பாதகம் செய்பவரைக் கண்டால்...

பாதகம் செய்பவரைக் கண்டால்...

ஜெயஸ்ரீராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி-2022

பரிசுக் கதை - 5

ஓவியம்: வேதா

நடுவர் பார்வையில்…

  • வேலியே பயிரை மேய்வதா? சமீபத்திய உண்மை சம்பவம் கதைக்கு கரு ஆகியுள்ளது.

சித்தி பணித்தவாறு சட்னி அரைப்பதற்காக அம்மி அருகில் அமர்ந்த விஜயாவின் கண்களில் தேங்காய் பத்தைகள் பொதிந்திருந்த  நாளிதழின் வாசகங்கள் பட்டன. "கடலூர் மாவட்டம் கம்மாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த சகோதரிகள் தூக்குப் போட்டு தற்கொலை". வீட்டில், மேலே படிக்க வைக்க மாட்டார்கள் என்பதை அறிந்து அந்த விபரீத முடிவுற்கு அவர்கள் சென்று விட்டதாக அந்த செய்தி குறிப்பிட்டது. இத்தனைக்கும் இருவரும் பள்ளி இறுதி தேர்வில் பள்ளியிலேயே முதல் மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றிருந்தனராம்.

வி. ஜி. ஜெயஸ்ரீ
வி. ஜி. ஜெயஸ்ரீ

ட்னியை அரைத்து மூடி வைத்த விஜயாவிற்கு பொறி தட்டியது. பக்கத்து வீட்டில் டி.வி. பார்க்க போயிருந்த சித்தி எப்போது வேண்டுமானாலும் வந்து விடுவாள். இன்னும் சிறிது நேரத்தில்  இருட்டி விடும். தாமரைக்குளம் என்ற அந்த அழகிய ஊரின் எல்லையில் இருந்த,  அந்த பகுதியில் இருட்டிய பின் போக பெரியவர்களே பயப்படுவர். ஏனென்றால், அங்கு அகன்ற புறம்போக்கு நிலமும், அதில் அடர்ந்த மரம், செடி, கொடிகளும், இருட்டிய பின் அந்த பகுதியை கும்மிருட்டாக காட்டும். அதை ஒட்டி சுடுகாடும், பாழடைந்த கிணறும் இருக்கும்.

     அதை நோக்கி வேக வேகமாக நடை போட்ட விஜயாவிற்கு மூச்சிரைத்தது. இப்போதே அந்த இடம் அமானுஷ்யமாக இருப்பதாக தோன்றியது. உள்ளுக்குள் பயக்கீற்று ஊடுருவி வயிற்றை பிசைந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்தது.

     அவளுக்கு மட்டும் தற்கொலை செய்துக் கொள்ள ஆசையா? ஆனால், இப்போது வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

     பாழடைந்த கிணற்றை சமீபித்தவள், மெதுவாக அதை எட்டிப் பார்த்தாள். ஆழமான பெரிய கிணற்றில் தண்ணீர் பாதி வரை தெரிந்தது.

     யாரும் அங்கு வருவதற்குள் கிணற்றுக்குள் குதித்து விட வேண்டியது தான் என்று கிணற்றின் மேல் ஏற எத்தனிக்கும் போது, "யாரும்மா அது?" என்ற அதட்டலான குரல் கேட்க, பயத்தில் அவள் உடல் 'கிடு கிடு' வென்று நடுங்கியது.

     அதற்குள் அவளை நெருங்கியவள் சுமார் 40 வயதை நெருங்கும் பெண்மணி. கூட வருவது, அது யார்? கீதா போல் இருக்கே?

     "அம்மா, இது என் தோழி விஜயா. எங்க வகுப்புல எப்பவும் அவ தான் முதல் ராங்க் வாங்குவா. பத்தாம் வகுப்பு வரை என் கூட தான் படிச்சா. இப்ப வேற எங்கேயோ படிக்கிறாம்மா"

     "எதுக்கும்மா இங்கே வந்தே? இந்த பாழடைஞ்ச கிணற்றுக்கிட்டே உனக்கு என்ன வேலை?" கனிவுடன் தேன்மொழி கேட்க, கண்ணீர் பீறிட்டது விஜயாவிற்கு.

     "சரி, சரி வாம்மா. பக்கத்துல தான் எங்க வீடு இருக்கு"

     வீட்டை அடைந்தவுடன் சூடான காஃபி போட்டு அதை கொண்டு வந்து விஜயாவிடம் நீட்டினாள் தேன்மொழி.

     "வேண்டாம்மா, நான் இப்பத்தான் வீட்டுல காஃபி சாப்பிட்டு விட்டு வந்தேன்."

     "முதல்ல இதை குடி சொல்றேன். உன் தோழி வீட்டுக்கு முதன் முதலா வந்திருக்க, மறுக்காம வாங்கிக்க".

     "ஆமாம் விஜயா, நீ காபி குடிச்சா தான் நானும் குடிப்பேன்". கீதாவும் வற்புறுத்த, மறுக்க மாட்டாமல் காபியை குடித்தாள் விஜயா.  காபி உள்ளே செல்ல, செல்ல புத்துணர்வு வந்தது அவளுக்கு.

     "கீதா நீ போய் அத்தை வீட்டில் இருக்கிற தம்பியை கூட்டிக்கிட்டு வா. அதுக்குள்ள நான் சாப்பாட்டை ரெடி பண்றேன்."

    "விஜயா, நான் போயிட்டு வரேன். நேரம் கிடைக்கும் போது எங்க வீட்டுக்கு வாடி".

     " சரி கீதா."

தெரு கோடியிலிருந்த அத்தை வீட்டிற்கு கிளம்பி சென்றாள் கீதா.

      "விஜயாம்மா, என்னை உன் அம்மாவா நினைச்சுக்க. என்ன பிரச்சினை உனக்கு?"

     எப்படியாவது தன் சிக்கல் தீராதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த விஜயா சொல்லத் தொடங்கினாள்.

     விஜயா, அவள் அப்பா - அம்மாவிற்கு ஒரே பெண். +2 படிக்கிறாள். பத்தாவது வரை தனியார் பள்ளியில் படித்து வந்தாள். அவள் அப்பா - அம்மா வயலில் கூலி வேலை செய்து வந்தனர். ஆனால் தங்கள் மகளை, எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று உறுதியாக இருந்து, படிக்க வைத்தனர். இயல்பாகவே புத்திசாலியாக இருந்த விஜயா, பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலாவது மாணவியாக தேர்ச்சி பெற்றாள்.

     ஆனால், திடீர் மூளைக்காய்ச்சலில் அவள் அம்மா மறைய, அவள் வாழ்க்கை திசை மாறியது. உறவு ஜனங்கள், "வயசுப் பெண்ணை பார்த்துக்கவாவது, நீ மறு கல்யாணம் பண்ணிக்கப்பா" என்று முத்தையாவை கரைக்க, கனகம் சித்தியாக வந்து வாய்த்தாள்.

     வந்தவள் செய்த முதல் காரியம், அவளை அரசாங்க பள்ளியில் சேர்த்தது தான். அநாவசியமாக பணத்தை அவள் படிப்பிற்காக செலவழிக்க கூடாது என்ற நல்லெண்ணம்தான் காரணம்.

     படிக்கிற பெண், எங்கேயும் படிக்கும் என்று முத்தை யாவும் அமைதியாக இருந்து விட்டார். விஜயாவிற்கும், அரசாங்க பள்ளியில் படித்தாலும், உயர்ந்த இடத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தான் பழைய பள்ளியிலேயே படிக்கிறேன் என்று பிடிவாதம் பிடித்து, அதனால் அப்பாவிற்கும் - சித்திக்கும் நடுவே பிணக்கு வந்து விடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்கு.

     ஆனால் சித்தி அவளை வீட்டில் படிக்க விடவேயில்லை. எப்போதும் ஏதாவது வேலை ஏவிக் கொண்டே இருப்பாள். வீட்டில் சமையலில் இருந்து, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்கி துடைப்பது எல்லாமே விஜயா தான்.

     அவ்வளவு வேலை செய்தும் ஒரு வேளை உணவு தான் விஜயாவிற்கு வீட்டில் கிடைத்தது. முத்தைய்யா காலை 6 மணிக்கே வயல் வேலைக்கு கிளம்பி விடுவதால், காலை வேளையில் விஜயாவிற்கு வீட்டில் சாப்பாடு கிடைக்காது. மதியம் பள்ளியில் சத்துணவு சாப்பாடு கிடைத்து விடும். இரவு ஒரு வேளை மட்டும் முத்தைய்யா மகளை அருகில் இருத்திக் கொண்டு சாப்பிடுவதால், அந்த ஒரு வேளை சாப்பாடு மட்டுமே வீட்டில் கிடைக்கும்.

     சித்தி, வீட்டில் படிக்கவே விடாததால் எல்லா பாடங் களிலும் முதல் மார்க் வாங்கிக் கொண்டிருந்தவள், படிப்பில் பின் தங்கினாள்.

     அந்த அரசாங்கப் பள்ளியில், அனைத்துப் பிள்ளை களையும் நன்கு படிக்க வைத்து, அனைவரையும் தேர்ச்சி பெற செய்வதை அந்தப் பள்ளி தலைமையாசிரியர் தன் கொள்கையாகவே வைத்திருந்தார். அதனால் மதிப்பெண் குறைவாக எடுத்த விஜயா போன்ற படிப்பில் பின் தங்கிய பிள்ளைகளுக்கு, பள்ளி முடிந்தவுடன் தனியாக வகுப்பெடுக்க, அவரவர்கள் வகுப்பாசிரியர்களை பணித்தார்.

     அதற்கென்று பணம் எதுவும் தனியாக தர வேண்டாம் என்பதால் சித்தியால் தடைக் கூற முடியவில்லை.

     "ஆனால், பிரச்னை எங்க வகுப்பாசிரியர் மூலமா வந்ததும்மா" குரல் தழைத்தது விஜயாவிற்கு.

     வேகமாக சென்று, குளிர்ந்த நீரை கொண்டு வந்து  கொடுத்தாள் தேன்மொழி.

     "தனி வகுப்பு எடுப்பதற்கு பெற்றோரின் அனுமதியை பெற அவர்களை பள்ளிக்கு வந்து வகுப்பாசிரியரை பார்க்கச் சொன்னாங்கம்மா. அப்பா காலையில் சீக்கிரமாக வேலைக்கு போய் மாலை 6 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருவார். அதனால் சித்தியை எங்க பள்ளிக்கு போய், எங்க ஆசிரியரை பார்த்து வர சொன்னார் அப்பா. சித்தி வந்து எங்க சாரை பார்த்தாங்க. சார் தனி வகுப்பு எடுப்பதைப் பற்றியும், என்னை மாதிரி சில மாணவ - மாணவிகள் அதில் கலந்துக்கணும் என்றும் எடுத்து சொன்னார். அதுக்கு சித்தி, இது ஒரு சுமை எங்களுக்கு. இது என்னவோ பெரிய படிப்பு படிச்சு, பெரிய ஆளாகணும்னு இவங்க அப்பாக்கு பேராசை. நாங்க கஷ்டப்பட்டு, இத்தை படிக்க அனுப்பினா, இது இப்படி கம்மி மார்க் வாங்கி, எங்க உயிரை எடுக்குது ன்னு சொல்லி, அவர் எதிரிலேயே என்னை அடி பின்னிட்டாங்க."

     "வீட்டு ஆதரவு எனக்கு இல்லைன்ற என்னுடைய நிராதரவான நிலையை புரிஞ்சுக்கிட்ட எங்க சார், என் கிட்டே தவறா நடந்துக்க முயற்சிக்கிறார்ம்மா.  பாடம் கத்துக் குடுக்கிற மாதிரி, கிட்டே வந்து நிற்கிறார். பார்வையிலேயே ஒரு வக்கிரம் இருக்கும்மா. நேத்து எல்லோரும் தனி வகுப்பு முடிஞ்சு கிளம்பும் போது, என்னை சிறிது நேரம் இருக்க சொன்னார்.  திடீர்னு பின்னால் வந்து, என்னை கட்டி அணைக்க முயற்சித்தார். நான் உதறிட்டு ஓடி வந்துட்டேன்.

     "இன்னிக்கு சனிக்கிழமை. இன்றும், நாளையும் பள்ளிக்கூடத்திற்கு லீவு தான். ஆனா, திங்கட்கிழமை மறுபடியும் பள்ளிக்கூடத்திற்கு போய் தானே தீரணும்? இதை சித்தி கிட்ட சொன்னா, வேறு வினையே வேண்டாம். படிப்பை நிப்பாட்டிடுவாங்க. வீட்டுல அவங்க சித்திர வதையை தாங்க முடியாது. ஆனா, பள்ளியிலும் சார் பிரச்சினையை சமாளிக்க எனக்கு வழி தெரியல."

     "இன்னிக்கு காலையிலிருந்து யோசிச்சு, யோசிச்சு எனக்கு எந்த முடிவும் எடுக்க முடியலை. அப்ப தான் ஒரு  பழைய நாளிதழ்ல கம்மாபுரம் என்ற ஊரில் தற்கொலை செய்துக் கொண்ட இரு மாணவிகளைப் பற்றி படித்து, நானும் தற்கொலை முடிவுக்கு வந்தேன்."

     கண்களில் கண்ணீர் வடிய பேசி முடித்த விஜயாவையே பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி, பிரமித்துப் போனாள்.

     ஒரு சின்னப் பெண்ணுக்குள் இவ்வளவு சோகமா? எந்த அளவு சித்திரவதையை அனுபவித்திருந்தால், தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவு வரை போயிருப்பாள்? என்ன செய்ய வேண்டும்? இவளிடம் என்ன பேச வேண்டும்? என்று தனக்குள் சிந்தித்து முடிவெடுத்தாள்.

     "விஜயா, நீ எடுத்த முடிவு ரொம்ப தப்பும்மா. நீ படிச்ச அந்த செய்தியின் ஒரு துண்டு தான்ம்மா உன் கைக்கு கிடைச்சிருக்கு. அந்த செய்தியை நானும் வாசிச் சிருக்கேன். அந்த செய்தியின் முடிவில், அந்த நாளி தழிலேயே அந்த சிறுமிகள் எடுத்த முடிவு தப்புன்னு சுட்டிக் காட்டியிருக்காங்க. அவங்க அவசரப்பட்டுட்டாங்க. அவங்க பெற்றோர் கிட்ட எடுத்துச் சொல்லி போராடி யிருக்கணும். ஊர் பெரியவர்கள், சொந்த பந்தங்க கிட்ட முறையிட்டிருக்கணும். இன்னிக்கு அந்த கிராமமே அவங்க இழப்பினால துக்கத்துல மூழ்கியிருக்கிறதா அந்த செய்தியின் முடிவில் இருக்கும்மா."

     "உன்னை இந்த நிலைமைக்கு வளர்த்து ஆளாக்க, உன் அம்மா - அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க? எவ்வளவு தியாகம் செஞ்சிருப்பாங்க? அவங்க கனவை நினைவாக்காம, நீ தற்கொலை பண்ணிக்கிட்டா, உங்க அம்மா ஆன்மா சாந்தியடையுமா? உங்க அப்பா நிலை என்னாகும்னு நினைச்சு பார்த்தியா?"

     "தற்கொலைன்றது எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வில்லைம்மா. உன் வகுப்பு ஆசிரியர் விஷயத்தை எடுத்துக்கிட்டா, அவர் செய்யறது பஞ்சமா பாதகம். ஒருவரின் நிராதரவான நிலையை தனக்கு சாதகமாக் கிக்கறதுதான் உலகிலேயே மிக மோசமான விஷயம். பாரதி சொல்லியிருக்கார் இல்லே? 'பாதகம் செய்பவரைக் கண்டால், நீ பயம் கொள்ளலாகாது பாப்பா' ன்னு. 'மோதி மிதித்து விடு, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு' ன்னு சொல்லியிருக்கார். அதை விட்டுட்டு நீ தற்கொலை பண்ணிக்கிட்டா, அவன் பாதகம் வேற ஆளுங்க கிட்ட தொடரத்தான் செய்யும். நீ படிச்சு ஆளாகி ஒரு நல்ல ஆசிரியையா, இல்லைன்னா இந்த மாதிரி புல்லுருவிகளை களையெடுக்கற அளவுக்கு அதிகாரம் படைச்ச அதிகாரியா, மாவட்ட ஆட்சித் தலைவரா வர முயற்சி செய்."

     "நீ படிக்கிற பள்ளி, உங்க வகுப்பாசிரியர் பெயர் இவைகளை சொல்லி விட்டுப் போ. நாளையிலிருந்து அவர் உன் கிட்ட சரியா நடந்துப்பார். அதற்கு நான் உத்திரவாதம் தரேன். ஆனால் நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தரணும். இனி மேல் தற்கொலை எண்ணம் உனக்கு வரவே வராதுன்னு"

     "இல்லம்மா, எங்க அம்மா இடத்துல இருந்து எனக்கு அறிவுரை கூறிய உங்க மேல சத்தியமா இனி மேல் நான் வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் தற்கொலையைப் பற்றி நினைச்சுக் கூட பார்க்க மாட்டேன்ம்மா. கஷ்டங்கள் வந்தா, போராடி, அதிலிருந்து விடுபடுவேன். ரொம்ப நன்றிம்மா."

"சரி, இருட்டத் தொடங்குது. நீ வா, வந்து முகம் கழுவிக் கிட்டு கிளம்பு. உனக்கு இனி என்ன பிரச்சினை வந்தாலும் இந்த அம்மா கிட்ட வந்து சொல்லு".

     " சரிம்மா, போயிட்டு வரேன்" முகம் கழுவி கிளம்ப எத்தனித்தவளிடம், "சரி, உன் பள்ளி பெயரையும்,   உங்க வகுப்பாசிரியர் பெயரையும் சொல்லலையே?" வினவினாள் தேன்மொழி.

     "நம்ம ஊர் அரசாங்க மேல்நிலைப்பள்ளில தான்ம்மா நான் படிக்கிறேன். எங்க சார் பேரு பூபதி” சொல்லியவாறே வெளியேறினாள் விஜயா.

     அதற்குப் பின் சமையலை கவனித்து, அத்தை வீட்டிலிருந்து வந்திருந்த இரண்டு குழந்தைகளுக்கும் இயந்திர கதியில் உணவு பரிமாறி, இதையெல்லாம் எப்படி செய்தோம் என்றே தெரியவில்லை தேன்மொழிக்கு.

     சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார் கணவர் பூபதி.. ஆம், விஜயா கூறியிருந்த அவளின் ஆசிரியர் பூபதியே தான்.

     சாப்பாடு பரிமாறுகையில், "உன் முகமே வாட்டமாயிருக்கே தேன்மொழி. சாயந்திரம், உடம்பு சரியில்லாத, உன் அம்மாவை பார்க்க போறதா சொல்லியிருந்தியே, பார்த்தியா? அவங்களுக்கு ரொம்ப உடம்பு முடியலையா? ஏன் என்னவோ மாதிரி இருக்க?" கேள்விகளை அடுக்க,

     "அம்மா நல்லா தான் இருக்காங்க. இது வேறு விஷயங்க."

     "வேறு விஷயமா?"

     "ஆமாங்க, நம்ம கீதா இப்ப +2 படிக்கிறா இல்ல? பாடமெல்லாம் ரொம்ப கடினமாயிருக்கு. இந்த வருஷம் இறுதி தேர்வில் நான் நிறைய மதிப்பெண் எடுக்க ணும்ன்னா, என்னை டியூஷன்ல சேருங்க" ன்னு சொன்னா. நம்ம பக்கத்து வீட்டு சுபா அக்கா,  எங்க அம்மா வீட்டு பக்கத்துல இருக்கிற ஒரு சார் பற்றி சொன்னாங்க. அவர் நல்லா பாடம் எடுப்பார்ன்னும், அதனால் அவர் கிட்ட நிறைய பேர் டியூஷன் படிப்பதாகவும் அவங்க சொன்னாங்க."

     "அதனால், இன்னிக்கு அம்மா  வீட்டுக்குப் போயிருந்தப்ப,  இதைப் பற்றி நான் பேச்சோடு பேச்சா சொன்னேன். அதுக்கு என் தம்பி மனைவி விமலா, 'அங்கே மட்டும் சேர்க்காதீங்க அண்ணி. அந்த ஆள் சரியான பொம்பிளை பொறுக்கி. இந்த மாதிரி வர பொண்ணுங்க கிட்ட சில்மிஷம் பண்றான்'னு சொன்னா. அதுக்கு நான், ‘ஏன்டி, இவ்வளவு விஷயம் தெரி்ஞ்சுமா, பெத்தவங்க அவனை சும்மா விட்டிருக்காங்க? அவனை அடி பின்னி, போலீஸ்ல பிடிச்சுக் குடுத்து, அவனுடைய வேலையே போற மாதிரி பண்றது தானே? அப்படின்னு கேட்டேன். "தெய்வத்துக்கு சமமா நாம் மதிக்கிற ஆசிரியர்கள்ல சில பேர் இந்த மாதிரி நடந்துக்கிறது ஒட்டு மொத்த ஆசிரியர்  சமுதாயத்துக்கே கெட்ட பேர் ஏற்படுத்துற விஷயம் தானேங்க? படபடவென்று பேசியதால்  மூச்சிரைத்தது தேன்மொழிக்கு.

     கேட்டுக் கொண்டிருந்த பூபதிக்கு உடலெங்கும் வியர்த்து ஊற்றியது. மேனி லேசாக நடுங்கியது.

     “தேன்மொழி, நம்ம கீதாவை நீ யாரிடமும் டியூஷனுக்கு அனுப்ப வேண்டாம். எங்க பள்ளியில், என் வகுப்பு குழந்தைகளுக்கு, நான் தினமும், பள்ளி வேலை நேரம் முடிந்தவுடன், தனி வகுப்பு எடுக்கிறேன். கீதாவும் அதில் கலந்துக்க எங்க தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கிடறேன். இனி, அவ சாயந்திரம் பள்ளி விட்டவுடன், எங்க பள்ளிக்கு வரட்டும். மற்ற பிள்ளைகளுடன் அவளுக்கும் நான் எல்லாம் சொல்லித் தரேன். வகுப்பு முடிந்தவுடன் நானே அவளை வீட்டுக்கு கூட்டி வரேன்." பூபதி  கூற கூற, தன் மகளையொத்த ஒரு அபலைச் சிறுமியை பேரழிவிலிருந்து காப்பாற்றிய நிம்மதியும், இன்றைய தன் பேச்சால், இனி வேறு யாரிடமும் வாலாட்டும் துணிவு தன் கணவனுக்கு வராது என்ற நம்பிக்கையும் ஒரு சேர எழ, தன் அடுத்த வேலையை கவனிக்க ஒரு கர்ம யோகியைப் போல், அடுக்களையை நோக்கி நகர்ந்தாள் தேன்மொழி.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com