‘நிழல் நிஜமாகிறது’

‘நிழல் நிஜமாகிறது’

நாடகம்

Global Heritage Arts Fest 2022 நிகழ்வு சமயம், ஃபைன் ஆர்ட்ஸ், செம்பூர் (மும்பை) சார்பில் ரமேஷ் ராமமூர்த்தி இயக்கத்தில் உருவாகிய முதல் நாடகமான ‘நிழல் நிஜமாகிறது’ சென்னை திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரமம் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆடிட்டோரியத்தில் அரங்கேறியது.

‘நிழல் நிஜமாகிறது’ நாடகம் மற்றும் இதன் இயக்குனர், சில நடிக- நடிகையர்கள் பற்றிய விபரங்கள் இதோ உங்களுக்காக.

நிழல் நிஜமாகிறது (நாடக விமர்சனம்)

இளமைக்கும் முதுமைக்குமிடையே நடக்கும் பல்வேறு பிரச்னைகள் ஆண் – பெண் இருபாலருக்குமே பொதுவானது.

இந்நாடகத்தின் நாயகி கல்யாணிக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்க்கலாமா?

கல்யாணியின் கணவர் ராணுவத் துறையில் பணிபுரியும் போதும் சரி, ஓய்வு பெற்ற பின்பும் சரி, அத்தி பூத்தாற்போல வீட்டுக்கு வந்து செல்பவர். அவர்களது ஒரே மகனும் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவன், அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுகிறான்.

தனிமையில் வாடும் கல்யாணி, பார்ட்டி ஒன்றில் வேற்று நாட்டு ராணுவ வீரரைச் சந்தித்துப் பேச, மன ஆறுதல் ஏற்பட்டுவிட, நட்பு தொடர்கிறது. தன்னை அறியாமலேயே, கணவர் பாதுகாத்து வைத்திருந்த ராணுவ ரகசியங்கள் சிலவற்றை அவனிடம் கொடுக்க, அவைகள் விற்கப்பட்டு, பணம் இவளது கணக்குக்கு வர ஆரம்பிக்கிறது. பண ஆசை மேலோங்க, கல்யாணிக்கு, தான் செய்யும் தவறு தெரிவதில்லை. பாதுகாப்புக்காக, உறவினர் என்ற பெயரில் அவளுடன் கூடவே ஒரு ஆளையும் எதிரிநாட்டவன் வைத்திருக்கிறான்.

இதனிடையே உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை, சீனியர் சிட்டிசன் பாதுகாப்பு என கல்யாணி வீட்டுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் “உன் கணவர் நான்தான்” என்று மனநிலை சரியில்லாத முதியவர் ஒருவர் அடிக்கடி வந்து டார்ச்சர் செய்வதைச் சகிக்க இயலாமல், “இவர் என் கணவர் இல்லை”யென்று கல்யாணி கூறி ஆத்திரமடைகிறாள்.

உறவினர் என்கிற பெயரில் வீட்டில் தங்கியிருப்பவர், கல்யாணியின் வங்கிக் கணக்கில் அதிக பணமிருப்பதைக் கண்டு சந்தேகப்பட்டு கேள்விக் கேட்டு, சத்தம் போட்டு துப்பாக்கியை வைத்து மிரட்டுகையில், லாவகமாக அதைப் பறித்து, கல்யாணி அவனைச் சுட்டுவிடுகிறாள். தவிர, அதைத் தற்கொலையாக மாற்றியும் விடுகிறாள்.

அடிக்கடி வந்து செல்லும் முதியவரையும் சுட்டு விடுகிறாள்.

இறுதியில் உளவுத்துறை அதிகாரிகளிடம், தன்னைப் பற்றிய விபரங்கள்; கடந்தகால கசப்பான அனுபவங்கள்; எதிரி ஃப்ளாக்மெயில் பண்ணியது; உறவினரை கொலை செய்தது என எல்லா விஷயங்களையும் ஒத்துக்கொண்டு கைதாகிறாள். ஆனால், முதியவரைத் தான் கொல்லவில்லையென்று அழுகிறாள்.

உண்மையைக் கண்டறியவே உளவுத்துறை அதிகாரிகள் இப்படியொரு நாடகம் நடத்தியதாகக் கூற, ‘நிழல் நிஜமாகிறது’ நாடகம் முடிவடைகிறது.

இந்திய உளவுத்துறையின் அருமையான செயல்கள்; விழிப்புணர்வு; நடுத்தர வயதுப் பெண்ணின் தவிப்பு; பணத்தாசை போன்றவை அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இடையிடையே காய்கறிக்காரி, பக்கத்து வீட்டுப் பெண்மணி; முதியவரை பரிசோதிக்கும் ஸைக்ட்ரியாஸிட் டாக்டர் ஆகியோர்க வந்து நாடகத்துக்கு மெருகூட்டுகின்றனர்.

நிழல் நிஜமாகிறது’ நாடக டைரக்டர் ரமேஷ் ராமமூர்த்தி;

ரமேஷ் ராமமூர்த்தி
ரமேஷ் ராமமூர்த்தி

மேஷ் ராமமூர்த்தி மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழர். தமிழ் மீது பற்றும் ஆர்வமும் உடையவர். தொழிலதிபராக இருக்கும் இவர் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி, செம்பூரின் Trusteeயும் ஆவார்.  மனிதநேயமும், தெய்வபக்தியும் உடையவர்.

நாடகக் கலையின் மீது ஆர்வமுள்ளவரான ரமேஷ் 2011 முதல் நடிக்க ஆரம்பித்து படிப்படியாகக் கற்று, தற்சமயம் தானாகவே ஒரு நாடகத்தை எழுதி, இயக்கி நடிக்கவும் செய்து இருக்கிறார்.

பிரபல கதாசிரியர் சுஜாதாவின் ரசிகராகிய இவர், அவருடைய கதையின் ஒரு வரியிலிருந்து, இந்த நாடகத்தை எழுதி, இயக்கிப் பாராட்டைப் பெற்றுள்ளார். தவிர, முதல் நாடகமாகிய இதை ஒரே நாளில் எழுதி முடித்திருக்கிறார்.

மும்பை நாடக விழாவில் நடைபெற்ற இந்நாடகத்துக்கு இரு விருதுகள் கிடைத்தன. சென்னையின் டிசம்பர் சங்கீத ஸீஸனில் தற்சமயம் அரங்கேறியது.

வெற்றிக்குக் காரணம் Team Work  என்று அடக்கமாகக் கூறுகிறார்.

 ‘நிழல் நிஜமாகிறது’ நாடகத்தின் நாயகி கல்யாணி (ஐஸ்வர்யா) மற்றும் அவரது கணவர் நீலகண்டன்;

ஐஸ்வர்யா,கணவர் நீலகண்டன்
ஐஸ்வர்யா,கணவர் நீலகண்டன்

ந்தையின் கலைப்பற்று ஆர்வத்தினால், பாப்பிரெட்டி கிராமத்தில் பிறந்த ஐஸ்வர்யா தமிழிசைக் கல்லூரியில் ‘ஆடற்கலைமணி’ நாட்டியத்தினை முறையாகக் கற்றவர். அதன்பின் B.F.A, M.F.A ஆகியவைகளை பத்மபூஷன் குரு டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் மேற்பார்வையிலுள்ள ‘சாஸ்த்ரா’ பல்கலைக் கழகத்தில் பயின்றவர்.

‘ஸ்ரீ சாயி பதம்’ என்கிற அமைப்பினை சென்னை மற்றும் மும்பையில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

பம்பாய் கண்ணன், கே.பாலச்சந்தர், சாணக்யா, ஞானி  போன்ற பல இயக்குனர்களின் நாடகங்களில் நடித்திருக்கிறார். இந்நாடகம் பற்றி இவர் கூறுவதாவது:-

‘நிழல் நிஜமாகிறது’ நாடகத்தின் கல்யாணி பாத்திரம் மிக ஆழமானதான ஒன்றாகும். பெண்ணின் ஆழ்மனதின் உணர்வினை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது. இது என் மனதை கொள்ளை கொண்ட கதாபாத்திரமெனலாம்.

ஒரு பெண்ணின் குடும்பம் தவிர மற்ற கலைகளில் பரிமளிக்க வேண்டுமெனில், அதற்கு உறுதுணையாக கணவர் அமைதல் வேண்டும். இறையருளால் உற்சாகமூட்டி, ஊக்கமளித்து வருகிறார் எனது கணவர் நீலகண்டன்’’.

 நீலகண்டன் (நடராஜன்);

‘நிழல் நிஜமாகிறது’ நாடகத்தில் ATS அதிகாரியாக நடித்தது புது அனுபவம். அருமை மனைவி ஐஸ்வர்யா நாடகத்தில் நடிப்பதைக் கண்டு ஒரு உந்துதல் ஏற்பட்டு 2016 முதல் நடிக்க ஆரம்பித்தேன். இந்த நாடகத்தில் எனக்கு Major Role. மிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் அனுபவித்து நடித்தேன்.

டைரக்டரின் வசனங்களும் நன்றாக அமைக்கப்பட்டு இருந்ததால், நாடகம் பாராட்டைப் பெற்றது.

ஹேமா கண்ணன்;

நிழல் நிஜமாகிறது’ நாடகத்தில் பக்கத்து வீட்டுப் பெண்மணி ஹேமாவாக நடித்து அலட்டிய ஹேமா கண்ணன் கூறுவதாவது:-

”எனது தகப்பனார் லெப்டினென்ட் கர்னல்; சகோதரர் மேஜர் ஜெனரல்.  இருவருமே ஆர்மியில் இருந்த காரணம் இந்தியா முழுவதும்  உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பு. ஆசிரியர் தொழிலில் 37 வருட காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.

ஃபைன் ஆர்ட்ஸ், செம்பூர் நாடகக் குழுவில் இது எனது இரண்டாவது நாடகமாகும். இந்நாடகத்திலுள்ள வசனங்கள், சொந்த வாழ்க்கையில் உபயோகிப்பது போலிருந்த காரணம், அது, கேரக்டருடன் பொருந்தி விட்டது. மேலும், டைரக்டரின் ஆலோசனைகளினால், நடிப்பு மெருகேற்றப்பட்டுள்ளது.

நடித்தவர்கள், உறுதுணையாக செயல்பட்டவர்கள் என அனைவருமே உற்சாக ஊற்றுக்கள் எனலாம். ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பது, உதவி செய்வதென ஒரு குடும்பம் போல இருந்தது.

 டாக்டர் ஏ.குமாரசுவாமி;

டாக்டர் குமாரசுவாமி
டாக்டர் குமாரசுவாமி

நாடகத்தில் சைக்யாட்ரிஸ்ட் ரோலில் டாக்டர் குமாரசுவாமியாக நடித்தவர்.

சீனியர் பல் டாக்டராக இருக்கும் நான் 25000 பேர்களுக்கு மேல் வைத்தியம் செய்துள்ளேன். கல்லூரியில் படிக்கும் காலம் முதலேயே நாடகத்தில் நடிப்பது; பாட்டுப் பாடுவது போன்றவைகளில் விருப்பமுண்டு. தவிர, நிகழ்வுகளைத் தொகுத்தளிப்பது, போட்டிகளை நடத்துவது போன்றவைகளையும் ஆர்வத்துடன் செய்வதுண்டு.

உளவுத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக இருந்து செயல்படும் கேரக்டர் பொருந்திப்போனது. கன்னட மொழி தாய்மொழியாக இருந்தபோதும், ஆங்கிலம், தமிழ், கன்னடம் கலந்த வசனங்களை எனக்காக எழுதப் பட்டதிலும், மேடையில் எதிராளியுடன் நடந்துகொள்ளும் தன்மை, இயற்கையான நடிப்பு போன்றவைகளை வெளிக் கொண்டு வந்ததிலும், டைரக்டருக்கு பெரும் பங்கு உண்டு. இந்நாடகத்தில் சம்பந்தப்பட்டவர்களின் திறமைகளை, பண்புகளை அறிய வாய்ப்பும் கிடைத்தது’’.

ஆஃபிஸ் ஸ்டாப் மீனா;

ஸ்பென்ஸ் நிறைந்த அருமையான நாடகம் நிழல் நிஜமாகிறது. இறுதிவரை அது பாதுகாக்கப்பட்டு, கடைசி 5-6 நிமிடங்களில் சஸ்பென்ஸ் உடைக்கப்படுகிறது. விறுவிறுப்பாக சென்ற நாடகத்தை பார்வையாளர்கள் கூர்ந்து கவனித்ததோடு, இறுதியில் பாராட்டவும் செய்தனர்.

மனநிலை சரியில்லாத முதியவராக, இயக்குனர் ரமேஷ் ராமமூர்த்தி திறம்பட நடித்திருந்தார். இவரும், மற்ற கதாபாத்திரங்கள் என அனைவரும் பாராட்டுக் குரியவர்கள்.

நாடகம் போடுபவர்களுக்கு பலவிதமான தர்மசங்கடங்கள் ஏற்படுவதுண்டு. ஒரு ஆர்டிஸ்ட் கடைசி நிமிடத்தில் வர இயலவில்லையெனில், வேறு ஏற்பாடு செய்யவேண்டும். டைரக்டர் பாடு திண்டாட்டம்தான். டென்ஷன்தான். அவருக்கு பதில் இவர், இவருக்கு பதில் அவரென கடைசி நிமிடத்தில் தயார் செய்யவேண்டும்.

இந்நாடகத்திலும் அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட, லைட்டிங் கவனித்துக் கொள்வதுடன், மற்றுமொரு கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டியதாக அதை ஏற்று திறம்படச் செய்தது இறையருளே.

மொத்தத்தில் நாடகம் success ஆனது டீம் Work னால் என்பது நிதர்சனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com