பட்டத்தரசி!

சிறுகதை
பட்டத்தரசி!

ஓவியம்; லலிதா

ன்னும் 21 நாட்கள்தான்-  நான் அரியணையில் பட்டத்து ராணியாக வீற்றிருக்கப் போகும் தினம். இத்தனை வருடங்கள் காத்திருந்ததை விட இந்த ஒரு மாதம் ஒவ்வொரு நாளும் மெதுவாகச் செல்லுவது போலத் தோன்றுகிறது. என்ன செய்வது? அரசர்,என் மாமனார், 75 வயதிலும் நல்ல திடகாத்திரமாக அரசாட்சி‌ செய்து வருகிறாரே! அவர் வழி விட்டால் அல்லவோ என் கணவர் அரசராக முடியும்?  நான் அரசியாகும் கனவு, கனவாகவே இருந்து விடுமோ என்ற கவலை எனக்கு இருந்து கொண்டேதான் இருந்தது.

என் மாமானார் ஆரோக்கியத்தைப் பற்றி ஊரில் நிறைய கிசுகிசு உண்டு. இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து பத்திரிகைகள் மூலம் கசியும் செய்திகள், இந்தக்கால கட்டத்தில் ஆற்றங்கரையிலும், சந்தைகளிலும் பேசப்படுகிறது.  அரசருக்கென்று ஒரு தனி வெள்ளாடு வளர்க்கப்படுகிறதென்றும் அதன் பாலும், நெய்யுமே அவருடைய வலுவிற்குக் காரணம் என்றும்... உண்மையில் எனக்கே இது நிஜமா என்று தெரியாது. நாட்டு நடப்புகளாகட்டும், அரண்மனை விஷயங்களாகட்டும் என் மாமானாரின் முழு கட்டுப்பாட்டுக்குள். அவரை மீறி எதுவுமே நடக்க முடியாது. மக்களின் நலனில் அக்கறை கொண்டவராகவும் கட்டுக்கோப்பானவராகவும் இருப்பதால்தான் ஜனங்களின் பேராதரவு அவருக்கு என்றுமே உண்டு. அதனால் ப்ரஜாப்பிரியன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். என் கணவர் ஏனோ அத்தனை மதிக்கப்படுவதில்லை.    அப்பா ப்ராஜாப்ரியன், பிள்ளை அஜாப்ரியன் என்று என் கணவர்ஆட்டு மூளை என்று மக்களால் பரிகசிக்கப்படுகிறார் என பராபரியாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். பாவம் அவர். கொஞ்சம் நெளிவு சுளிவு தெரியாதவர். அதற்காக இப்படியா... ஏன் என் மருமகள், மகன்கூட சில தருணங்களில் இவர் பேசும்போது பரிகாசமாக சிரித்ததை நான் கண்டதுண்டு. சே...மரியாதை தெரியாதவர்கள்.

 அரசர் அறை வாசல் வழியாகச் சென்ற போது, பேச்சுக்குரல் கேட்டது. என் மருமகள் தான்.

  "சக்கரவர்த்தி தாத்தா, தாங்கள் எதற்குக் கானகம் செல்ல வேண்டும்?"

 "இல்லையம்மா. வெகுகாலம் இந்த ராஜ்ஜிய பாரத்தை தாங்கிவிட்டேன். இனி இயற்கை அழகு சூழலில்   எளிய வாழ்க்கை மேற்கொண்டு மீதி வாழ்நாளை நிம்மதியாக கழிக்க வேண்டும்".

 "ராஜ்ஜிய பாரத்தை தாங்கள் இறக்கி வைக்கும் தோள்களுக்கு அதைத் தாங்க நீஙகள்தானே வழிகாட்ட வேண்டும்.  தவறு எதுவும் நடக்காமல் தாங்கள் தானே பாதுகாக்க வேண்டும். இங்கு ஏதேனும் தீங்கு நடந்தால், தங்களால் காட்டில் நிம்மதியாக இருக்க முடியுமா?"

 சாகசக்காரி. எப்படி பேசுகிறாள்...

 பட்டாபிஷேகத்திற்கு நான்கே நாட்கள் இருக்கும் போதுதான் தாதி என்னிடம் சொன்னாள்.

 "அம்மா, நான் கேள்விப்படுவது அரசர் மணிமகுடத்தை உங்கள் பிள்ளைக்குத் தான் சூட்டப் போகிறாராம்"

 எனக்கு அதிர்ச்சி "உண்மைதானா" என்று அவளை உலுக்கினேன். அவள் உறுதிப்படுத்தினாள். எனக்கு ஆத்திரமும் அழுகையும் வந்தது. பலேகைகாரி... சக்கரவர்த்தி தாத்தா, சக்கரவர்த்தி தாத்தா என்று குழைந்து குழைந்து பேசி சாதித்துக் கொண்டிருக்கிறாள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நானும் இதற்கு மாற்று கண்டுபிடிப்பேன். அரசியார் அறையில் ஒரு கூர்மையான சிறிய கத்தி இருக்கிறது.  மெதுவாக யாரும் பார்க்காத போது அதை கொண்டு வந்து என்னிடம் வைத்துக் கொண்டேன். இன்று இரவு அவளது அறைக்குச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு ஓலை எழுதச் செய்வேன்

 "சக்கரவர்த்தி தாத்தா, தங்கள் மகன் இருக்கும்போது, அவரை விடுத்து என் கணவரை அரியணை ஏற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. நேரில் உரைக்கும் திண்மையில்லாததால் ஓலையில் எழுதியுள்ளேன். தயவு செய்து என் வேண்டுகோளை ஏற்க வேண்டுகிறேன்"

 இரவு, கதவை  லேசாகக் தட்டிவிட்டு ( கத்தி என் இடுப்பில் மறைவாக) உள்ளே சென்றேன். அங்கே இன்னோர் அதிர்ச்சி. என் மருமகளுக்கு பதில், என் மாமியார்- அரசி அமர்ந்திருந்தார்.

 "வாம்மா".

 எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கால்களும் கைகளும் நடுங்க ஆரம்பித்தன.

"வா, ....அருகில் உட்கார். உன் மனப்போராட்டத்தை நான் அறிவேன். உன் கணவர், எனக்கும் மகன்தானே! இருந்தாலும் அரசரின் முடிவை நானும் முழு மனதுடன் ஏற்கிறேன்."

 சட்டென எனக்குள் ஒரு தைரியம் வந்தது.

"நீங்கள் ஒரு தாயாக இருந்து எப்படி இதை ஏற்றீர்கள்? ஒருக்கால் செம்பியன் மாதேவி போல இவர் உங்கள் சொந்த மகன் இல்லையோ?"

என் படபடப்பைப் பார்த்தும் அரசி வாஞ்சையோடு புன்னகைத்தார். நானும் உன்னை இதையே  கேட்கலாமல்லவா? அரியணை ஏறப்போவது உன் மகன்தானே. ஏன் நீ ஆத்திரப்பட வேண்டும். ஒன்று புரிந்து கொள். என் மகன் நல்லவன்தான். ஆனால்  சதிகாரர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும், ஒற்றர்களை நிர்வகிப்பதற்கும், நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும் தேவையான திறனை அவன் பெறவில்லை. இதை நீயும் அறிவாய். அப்படிப்பட்டவன் கையில் ஆட்சியைக் கொடுப்பது ஜனங்களுக்குச் செய்யும் அநீதி. அதனால்தான் அரசர், ராஜாங்கப் பொறுப்பிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆசையிருந்தும், செயல்படுத்த முடியமாலிருந்தார். உன் மகன் நல்ல வேளையாக தாத்தாவைக் கொண்டிருக்கிறான். அவன் அரசனானால் நீ ராஜமாதாவாக அதிகாரம் செலுத்தலாம். அரசியை விட அதிகம் மதிக்கப்படுவாய்"

 "என்னை மன்னித்து விடுங்கள்" என்றேன்.

 "முழுவதும் மன்னித்து விடுகிறேன். உன் இடுப்பிலிருக்கும் கூர்கத்தியைக் கொடுத்து விடு" என்றார்.

 மீண்டும் உடம்பு நடுங்கியது கத்தியை நீட்டிய படியே..."இது..இது...எப்படி உங்களுக்குத் தெரிந்..தது...."

 "இந்த அரண்மனையில்  அரசருக்குத் தெரியாமல் எதுவும் நடந்துவிட முடியாது. அவர்தான் உன் மருமகளை ஏதோ விஷயமாக வெளியே போகச்சொல்லி  என்னை இங்கு அனுப்பினார். எந்தக் காரணம் கொண்டும் நீ செய்ய நினைத்த செய்கை உன் மகனுக்கோ அல்லது மருமகளுக்கோ தெரியக்கூடாதென்றும்,  தேவையில்லாமல் உங்களுக்குள் அது விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்றும், அது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல என்றும் கூறினார்".

ஆஹா! என்ன முன்யோஜனை! என் செயலை நினைத்து எனக்கே வேதனையாகவும் வெட்கமாகவும் இருந்தது.

 அரசி கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டேன். என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அரசியாரின் பாதத்தை நனைத்தது.

 என்ன இது... கண்ணீர் நிற்காமல் என் முகத்தைக் கூட  ஈரமாக்குகிறதே.. எப்படி இவ்வளவு தண்ணீர்..? ஆ....தந்திரமாக என்னிடம் கத்தியை வாங்கிக் கொண்டு என்னை தண்ணீரில் அமுக்கிக் கொல்லப் பார்க்கிறாரா.....

 ஆ...என்னை விடுங்கள்...திமிறினேன்....

 "எத்தனை நேரமா எழுப்பறேன். தலைல தண்ணி கொட்டினப்பறம்தான் முழிச்சுக்கற. காலேஜூக்கு கிளம்ப வேண்டாமா....ஒரே மூச்சுல சரித்திர நாவல ராத்திரி லேட்டா படிச்சுட்டு படுக்க வேண்டியது. தூக்கத்துல சிம்மாசனம், கத்தி, சதின்னெல்லாம்  கத்த வேண்டியது....எழுந்திருடி....." அம்மா கையில் தண்ணீர் சொம்போடு நின்று கொண்டிருந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com