை வற்புறுத்தி அவளுடன்  பகிர்ந்தார்கள்.  இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கப் போகும் பயணிகள் .. வேறென்ன செய்ய முடியும் .. ?

              ரயில் திருச்சியில் நின்றதும்  பாதிக்கு மேல் கூட்டம் இறங்கி விட்டது .  அவள் என்னெதிரே காலியாகி இருந்த ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டாள் .  பழம் , பிஸ்கெட் , தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஆட்களைக் கடந்து ரயில் நகரத் தொடங்கியது .  இன்னும் சாப்பிடாமல் வைத்திருந்த சப்பாத்தியை அவளிடம் நீட்டியபடியே ," என்னம்மா படிச்சிருக்கே ..? " என்று கேட்டேன் .

                வாங்கிக் கொண்டபடியே  “  காலேஜ் முடிச்சுட்டேன் சார். தாத்தா இன்னும் படிக்க வைக்கிறேன்னு சொன்னார். மதுரை காலேஜில் சேரணும் .  நல்ல வேலையில சேரணும் தாத்தா , பாட்டிக்கு பாரமா இருக்க   கூடாது. பெருசா ஆசைப்படுற தகுதி எல்லாம் எனக்கு கிடையாது , சார்.  " குரலில் விரக்தி இழைந்தது.  சோகமான அவள் கண்களிலும் ஒரு அற்புத அழகு .    

           அரைமணி நேரம் சென்றிருக்கும் .  திடீரென்று ரயில் ஒரு குலுக்கலுடன் நின்றது .  காரணம் அறிய கீழே இறங்கினேன்.  முன் சென்ற வண்டி தடம் புரண்டதால் எங்கள் வண்டியும் மேலே  செல்ல வழியில்லாமல் நின்று விட்டது .  மழை வலுக்க ஆரம்பித்து விட்டதால் திரும்பவும் வண்டிக்குள் ஏறினேன்.  பயத்துடன் விழித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் விவரம் சொல்லி விட்டு , " உன் தாத்தாவுக்கு போன் பண்ணி வண்டி லேட்டாகும்னு சொல்லிடும்மா. அவர் பாவம் மேலூர் பஸ் ஸ்டாண்டிலேயே காத்துட்டு இருப்பார் . " என்றேன் . 

           தலையாட்டியபடியே போன் பண்ணினாள் .  மழை கொட்ட ஆரம்பித்து விட்டதால் சீர்படுத்தும் வேலையும் பாதிக்கப்பட்டது .   'கஸ்தூரிக்கும் போன் பண்ணி விடுவோம் , லேட்டானால் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவாள் ' என்று  போனை எடுத்தேன் .  பேட்டரி சிவப்பாக எரிந்தது . ' சே... சார்ஜ் போட மறந்து விட்டேன் '.  'தட்' என்று  அனிச்சையாக முன் நெற்றியில் அடித்துக் கொண்டேன் .  எதிரே உணர்ச்சியற்ற பாவனையில் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவள் போனை கொடுத்தாள்.  ஆனால் நெட் வொர்க் சுத்தமாக இல்லை . 

" என்ன சார் பண்றது ..? " பயத்துடன் கேட்டாள். " சீக்கிரம் சரியாயிடும்மா " என்றேன், எனக்கே நம்பிக்கை யில்லாமல் .

             ஒரு வழியாக இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் நகர்ந்தது.  அடுத்து திண்டுக்கல்லில் பயணிகள் இறங்க , நானும் அவளும் மட்டுமே கோச்சில்  இருந்தோம் . அவளிடம் சிறிது பரபரப்பு தென்பட்டது . " புது ஊர் , புது இடம் , சார் ..  அம்மாவோட சொந்தக்காரங்க கூட அதிகம் பழக்கமில்லை. ஆனாலும் இனி அவங்களை விட்டால் எனக்கு வேறு கதியில்லை" என்றாள், வருத்தத்துடன்.

             மதுரை ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது மணி பதினொன்று ஆகி விட்டது.  இறங்கி  வெளியே வந்ததும் என்னுடனேயே ஒட்டிக் கொண்டு வந்தாள் அந்தப் பெண். அங்கொன்றும் , இங்கொன்றுமாக விளக்குகள் எரிய மழை இன்னும் இலேசாக  தூறிக் கொண்டிருந்தது .  கலைந்த தலையும் , பாதுகாப்பு தேடி அலையும் கலங்கிய கண்களுமாக அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது .

         " ஏம்மா... நீ எப்படி போவ...? நான் திருநகர் போகணும் .  நீ எதிர் சைடு மாட்டுத்தாவணி போய் மேலூர் போகணும் . இந்த நேரத்துல பஸ் வருமான்னு தெரியலை .  ஆட்டோவுல போயிடுறியா ? " கேட்கும்போதே இந்த  இரவில் இந்த அழகுப் பெண் எப்படி தனியாக பயணிக்க முடியும். என்று தர்மசங்கடமாக உணர்ந்தேன்.

           அதற்குள் ஆட்டோக்காரர்கள் சூழ்ந்து கொள்ள திருநகர் போக  ஏறப் போனேன்.  விடைபெறும் பொருட்டு அவளைப் பார்த்தேன்.  ஆட்டோக்காரர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் என்னுள் குற்ற உணர்ச்சி பரவியது.      

           தேசத்தையே உலுக்கிப் போட்ட நிர்பயா சம்பவத்திலிருந்து போன மாதம் இதே ஊரில் பாலத்தின் அடியில் உடம்பெல்லாம் ரத்தம் வடிய கிழிந்த ஆடையுடன் கிடைக்கப் பெற்ற பெண் உடல் சம்பவம் வரை, ஒரு குரூர நிகழ்வின்  சாத்தியக் கூறுகள் மனதில் ஓடின.  அந்த எண்ணம் அடி வயிற்றில் ஜில்லிட்ட உணர்வை ஏற்படுத்தியது. 

            " கொஞ்சம் இருப்பா... " என்று ஆட்டோக்காரரிடம் சொல்லி விட்டு அந்தப் பெண்ணிடம் சென்றேன் .  " நீ என் கூட என் வீட்டுக்கு வர்றியாம்மா... ? "  அவள்    விழிகளில்  சிறு சுடர்  ஒளிர   மறுத்து ஏதும் பேசாமல்   என்னுடன் ஆட்டோவில் ஏறிக்  கொண்டாள்.     

          தைரியமாக  சொல்லி விட்டேனே தவிர   ஆட்டோவில் போகும்போதே மனம் தடுமாறியது. கஸ்தூரி என்ன சொல்வாள்? முதலில் உள்ளே நுழைய விடுவாளா. தெருவிலேயே நிற்க வைத்து கத்த ஆரம்பித்தால் மானம் போகும்.  இந்த நடு ராத்திரியில், நடு வீதியில்  இந்தப் பெண்ணுடன் நிற்பதை கற்பனை பண்ணினாலே உடல் நடுங்கியது .  வேறு சொந்தக்காரர்கள், நண்பர்கள் வீடுகளையெல்லாம் யோசித்துப் பார்த்தேன்.  ம்ஹூம்   ஒன்றும் சரிப்படாது. மனம் அப்படி இப்படி  ஊசலாட வீடும் வந்து விட்டது .

          இறங்கி காலிங் பெல்லை அழுத்தினேன் .  கதவைத் திறந்தவள் முகத்தில் கோபம் வெடித்தது .  " மணி பன்னிரண்டு ஆயிடுச்சு. போன் பண்ணினாலும் எடுக்கலை.  இவ்வளவு நேரம் எவ வீட்ல இருந்துட்டு வந்தீங்க " இன்னும் தொடரப் போனவள் அப்போது தான் பின்னால் நின்றிருந்தவளைப் பார்த்தாள்.

             வியப்பில் வாய் பிளக்க நின்றவளிடம் 'மட மட'வென்று அவள் கதையையும் , இங்கு கூட்டி வர நேர்ந்த சூழ்நிலையையும் சொல்லி விட்டு , " கஸ்தூரி ப்ளீஸ்... இந்த ராத்திரி நேரத்தில் இந்தப் பெண் எங்கே போக முடியும் ..? அதான் கூட்டி வந்தேன் " என்று முடித்தேன்.

            சிறிது நேர அமைதிக்குப் பிறகு , " உன் பெயர்  என்னம்மா ..? " நிதானமாகக் கேட்டாள்.  இதுவரை நான் கேட்காத கேள்வி.

            " சந்தியா " என்றவளிடம் ,  " என்  வீட்டுக்காரர்  எப்பவும்  மசமசன்னு  ஒரு வேலையும் உருப்படியா  செய்ய  மாட்டார்.  எங்கிட்டேயும்  கலந்து  பேச மாட்டார். ஸ்டேஷன்ல  இறங்கின  உடனேயே  யார் கிட்டேயாவது போனை  வாங்கி உங்க  தாத்தாவுக்கு  விவரம் சொல்லியிருக்கலாம்ல.  அவர்  உன்னைக் காணாம  தவிச்சுப்  போயிருப்பார்ல. இந்தா என் போன்  தாத்தாவுக்கு போன் பண்ணி  இங்கே  பத்திரமா  ஒரு அக்கா  வீட்ல  இருக்கேன்னு  சொல்லு " போனை  நீட்டினாள்.

      கொஞ்சம்  கூட எதிர்பாத்திராத  ஒரு  தருணத்தில் திரை  விலகி  கிடைத்த கடவுள்  தரிசனமாய்  அவளைப் பார்த்தேன்.  அவளுக்குள்  உள்ளடங்கிக்  கிடந்த மென்மையான  மறு பக்கத்தை  உணரத் தொடங்கிய அந்த வேளையில் உலக அழகியாய் என் கண்களை நிறைத்தாள். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com