தகர்க்கப்பட்ட தடுப்புச் சுவர்கள்

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப்போட்டி – 2022
தகர்க்கப்பட்ட தடுப்புச் சுவர்கள்

பரிசுக்கதை – 7

ஓவியம் - தமிழ்

நடுவர் பார்வையில்...

நகர வாழ்க்கையில் அதுவும் அடுக்ககங்களின் வாழ்க்கையில் மனித நேயம் மெல்ல மறைந்து கொண்டிருப்பதை அழகாகச் சொல்வதோடு அதற்கான தீர்வையும் பேசியிருக்கிறார்.

ங்கள் பையன் ஃபாரின் காண்ட்ராக் முடிந்து ஊருக்கு வருதாகவும் அவன் வந்து இந்த வீட்டில் தங்கப் போவதாகவும் வீட்டு ஓனர் வந்து சொல்லிவிட்டுப் போனார்.  உடனே ஒரு  வீட்டைத் தேடும்படி கணவனிடம் சொல்லிவிட்டாள் மங்களம். வரதராஜன் இண்டர்நெட்டில் தேடி, இரண்டு பெட்ரூம் ஃபிளாட் ஒன்று பக்கத்திலேயே கிடைப்பதாக சொன்னார்.

ஓனர் ஒருமாதம் அவகாசம் கொடுத்திருந்தாலும் வீடு கிடைத்துவிட்டால் உடனே மாற்றிக் கொள்ளலாம் என்று கணவனிடம் சொல்லி விட்டாள் மங்களம். புது வீட்டுக்கு ஒனரின் நம்பரை இன்டர்நெட்டில் கண்டுபிடித்து அவரிடம் பேசினார் வரதராஜன்.

இன்டர்நெட்டில் போட்டிருந்த அதே மாதம் பதினைந்தாயிரம் வாடகையும் ஒரு லட்சம் முன் தொகையும் வேண்டும் என்று சொல்லிவிட்டார் அவர். ஆனாலும் அதிலிருந்து கொஞ்சம்கூட குறைக்க முடியாது என்றும் தெளிவாய் சொல்லிவிட்டார் அவர்.

இப்போது அறுபதினாயிரம்தான் முன்தொகை கொடுத்திருக்கிறார்கள். வாடகையும் இரண்டாயிரம் கூடுதல். கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும், பிளாட்டை ஒருதடவை போய் பார்த்துவிட்டு பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் என்று புது வீட்டு ஓனரிடம் சாவியை கொடுக்கச் சொல்லிவிட்டு, தன் கணவனுடன் மொபெட்டில் கிளம்பி விட்டாள் மங்களம்.

அது ஒரு நான்கு மாடி அபார்ட்மென்ட். காம்பவுண்டிற்குள் ஓரமாய் ஒரு ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது. யாருக்காவது உடம்பு சரியில்லையோ என்று யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள் மங்களம். எந்த பரபரப்பும் இல்லை.

கணவனுக்கு ஜாடை காட்டினாள். புரிந்து கொண்ட அவர், ஆம்புலன்ஸ் டிரைவரிடம் போய் விசாரித்தார்.  நான்காவது மாடியில் ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றும் ஒரு முன்னணி ஆஸ்பத்திருக்கு அவரை கொண்டுபோவதற்காக ஆம்புலன்ஸ் வந்திருப்பதாகவும் சொன்னார்.

அப்போதுதான் ஃபிளாட் ஓனரின் பையன் ஓடிவந்து சாவியை கொடுத்தான். படிகளில் ஏறினர். எல்லா ஃபிளாட்டுகளிலுமே நல்ல வேலையில் இருப்பவர்கள் நிறைய பேர் தெரிந்தனர். இரண்டாவது மாடியிலும் அது போலவே இன்சூரன்ஸ் அதிகாரி, வக்கீல், ஆடிட்டர் என்று பெயர் பலகைகள் கட்டியம் கூறின. ஆனால் எல்லா கதவுகளுமே மூடிக் கிடந்தன. ஒவ்வொன்று கொஞ்சமாய் திறந்திருக்க உள்புறம் சங்கிலி போடப் பட்டிருந்தது. யாரோ படிகளில் ஏறுகிறார்கள் என்கிற அரவம் கேட்டாவது யாராவது எட்டிப் பார்ப்பார்களா என்று எதிர்பார்த்தாள் மங்களம். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. யார் வந்தால் நமக்கென்ன என்று உள்ளேயே இருந்து கொள்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டாள் மங்களம்.

அப்போதே ஒரு முடிவு செய்து கொண்டாள் மங்களம். அவர்களது ஃபிளாட்டை திறந்து பார்க்காமல் அப்படியே நேராக நான்காவது மாடிக்கு போய்விட்டார்கள். அங்கே போனதும் ஒரு ஃபிளாட்டில் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் ஒரு பெரியவரை.

விசாரித்ததில், அவருக்கு காய்ச்சலும், மூச்சிறைப்பும் இருப்பதாகவும் அதனால் ஆஸ்பத்திருக்கு கொண்டு போவதாகவும் தெரிவித்தார்கள்.  ஸ்ட்ரெச்சரில் ஏற்றி ஆம்புலன்ஸ் போகும் வரை அவர்களுக்கு உதவியாக கூடவே சென்றார் வரதராஜன். மங்களம் அவரை மட்டும் அனுப்பிவிட்டு அந்த ஃபிளாட்டிலேயே நின்று கொண்டாள். அங்கேயிருந்த ஒரு பாட்டி  இவளுடன் நன்றாக பேசினார்கள்.  அப்போதே புரிந்து கொண்டாள் ஒவ்வொரு குடும்பமும் தனித் தீவு போல இருப்பதாக.

வீடு பிடித்துப்போக வரப்போகும் அமாவசை தினத்தன்று குடி போய்விடலாம் என்று முடிவு செய்துகொண்டார்கள். வீட்டு ஓனரும்  வீட்டுக்கு வெள்ளை அடித்து தயாராக வைப்பதாக சொல்லிவிட்டார்.

ஆனால் பால்மட்டும் காய்ச்சாமல், ஒரு கணபதி ஹோமம் போட்டுவிட்டு குடிபோகலாம் என்று ஆசைப் பட்டாள் மங்களம்.  அப்படியே முடிவு செய்து  ஒரு புரோகிதரிடம் பேசிவிட்டார் வரதராஜன்.

இப்போது உட்கார்ந்து பட்ஜெட் போட்டார் வரதராஜன். லாரி வாடகை, கூலி ஆட்கள், பூஜை சாமான்கள், புரோகிதர்க்கு சம்பளம், வீட்டிற்கு வருபவர்களுக்கு டிபன், இத்யாதி இத்யாதி... கூட்டிப் பார்த்துவிட்டு, இருபதினாயிரம் வருகிறது என்றார்.

அந்த லிஸ்ட்டை வாங்கிப் பார்த்தாள் மங்களம். பூஜை சாமான்களுக்கு ஐயாயிரம், புரோகிதருக்கு மூவாயிரம், லாரிக்கும், கூலியாட்களுக்கும் பத்தாயிரம் சரி. ஆனால் டிபனுக்கு இரண்டாயிரம் மட்டும் போட்டிருந்தார்.  கொஞ்சம் கடுப்பானாள் மங்களம்.

என்ன கணக்குலேங்க, டிபனுக்கு ரெண்டாயிரம் போட்டீங்க என்று கேட்டாள். அவர் இது ஒரு குத்து மதிப்புதான் என்றார்.

அவள் மனக்கணக்காய் போட்டாள்,  ஸ்வீட் வேண்டும், இரண்டு இட்லி வேண்டும், ஒரு பொங்கல், ஒரு வடை வேண்டும், ஒரு ஊத்தப்பம் வேண்டும். கடைசியில் காபி வேண்டும். 

அது நான்கு மாடி அபார்ட்மென்ட். ஒவ்வொரு மாடியிலும் நான்கு வீடுகள் இருக்கின்றன. வீட்டிற்கு நான்கு பேர் வைத்துக் கொண்டாலும் கூட அறுபது பேர்களுக்கு மேல் வருகிறது.  ஸ்வீட், பொங்கல் என்று ஒவ்வொன்றாய் கணக்கு போட்டால், இருநூறுக்கு மேல் வரும். இருநூறே வைத்தாலும் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் வருமே என்று அவள் சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் வரதராஜன்.

‘ வீட்டுக்கு பால் காய்ச்ச போவதற்கு பதினைந்தாயிரம் டிபனுக்கே ஆகிறதா...’ என்று வியந்தார் அவர்.

மறுபடியும் கடுப்பானாள். ‘ நாம மட்டும் போய் கமுக்கமா பூஜை பண்ணிட்டு குடிபோக முடியாதுங்க, நமக்கும் நாலு பேர் வேணும்... பக்கத்து பிளாட் காரங்க எல்லாத்தையும் அழைக்கனும் ‘ என்றாள்.

வரதராஜனும் கொஞ்சம் உரக்கவே சொன்னார். ‘ நீதான் பார்த்தே இல்லை, நாம போனபோது யாராவது கொஞ்சமாவது எட்டிப் பார்த்தாங்களா, யார் வந்தா எனக்கென்னணு எல்லாரும் தாழ் போட்டுக்கிட்டு உள்ளேயே உட்கார்ந்திட்டாங்க. அவ்வளவு ஏன், வெளியே ஆம்புலன்ஸ் வந்து நிக்குது. நாலஞ்சு குடும்பம் ஜன்னலை திறந்து வச்சுக்கிட்டு வேடிக்கை மட்டும் பார்குது.  இந்த லட்சணத்துலே அவங்க எல்லாரையும் அழைச்சு பதினைஞ்சாயிரம் செலவு செஞ்சு டிபன் கொடுக்கனுங்கறே...’

‘ காரணம் இருக்கு பேசாமல் பட்ஜெட்டை மாத்துங்க ’ என்றாள் மங்களம்.

மாவாசைக்கு முதல் நாளே ஒவ்வொரு ஃபிளாட்டாக போய் கதவைத் தட்டி, தாங்கள் புதியதாய் குடிவரும் விஷயத்தை சொல்லி, அவர்கள் அவசியம் பூஜையில் வந்து கலந்து கொள்ளவேண்டும் என்றும், பூஜை முடிந்து டிபன் உண்டு என்றும் விளக்கமாக சொல்லி விட்டு வந்தாள் மங்களம்.  முந்தின நாள் இரவே ஒரு வேலைக் காரம்மாவை வைத்து வீட்டை கூட்டிப் பெருக்கி , துடைத்து கோலமெல்லாம் போட்டு வைத்தாள்.

விடிந்தும் இன்னொருமுறை எல்லார் ஃபிளாட்டிலும் போய் பூஜைக்கு வரும்படியும், டிபன் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றும் அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு திரும்பினாள்.

பூஜை சமயத்தில் நான்கைந்து பேர் மட்டும் வந்திருந்தனர்.  பூஜை நடக்க நடக்க அங்கே நிற்க இடம் இல்லை. அநேகமாய் ஐம்பது பேராவது வந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள் மங்களம்.  பூஜையில் உட்கார்ந்திருந்ததால், வந்தவர்களை புன்னகையிலேயே வரவேற்றார்கள் இருவரும்.

பூஜை முடிந்து ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த டிபன் எல்லோருக்கும் பரிமாறப் பட்டது.  எல்லோரும் கலகலப்பாய் பேசிக்கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர்.

ஒரு பெரியம்மா, ‘ ரொம்ப சந்தோசங்க... கிட்டத்தட்ட, மூணு வருஷத்துக்கு முன்னே ஒருத்தர் கல்யாண விஷேசத்துக்காக எல்லோரையும் கூப்பிட்டிருந்தார். அதுக்கப்புறம் எல்லாருமே இப்போதான் ஒண்ணா கூடியிருக்கிறோம், இன்னும் சொல்லப் போனால்,  இன்னிக்குத்தான் மனம்விட்டு நிறைய பேசினோம்  ‘ என்றார்கள்.

புரிந்துபோனது மங்களத்திற்கு, நிறைய பேர் ரொம்ப இடைவெளிக்குப் பிறகு சந்தித்துக்  கொள்கிறார்கள், பேசிக் கொள்கிறார்கள் என்று.

வீட்டிற்கு வீடுதான் சுவர் எழுப்புகிறார்கள் என்றால், இங்கே மனிதர்களுக்கு இடையிலேயும் தாங்களாகவே சுவர் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். மனிதர்களிடம் மனிதம் தொலைந்து போய்விட்டது என்பதை வந்த முதல் நாளிலேயே உணர்ந்து கொண்டதால்தான் இப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடே செய்தாள் மங்களம்.

 ‘அந்தம்மா சொன்னதை கவனிச்சீங்களா, தடுப்புச் சுவர்களை தகர்த்து எரிஞ்சுடுச்சு பாருங்க என்னோட ஏற்பாடு ‘ என்றாள் கணவனிடம். அவர் மனைவியை ஆச்சரியத்துடன் பார்க்க, அவளோ பெருமிதத்துடன் பார்த்தாள்.

முற்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com