வசந்தம் வரும்!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப்போட்டி- 2022
வசந்தம் வரும்!

ஓவியம்: தமிழ்

பரிசுக்கதை – 9

நடுவர் பார்வையில்...

வளரும் இன்றைய இளைஞனின் அலட்சிய மனப்போக்கு. அதை மாற்ற ஒரு பெண்ணின் மாறுதலான முயற்சிகளைச் செயற்கையாக இல்லாமல் கதையோட்டத்துக்கேற்ப சேர்க்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் மூலம் பேசியிருப்பது கதையின் பலம்.

விஜிரவி
விஜிரவி

வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. படித்துக் கொண்டிருந்த நாளிதழை டீப்பாயின் மேல் போட்டுவிட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தேன். சுமார் பதினேழு வயது சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.

சற்றே சாயம் போன சிவப்பு நிறச்  சட்டையும், நீல நிற பேண்டும் அணிந்திருந்தான். சீப்புக்கு அடங்காத தலைமுடி ‘பம்’ என்று முன்புறம் தூக்கி நின்றது. நல்ல அடர்ந்த புருவங்கள். சற்றே அலட்சியமான விழிகள். மெல்லியதாக மீசை அரும்பியிருந்தது. மாநிறம். கொஞ்சம் பூசினாற் போன்ற உடல்வாகு.

“நான் மல்லிகா மகன் சுந்தர். என்னைய வரச் சொன்னீங்கன்னு அம்மா சொல்லிச்சு...’’ அவன் முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் மிச்சம் இருந்தது.

‘உட்காரு’ சமையலறை சென்று பர்வதத்திடம் ஒரு காபி போடச்சொல்லி, எடுத்து வந்தேன். அவன் வெளிச்சுவரில் மாட்டியிருந்த எனது மற்றும் என் கணவரின் பெயர்ப் பலகைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

மல்லிகா எனக்கு பத்து வருடங்களாகப் பழக்கம். தலைக்கு வைக்க மல்லிகைப்பூ, முல்லைப்பூ, சாமி படங்களுக்குக் கதம்பம் அல்லது செவ்வந்தி என்று கொண்டு வருவாள். மற்றப் பூக்காரிகளைப் போல் தள்ளிக் கட்டிய பூச்சரமாக இல்லாமல், இவள் நெருக்கமாகப் பூத்தொடுத்து எடுத்து வருவாள்.

சுந்தருக்கு மூன்று வயதாகும்போது விபத்தொன்றில் அவள் கணவன் அகால மரணமடைந்து விட, தன் ஒரே மகனுக்காகத்தான் வைராக்கியத்துடன் வாழ்ந்து வருவதாகச் சொல்லுவாள். சமீபமாக அவள் முகத்தில் புன்னகையைக் காண முடியவில்லை. ஏதாவது பிரச்னையா என விசாரித்ததும் மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்த்துவிட்டாள்.

“அக்கா... எம் மவன் ஓரளவுக்கு நல்லாத்தான் படிச்சுக்கிட்டு இருந்தான். ரெண்டு வருஷம் முன்ன இந்தக் கொரோனா வந்து ஸ்கூல் எல்லாம் மூடவும், பசங்களோட சேர்ந்து விளையாடிக்கிட்டு ஜாலியா இருந்தான். எங்க ஏரியாவுல டீக்கடை வச்சிருக்கிற மாரியண்ணன் ஒரு நாள் இவனை தன் கடைக்கு வந்து ‘கூடமாட ஒத்தாசை பண்ணுன்னு’ சொல்லி கூட்டிட்டுப் போனாரு... சாயந்திரம் திரும்பி வர்றப்ப இவன் கையில இருபது, முப்பதுனு காசு வர, இவனுக்கு ஒரே சந்தோஷம்.  ‘பார்த்தியாம்மா? இந்த வயசுலயே சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டே’ன்னான். எனக்கும் அப்பப்ப உடம்பு முடியாம, பூ வியாபாரத்துக்குப் போக முடியாம இருந்ததுல, சரி செலவுக்கு ஆச்சுன்னு கொஞ்சம் அசால்ட்டா விட்டுட்டேன். ரெண்டு மூணு மாசம் கழிச்சு அங்கிருந்து நின்னுட்டு ஒரு மெக்கானிக் ஷாப்பில் சேந்து, அங்க வேலை செய்யறவங்களுக்கு டீ, பலகாரம் வாங்கித் தர்றது, வண்டி கழுவறதுன்னு செஞ்சுட்டு இருக்கான்.’’

“இதெல்லாம் வேணாண்டா... மறுபடியும் பள்ளிக்கோடம் போன்னு மிரட்டி, கெஞ்சிக்கூட பார்த்துட்டேன். அவன் கேட்கறதா இல்லை. இவன் தலையெடுத்து நல்லா வரணும்னு கனவு கண்டிட்டு இருக்கேன். ரொம்ப தொந்தரவு செஞ்சீன்னா நான் வீட்டுலயே இருக்க மாட்டேன். எங்கியாவது ஓடிப்போயிருவேன்னு மிரட்டறான்க்கா. எனக்குன்னு இருக்கிற ஒத்தப் புள்ளயத் தொலைச்சுட்டு நான் என்ன பண்ணுவேன்?’’ பெருங்குரலெடுத்து அழத் துவங்கியவளைச் சமாதானப்படுத்தினேன். அவளுக்கு ஏதாவது நன்மை செய்யத் துடித்தது மனம்.

பொதுவாக படிப்பில் ஆர்வமில்லாத பிள்ளைகள், அதுவும் கண்டிக்கத் தகப்பனில்லாத பிள்ளைகள் பள்ளியிலிருந்து இடைநிற்றல் செய்வது நடக்கும்தான். அதுவும் ஒன்றரை வருடங்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்த மாணவர்களின் மனநிலை மிகவும் விசித்திரமாகத்தானே இருக்கிறது? சமூக ஊடகங்களில் மயங்கி, பண்பைத் தொலைத்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையே அடிக்கக் கையோங்கும் அளவு புத்தி கெட்டு... ம்... என்னத்தைச் சொல்ல?

“சுந்தர்” நான் அழைத்ததும் திரும்பிப் பார்த்தான். முகத்தின் இறுக்கத்தையும் மீறி ஒரு அப்பாவித்தனம் தெரிந்தது. உலகம் தெரியாத பையன் என்று பச்சாதாபம் எழுந்தது அவன் மேல்.

“உள்ள வா...  உட்காந்து இந்தக் காபியைக் குடி”  நான் நீட்டிய தம்ளரைக் கூச்சத்துடன் கையை நீட்டி வாங்கிக்கொண்டான்.

“உன்னை எதுக்கு வரச் சொன்னேன் தெரியுமா?” தெரியாது என்பது போல தலையை ஆட்டினான்.

“என்னுடைய மகன் ரஞ்சித்துக்கு பெங்களூருவில வேலை கிடைச்சிருக்கு. ஊருக்குக் கிளம்பப் போறான்.  துணிமணி எல்லாம் பாக் பண்ணனும். அதுக்கு ஒத்தாசை பண்ணத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.”

அவன் காபி குடித்து முடித்ததும் நான் அவனை அழைத்துக்கொண்டு என்னுடைய மகனின் அறையை நோக்கி நடந்தேன்.

தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் என் அருமை மகன். கப்போர்டு எல்லாம் திறந்து கிடக்க அதிலிருந்த துணிகளையெல்லாம் அள்ளி கட்டிலின் மீது வரிசையாக அடுக்கி இருந்தான்.

 “ரஞ்சித், நான் சொன்ன சுந்தர் வந்திருக்கான் பாரு.”

அவனைப் பார்த்து புன்னகைத்த ரஞ்சித், “ஹாய் சுந்தர்! இப்படி வா... உக்காரு” என்றதும் அவனருகே தரையில் அமர்ந்துகொண்டான் சுந்தர். நான் கையில் ஒரு புத்தகத்துடன் மூலையிலிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்துகொண்டேன்.

ரஞ்சித்துக்கு நான் கண்ணால் சொன்ன செய்தி நன்றாகவே புரிய, தன் எதிரிலிருக்கும் அந்தச் சிறுவனைப் பரிவோடு பார்த்தான். தனக்கு உதவி செய்ய அவனை அழைத்திருப்பது சும்மா பேருக்காக என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

“ரஞ்சித், பொதுவாவே அட்வைஸ்னு ஆரம்பிச்சா பசங்க ஓடியே போயிருவாங்க. அதனால் அவன்கிட்ட நான் பேசறது சரிப்படாது. அவனுக்கு வாழ்க்கைனா என்னன்னு மறைமுகமா உணர்த்து கண்ணா. பாவம். வளரவேண்டிய பையன்” என்று அவனிடம் நேற்று சொன்னதும், “நான் பார்த்துக்கறேம்மா” என்றேன்.  

“சுந்தர், இப்ப நாம என்ன பண்ணனும் தெரியுமா? என்னுடைய உடைகளை எல்லாம் வகை வாரியாகப் பிரிக்கணும். நான் ஊருக்கு கொண்டு போற துணிகளை பெட்டியில வைக்கணும். பத்தாம போன துணிகளைத் தனியா எடுத்து வைச்சு, அதை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்குக் கொடுக்கணும். முதல்ல, அதோ அந்தப் புத்தக அலமாரியில இருந்து, சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தரேன். அவைகளை ஊருக்குக் கொண்டு போறதுக்கு பேக் பண்ணிடு” என்று ரஞ்சித் சொன்னதும், சுறுசுறுப்பாக அவற்றைப் பார்சலாக கட்டினான் சுந்தர். பின் நூலகங்களுக்கு என சில புத்தகங்களைத் தனியாக பார்சல் செய்யச் சொல்லிவிட்டு, ரஞ்சித் துணிமணிகள் வகை பிரிக்க ஆரம்பித்தான்.

“அண்ணா... நீங்க என்ன வேலை பார்க்கப் போறீங்க?”

“மென்பொருள் பொறியாளர்...” என்றதும் விழித்தான்.

 “அதாம்ப்பா... ஐ.டி வேலை...”

“ஓ! அப்படியா? எவ்வளவுண்ணா சம்பளம்?” என்றான் ஆர்வமாக.

“நாற்பதாயிரம்” என்றதும் கண்களை அகல விரித்தான். “அடேங்கப்பா... அவ்வளவு சம்பளம் தருவாங்களா...?” 

“இது என்ன பிரமாதம்? எங்கம்மாவும், அப்பாவும் ஆளுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்குறாங்க தெரியுமா?” என்றதும் அவன் பிரமிப்பில் பேச்சற்று நின்றான். என்னை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தான்.

“ரெண்டு பேரும் டாக்டருங்களாண்ணே?” எனக்குள் சிரித்துக்கொண்டேன். ‘வெரி குட்.’ நான் எதிர்பார்த்த திசையில் பேச்சு நகர்கிறது.

“ஊசி போடுற டாக்டர் இல்லை. பிஹெச்டின்னு டாக்டர் பட்டம் வாங்கியிருக்காங்க. காலேஜ்ல பேராசிரியர்கள்.” 

“அதுக்கெல்லாம் ரொம்ப வருஷம் படிக்கணுமே...”

“ஆமாம். ஆனா, நான் நாலு வருஷம்தான் காலேஜ்ல படிச்சேன். இப்ப எனக்கு  இருபத்தி ஒண்ணுதான் ஆகுது. என்ன, உன்னவிட நாலு வயசுதான் பெரியவன்” என்ற ரஞ்சித்தின் வார்த்தைகளில் சற்று அடிபட்டாற்போல ஆனது அவன் முகம். 

“நீ என்ன படிச்சுட்டு இருந்த?” என்றதும் “ஒன்பதாவது வரைக்கும் போனேன். அதுக்கப்புறம் படிக்கணும்னு தோணவே இல்ல... என்னதான் படிச்சாலும் என்ன பெரிசா சம்பளம் கிடைக்கப் போகுது?’’ 

“அப்படியா...? சரி, இப்ப நீ என்ன வேலை செஞ்சுட்டு இருக்க? எவ்வளவு சம்பாதிக்கறே?”

“ஏதோ கிடைச்ச வேலையைச் செஞ்சிட்டு இருக்கேன். எப்படியும் மூவாயிரம் கிடைக்கும்.”

“இது போதும்னு நினைக்கிறியா? உங்கம்மா இப்படியே காலம் பூரா நடந்து நடந்து பூ விக்கவேண்டியதுதானா? நீ பத்தாயிரம் சம்பளம் வாங்கிறதுக்கு எத்தனை வருஷம் ஆகும் தெரியுமா? அதுக்குள்ள விலைவாசி எல்லாம் ஏறிப் போய் நீ குடும்பம் நடத்துறதே கஷ்டமா இருக்கும் தெரியுமா?”

“அப்படீனா படிக்காதவங்க எல்லாம் இந்த இங்கே வாழறதுக்கு தகுதியில்லாதவங்கன்னு சொல்றீங்களா? எத்தனையோ பேரு ஒண்ணுமே படிக்காம தொழில் செஞ்சு முன்னேறுறது இல்லையா?” என்றான் சற்றே சூடாக.

‘வாவ்.  நான் எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்துவிட்டது. அவனுடைய ஈகோ காயம் பட்டுவிட்டது என்று நான் புரிந்துகொண்டேன். இனி என் மகன் இவனை ஜாக்கிரதையாக கையாள வேண்டுமே என்ற கவலையும் எனக்குள் எழுந்தது. 

“இருக்காங்க. பத்தாயிரம் பேர்ல ஒருத்தர், ரெண்டு பேரு தொழில் செஞ்சு பெரிய லெவெல்ல இருக்காங்க. மீதிப்பேர் எல்லாம் கூலிக்காரங்களா... வேலையாட்களா.... அடிமாட்டு சம்பளத்தில்தான் வேலை செய்யறாங்க. தங்கள் வாழ்நாள் முழுக்க கைக்கும் வாய்க்கும் கஷ்டப்பட்டுகிட்டு... நீ சினிமால பார்க்கிற மாதிரி ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகிறதெல்லாம் நிஜ வாழ்க்கையில நடக்காது தம்பி. நாளைக்கு நீ தொழில் செய்யணும்னு முடிவு செஞ்சாக்கூட, படிப்புங்கற அடித்தளம் ரொம்ப அவசியம். நல்லா டெக்னாலாஜி தெரிஞ்சுக்கிட்டு நீ தொழில்ல நல்லா மேல வரலாம். வாழ்நாள் முழுக்க சௌகரியமா இருக்கலாமில்லை?” என்றான் ரஞ்சித் நிதானமாக.

“ஆனா, படிக்கிறது ஒண்ணும் அவ்வளவு ஈஸி இல்லையே? ரொம்ப செலவாகுமே...” என்றான் வாடிய முகத்துடன்.

“நீ ஏன்ப்பா கஷ்டப்பட்டு படிக்கிற? உனக்குப் பிடிச்சதை இஷ்டப்பட்டுப் படி. எத்தனையோ ஸ்காலர்ஷிப் எக்ஸாம் இருக்கு. உனக்கு அப்பா வேற இல்லன்னு கேள்விப் பட்டேன். உன்  மாதிரி பசங்களுக்கு எத்தனையோ சலுகைகள் கிடைக்கும். இப்ப மனதை அலைபாய விடாம படிப்பில் கவனம் செலுத்து. உன்னுடைய பிற்கால வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். மிஞ்சிப்போனா ஒரு ஆறு, ஏழு வருஷம் நீ படிப்பில் கவனம் செலுத்தினா உன் வாழ்க்கையில நீ எங்கேயோ போய்டலாம்” என்றேன் நான் இதமாக.

“இதெல்லாம் எனக்கு ஒத்துவராது மேடம்” என்றான் அசட்டையாக. 

அவன் உதவியுடன் துணிகளை சூட்கேசிலும், ஏர் பேக்கிலும் அடுக்கி முடித்தாயிற்று. பழைய துணியால் கப்போர்டை தூசு தட்டி சுத்தம் செய்து மீதி துணிகளை மிக அழகாக அடுக்கி வைத்தான்.

ரஞ்சித்தின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பேசியவன்,  ‘’அம்மா, மதனும் ஆன்ட்டியும் வந்திருக்கிறாங்க. சுந்தர், நீயும் வா. என் பிரெண்டை பாத்துட்டு வந்திடலாம்.”

மூவரும் மாடிப்படி இறங்கி கீழே வந்தோம். ‘டேய் ரஞ்சித்’ என ஓடி வந்து  கட்டிக்கொண்ட மதன். அவன் தாய் ரேவதி “நல்லா இருக்கீங்களாம்மா? தம்பி, எப்படி இருக்கீங்க?” என்றாள் சிரித்த முகத்துடன்.

“நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்கதான் எங்களை மறந்துட்டீங்க... மதன் வந்தாதான் இங்க வரணுமா என்ன?” ரஞ்சித் உரிமையுடன் கேட்க, “நல்லா கேளு ரஞ்சி... ரேவதி இங்க வந்து மூணு மாசம் ஆயிடுச்சு...” என்றேன் சிரித்தபடி.

“சேச்சே... அப்படியெல்லாம் இல்லப்பா... எங்க வாழ்க்கையில் விளக்கேத்தி வச்ச உங்க அப்பாவையும் அம்மாவையும் மறந்திடுவேனா? உங்க வீட்டு வேலைக்காரியா இருந்த என் குடும்பம் நல்லா இருக்கணும்னு, என் பையன் கல்லூரி படிப்புக்கு பேங்க்ல லோன் வாங்கிக் கொடுத்தார் ஐயா.. இப்ப அவன் ரயில்வேல என்ஜினியராக இருக்கான். உங்க குடும்பத்துக்கு காலத்துக்கும் கடமைப்பட்டிருக்கோம்” என்றாள் ரேவதி குரல் கம்ம.

நான் அவள் கைகளைப் பிடித்தபடி, “என்ன பெருசா பண்ணிட்டோம்? நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும்னு நினைக்கிறவனுக்கு எல்லா உதவியும் தன்னால தேடி வந்துட்டுப் போகுது. இதிலென்ன ஆச்சர்யம்?’’ என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றேன்.

“அடடா.. என்ன இது ஒரே செண்டிமெண்ட் பேச்சாவே இருக்கு! அப்புறம் பீல் பண்ணலாம். பசிக்குது’’  ரஞ்சித் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல எல்லோரும் சிரித்தோம்.

“ஆமா... மணி ஒன்பதாகப் போகுது... எல்லாரும் உக்காருங்க. சுடச் சுட பொங்கலும், பூரியும் ரெடியாயிருக்கு...’’ என்றாள் பர்வதம்.

‘’வேண்டாம்’’ எனக் கூச்சத்துடன் மறுத்த ரேவதியை நானும் ரஞ்சித்தும் வற்புறுத்தி உணவு மேஜையின் முன்பு அமர வைத்தோம். அதே போலத் தயங்கிய சுந்தரையும் அமரவைத்து அவன் இருபுறமும் மதனும், ரஞ்சித்தும் அமர்ந்தனர்.

நடப்பவற்றை எல்லாம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். ஏதோ கனவுலகத்தில் இருப்பதைப்போல இருந்தது அவன் முகம். குனிந்து தன் உடைகளை ஒரு முறை பார்த்துக்கொண்டான். சட்டையில் முன் பட்டன் இல்லை. நைந்துபோன காலர். பழுப்பேறிய பேண்ட்... கால் பகுதியில் தையல் பிரிந்து... அந்தச் சூழ்நிலைக்கு ஒட்டாமல் இருக்கிறது என நினைக்கிறானோ?  

சாப்பிட்டு முடித்து, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் ரேவதியும், மதனும் கிளம்பிச் சென்றனர். நாற்காலியில் தலையைத் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தவனின் தோள் தொட்டு, “என்ன யோசனை சுந்தர்?’’ என்று ரஞ்சித் வினவியதும், “ஒண்ணுமில்லைண்ணா’’ என்றான்.

‘’இப்ப வந்துட்டுப் போன மதன் எனக்கு சின்ன வயசில இருந்து பிரண்ட். ரேவதி ஆன்ட்டி இங்க வீட்டுக்குள்ள வேலை செய்யும்போது, நானும் அவனும் சேர்ந்து தோட்டத்தில விளையாடுவோம். கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிச்சான். நல்ல கெட்டிக்காரன். பத்தாவது முடிச்சதும், அவனோட அப்பா, படிச்சது போதும்; தன்னோட மில்லுக்கு கூலி வேலைக்கு வான்னு கூப்பிட்டார். அவன் கூட சரின்னுட்டான். அப்ப நானு, அம்மா, அப்பா எல்லாரும் எடுத்துச் சொல்லி அவங்கப்பா மனசை மாத்தி மேற்கொண்டு அவனை படிக்கச் சொன்னோம். எஞ்சினீயரிங் படிச்சான். அப்படியே ரயில்வே எக்ஸாம் எழுதி, பாஸ் பண்ணி, இப்ப நல்ல சம்பளத்துல வேலைல இருக்கான். அவங்கம்மா வீட்டுல நிம்மதியா இருக்காங்க...’’ என நீளமாய் பேசிமுடித்தான் ரஞ்சித். நிமிர்ந்து அவனையும், என்னையும் மாறிமாறிப் பார்த்தான் சுந்தர். அவன் என்னவோ சொல்ல வருவதை யூகித்த நான், “என்னப்பா... சொல்லு..’’ என்றேன்.

‘’இல்லை... வீட்டு வேலை செஞ்சவங்களை தன் கூட சரிசமமா உக்கார வைச்சு சாப்பாடு போடுறதெல்லாம் நான் எங்கியும் பாத்ததில்லை... ‘டேய் வாடா இங்கேனு...’ கூப்பிட்டு ஏடு படிஞ்ச, ஆறிப்போன டீயை போனாப் போகுதுன்னுதான் எனக்கு கொடுப்பாரு மெக்கானிக் ஷாப் முதலாளி... பெயர் சொல்லிக்கூட கூப்பிடாம ‘டேய் வீணாப்போனவனே... எடுபிடி’ அப்படின்னுதான் சொல்லுவாரு.’’

‘’மாசக்கடைசியில் கையில் பணம் இல்லாமல் மளிகைக்கடையில் பொருளு வாங்க நானும் அம்மாவும் நிற்கும்போது கடைக்கார அண்ணாச்சி,

“ஏற்கனவே வாங்குன கடனே இன்னும் தீரல... எப்போ அடைக்கப்போற? நீ பாட்டுக்கு கடனை ஏத்திட்டே போற?”னு சத்தமாக் கத்திட்டு, வேணும்னுனே ரொம்ப நேரம் காக்க வச்சு, பொருள்களை வேண்டா வெறுப்பாகக் கொடுப்பாரு. என் அம்மாவை மரியாதையா யாரும் பேசி நான் கேட்டதில்லை. இனிமேலும் யார் பேசப் போறாங்க? தனியா இருக்கற பொம்பளதானேனு என்னைக் கண்டா சிலபேருக்கு இளக்காரம்டான்னு சொல்லி அழுகும் அம்மா... பாவம், இப்பவே நடக்க முடியலை அதால... ஊர் பூரா நடந்தே சுத்தி பூ விக்க கஷ்டப்படுது. ராத்திரியானா கால் வலிக்கிதுன்னு சொல்லும்’’  என்றவனின் கண்களில் தாரையாகக் கண்ணீர்.

“அடேடே... என்னப்பா இது!’’ அவன் முதுகில் ஆதரவாய் நான் தட்டிக் கொடுக்க, “ரிலாக்ஸ்’’ என அவனைத் தோள் சேர்த்து அணைத்துக்கொண்டான் ரஞ்சித்.

“நான் படிக்கிறேன் அண்ணா. நல்ல வேலைக்குப் போய் அம்மாவை உக்காரவச்சு சோறு போடறேன். வீட்டுக்குப் போய், ‘அம்மா, நான் நாளையிலிருந்து ஒழுங்கா ஸ்கூலுக்குப் போறேன்”ன்னு சொல்வேன். அம்மா பூரிச்சு போயிரும்.’’ கண்கள் சந்தோஷத்தில் மிதக்க முகமெல்லாம் மலர்ந்து அந்தச் சிறுவன் புன்னகைத்த அந்தக் காட்சியில் மனம் நிறைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com