
-பேராசிரியர் டாக்டர் முத்துச் செல்லக்குமார்
வாழுமிடங்களிலும் சரி, பயணம் செய்வதாக வெளியிடங்களிலும் சரி, பல்வேறு பூச்சியினங்களினால் மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ‘ஒவ்வாமை’ ஏற்பட்டு தோல் பாதிப்பு உள்ளவர்களைப் பார்க்கும் யாரும், ‘என்ன பூச்சி எதுவும் கடிச்சிருச்சா? என்று கேட்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
பூச்சியினங்களில் எண்ணற்ற வகைகள் இருந்த போதும், ஒரு சில இனங்களினால்தான் மனிதர்களுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு ஒவ்வாமை உண்டாகிறது. அவற்றைக் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூச்சி இனங்களில் மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன.
கடிக்கும் பூச்சி இனங்கள் (Biting Insects)
சில பூச்சியினங்கள் கடிப்பதனாலும், அவை அவ்வாறு கடிக்கும்போது அவற்றின் நீரானது கடிக்கும் தோலில் கசிவதாலும் ஒவ்வாமை ஏற்படும்.
கொசு, மூட்டைப்பூச்சி, சிலந்திப் பூச்சிகள் (Mosquitoes, Bedbugs, Spiders) சில வகை ஈக்கள், ஒட்டுண்ணிகள் (Flies, Fleas, Mites) ஆகியவை கடிப்பதனால் மனிதர்களுக்குத் தோலில் ஒவ்வாமை ஏற்படும். இவை அவ்வாறு கடிக்கும்போது, பல்வேறு நுண்கிருமிகளை மனிதர்களின் உடலில் செலுத்திப் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன என்பது மற்றொரு செய்தி!
கொட்டும் பூச்சி இனங்கள் (Stringing Insects):
சில பூச்சி இனங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு தேளிற்கு இருப்பதுபோல சிறிய கொடுக்கு இருக்கும். இவை மனிதனைக் கொட்டும்போது அதிலுள்ள நாளத்தின் மூலம் சேமிக்கப்பட்டிருக்கும் விஷம் மனித உடலுக்குள் செலுத்தப்படும். இதன் காரணமாக மனிதனுக்கு ஒவ்வாமையால் பெரும் பாதிப்பு ஏற்படும். தேனீ வகைகள், குளவிகள் (Bees, Wasps, homets), சில வகை எறும்புகள் (Fire Ants) ஆகியவை இந்த வகையில் விஷத்தை மனித உடலுக்குள் செலுத்துகின்றன.
கடிக்காமலும், கொட்டாமலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூச்சி இனங்கள் (Non-biting and Non – stinging Insects):
சில பூச்சியினங்கள் இருக்கின்றன. இவை கடிப்பது மில்லை; கொட்டுவதுமில்லை. ஆனால், இவை மனித உடலில் படுவதாலோ, உடலில் ஏறிச் செல்வதாலோ ஒவ்வாமை ஏற்படும். வீட்டுத் தூசியில் வாழ்க்கை நடத்தும் பூச்சிகளையும், கரப்பான் பூச்சிகளையும் இந்த வகையில் சேர்க்கலாம்.
பூச்சிகளின் ஒவ்வாமையினால் ஏற்படும் தொந்தரவுகளும் பாதிப்புகளும்
*பாதிக்கப்பட்ட பகுதியில், ஒவ்வாமையினால் தடிப்பு, வீக்கம், அரிப்பு, தோல் சிவந்துபோதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
*மேற்கூறிய தொந்தரவுகள் குறையாமல் அதிகரித்துக் கொண்டே சென்று, பல நாட்கள் நீடிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதியில், வலி அல்லது மதமதப்பு ஏற்படலாம்.
*பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமல்லாமல், உடலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம். உடல் முழுவதும் அரிப்பு, தடிப்பு, கை - கால் - முக வீக்கம் ஆகியவற்றுடன் உடல் தளர்வு போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்.
*‘ஒவ்வாமை பெரும் பாதிப்பாக’ உருவெடுத்து, இதயம், சுவாச மண்டலத்தைப் பாதிப்படையச் செய்யலாம். இதன் காரணமாக, தோல் தடிப்பு, பாதிப்புடன், உதடு, நாக்கு, தொண்டைப் பகுதிகளும் சிவந்து தடித்துவிடும். ரத்த அழுத்தம் குறையும். மூச்சுவிட முடியாமல் நோயாளிகள் சிரமப்படுவார்கள்.
இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றோட்டம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். படபடப்பு, வலிப்பு ஆகிய தொந்தரவுகளும் ஏற்படலாம். நோயாளி, தளர்ந்து மயங்கியும் விடலாம். ஒவ் வாமை பெரும் பாதிப்பினால் சிலர் இறப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய ஒவ்வாமை பெரும் பாதிப்பு (Anaphylaxis), கொட்டும் பூச்சியினங்களினால்தான் ஏற்படுகின்றன.
கொடுக்கை வெளியேற்ற வேண்டும்
கொட்டிய இடத்திலுள்ள பூச்சிகளின் கொடுக்கை (Stinger And Sac) முதலில் மெதுவாக எடுத்துவிட வேண்டும். கொட்டிய இடத்தில் அழுத்தம் கொடுக்கக் கூடாது. அது கொடுக்கிலுள்ள விஷத்தை மேலும் உடலுக்குள் செலுத்தும்.
கொட்டிய இடத்தில் மேலும் தேனீக்கள், குளவிகள் இருந்தால் உடனடியாக அந்த இடத்தை விட்டு வர வேண்டும்.
கொட்டிய கை - கால் பகுதியை தொங்கவிடாமல் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
வலியுள்ள இடத்தில் கொடுக்கை எடுத்தபிறகு, ஐஸ்கட்டிகளை வைப்பதால் வலி குறையும்.
மேலும், அந்த இடத்தைச் சுத்தமாகக் கழுவி, நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொட்டியவர்களைத் தைரியப்படுத்த வேண்டும். அவர்களைத் தேவையில்லாமல் சிலர் பயமுறுத்தலாம். அது தவிர்க்கப்பட வேண்டும்.
பூச்சியினங்களால் ஏற்படும் ஒவ்வாமையைத் தவிர்ப்பது எப்படி?
*கொசு, மூட்டைப்பூச்சி, பேன் போன்றவைதான் மனிதர்களைத் தங்களின் உணவுக்காகக் கடிக்கின்றன.
*கொட்டுகின்ற பூச்சிகள் பெரும்பாலும் அதன் வழியில் சென்றாலோ அல்லது அவற்றின் கூட்டைப் பாதுகாக்கவோதான் மனிதர்களைக் கொட்டுகின்றன. ஆனால், சிலவகை குளவிகள் மிகவும் ஆக்ரோஷ மானவை. அவை உணவுக்காக இரை தேடும்போது மனிதர்களைக் கொட்டலாம். எனவே, எச்சரிக்கைத் தேவை!
* வெளியிடங்களில் சென்று சமைக்கின்ற போதும், திறந்த வெளிகளில் உணவையோ, உணவுக் கழிவுகளையோ நன்கு மூடி வைக்க விட்டால் அங்கு இதுபோன்ற பூச்சிகள் வர வாய்ப்பு உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
* காடு, மலைப் பிரதேசங்கள் மற்றும் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லும்போது மிகவும் வண்ணமயமான (Bright Coloured) ஆடைகளை அணியக்கூடாது. அவை பூச்சியினங்களைக் கவரும்.
* வாசனைத் திரவியங்கள், உடலுக்கும், உடைகளுக்கும் பயன்படுத்தப்படும் ஸ்ஃப்ரே (Perfumes) வகைகள் பூச்சியினங்களை ஈர்க்கும். எனவே, இதனையும் தவிர்த்துவிட வேண்டும்.
* வெளியிடங்களுக்கு, குறிப்பாக வனப்பகுதிகளுக்குச் செல்லும்போது, ‘ஷூ’ அணிந்துகொள்ள வேண்டும்.
* கையுறை, காலுறைகளைப் போட்டுக் கொள்வதுடன் நீண்ட, முழுக்கைச் சட்டை, டவுசர்களைப் பயன்படுத்த வேண்டும்.
* வீட்டிலும், வெளியிலும் குளவி, தேனீ கட்டிய கூடுகள் இருந்தால், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அவற்றை அகற்றவேண்டும்.
* குறிப்பிட்ட பூச்சியினத்தால் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள், மீண்டும் அதே பூச்சிகளால் ஒவ்வாமையோ அல்லது ஒவ்வாமை பெரும் பாதிப்போ ஏற்படாமல் தடுக்க, மருத்துவரின் ஆலோசனையை அவசியம் பெற்று, குறிப்பிட்ட பூச்சியினத்தின் ஒவ்வாமைப் பொருளையே, விஷத்தையே (Venom – Immunotheraphy) மிகக் குறைந்த அளவில் தடுப்பூசியாகக் குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்திப் பயன்பெறலாம்.
(மங்கையர் மலர், மே 1-15, 2017)