அங்கோர் வாட் , கம்போடியா சுற்றுலா

பயணக்கட்டுரை
அங்கோர் வாட் , கம்போடியா சுற்றுலா

- ஜெ. கண்ணன்

ம்போடியா அங்கோர் வாட் ஆலயம் பற்றி கேள்வி பட்டதிலிருந்து என் வாழ்வில் என்றாவது ஒரு நாள் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். கடந்த 31 ஆகஸ்ட் அன்று தொடங்கி  மூன்று நாட்கள் பயணமாக நண்பருடன் கம்போடியா செல்ல திட்டமிட்டோம். முதல் நாட்கள்   சிங்கப்பூரில் நடைபெற்ற மருத்துவ உபகரண கண்காட்சி (Medical fair Asia)  கலந்து கொண்டு விட்டு, பின்னர் 2 1/2  நாட்கள் சிங்கப்பூர் நண்பருடன் கம்போடியா செல்லவதாக  திட்டம்.

நண்பரை அழைத்துக் கொண்டு சிங்கப்பூரில் இருந்து Siem Reap - Cambodia வந்தேன், எனக்கு இந்திய கடவு சீட்டு ( passport )என்பதால்  e-visa வாங்கி கொண்டேன். என் நண்பர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றதனால், அவருக்கு விசா தேவையாக இருக்கவில்லை .

கம்போடியாவில் இன்னும் சுற்றுலா களைகட்டவில்லை.  சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாகவே  இருந்தது. ஒரு  நாளைக்கு  5 முதல் 6 சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து விமானங்களே வந்து செல்கின்றன. விமான பயண கட்டணம் சற்று கூடுதல் தான், ஆனால் தங்கும் விடுதிகள் மிக மலிவு என்பது சுற்றுலா பயணிகளுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தி.

கம்போடியாவில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டணம் நாள் ஒன்றுக்கு காலை உணவுடன் 40USD க்கு கிடைக்கிறது. சீசன் களைகட்டினால் USD 120 வரை அதிகரிக்க வாய்ப்புண்டு.

முன் கூட்டிய ஏற்பாடு செய்திருந்ததால் விமான நிலையத்தில் விடுதியின் ஓட்டுனர் என் பெயர் தாங்கிய அட்டையை பிடித்தபடி  நின்று கொண்டிருந்தார்,  எங்கள் பாஸ்பர அறிமுகத்திற்கு பிறகு  7 கிமீ தொலைவில் இருந்த விடுதியில் கொண்டு போய் பாதுகாப்புடன் சேர்த்தார்.

இன்று விடுதியில் ஓய்வு எடுத்து கொண்டு  நாளை அங்கோர்வாட் செல்லத் திட்டம்….

காலை சிற்றுண்டியை முடித்து, 10.30 மணிக்கு ஆயத்தமாகி கிளம்பினோம். நாங்கள் தங்கி இருந்த விடுதி அருகிலேயே அங்கோர்வாட் செல்ல tuk-tuk எனப்படும் மின் ரிக்‌ஷா கிடைத்தது,  ஒரு நாள் முழுவதும் அதில் பயணிக்க கட்டணம் 15 USD. அதாவது  இந்திய ரூபாயின் மதிப்பில் 1300/- சுமார் ஐந்து கிமீ தூரம் பயணம் செய்தோம். அதன் பிறகு  நுழைவு சீட்டு வாங்க அழைத்துச் சென்றார். வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் அங்கோர் வாட்  மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட  USD 37. ஆனால்  உள்ளூர்காரர்களுக்கு முற்றிலும் இலவசம்.

நாங்கள் ஒருநாள் சுற்றுலாவிற்கான நுழைவு சீட்டு வாங்கினோம், இரண்டு நாளைக்கு பயன்படுத்தலாம் என்ற சிறப்பு சலுகை சேர்த்து தந்தனர். அங்கிருந்து 3 கிமீ தொலைவில் அங்கோர்வாட் இருந்தது. சுற்றுலா வழிகாட்டி ஒருவருடன் இணைந்து கொண்டோம். அங்கே  உள்ளூர்வாசிகள் சிலர் பாரம்பரிய உடைகளுடன் வந்து கொண்டிருந்தனர், குட்டி தேவதையாக கவிதையாய் ஒரு  சிறுமி, அனுமதி பெற்று படம் எடுத்தேன்.

அங்கிருந்து நடந்து நுழைவாயிலுக்கு சென்றோம். நான்கு பக்கமும் ஒரு ஒரு கிமீ நீளம் கொண்ட அகழி அதன் அகலமே 200 மீட்டர் இருக்கும். அகழியை கடக்கும் பாதை அமைப்பில் பழுது பார்க்கும்பணி நடந்து கொண்டி ருந்ததால் தற்காலிக மிதவை பாலம் அமைத்திருந்தனர்.  அதனை கடந்து அங்கோர் வாட் கோயிலின் முதல் சுற்று மதில் அமைப்பு பகுதிக்கு வந்தோம். அடடா! என்ன ஒரு பிரம்மாண்டம்…! இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்லவேண்டிய நினைவாலயம் என்று அனைவருக்கும் பரிந்துரைக்க ஏற்ற மிக சிறந்த சுற்றுலாத் தலம்.

ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது... ஆம்...

காலத்திற்கும், இயற்கைக்கும் முன்பு மனித முயற்சிகள் சாதனைகள் வரலாறுகளாக எழுதப்படலாமே அன்றி, அவை நிலைத்து நிற்கக் கூடியதல்ல,  பழங்கால கட்டிடக் கலைகளில் எஞ்சியவை இதைத் தான் நமக்கு ஆழமாக உணர்த்தி செல்கின்றன. இன்று நாம் வியந்து பார்க்கும் இன்றைய காலத்து மனித ஆற்றல்களின் உருவாக் கத்திற்கும், எதிர்காலத்தில் இதே நிலை தான் என்கிற நிதர்சனம் புரிந்தது.

மறுநாள் காலையும் நாங்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியில் சிற்றுண்டி  முடித்து 10:30 மணிக்கு எஞ்சியுள்ள இடங்களை காண புறப்பட்டோம். மோட்டார் சைக்கிள் பொருத்திய வித்தியாசமான சாரட் பூட்டிய நவீன குதிரை வண்டி போன்று இருந்தது.  குதிரைக்கு பதில் - ஹோண்டா பைக்கு பொறுத்திஇருந்தது.

ஒரு சுகமான சில்லென்ற காற்று வீச, ஏழு கீ.மீ. காட்டில் பயணம். ஆனால் அழகிய நவீன சாலையில் !..

25 நிமிடங்களில் அங்கோர் வாட் பகுதிக்கு வந்துவிட்டோம். 70 கீ. மீ. பரப்பளவுள்ள அங்கோர் வாட் பகுதியில் ( அடர்ந்த காட்டில்) 40-45 கீ.மீ தான் சாலை மற்றும் புனரமைப்பு வேலைகள் முடிந்ததுள்ளதாம். அதற்கு மேல் காட்டினுள் செல்ல அனுமதியும் இல்லை , நம்மால் போகவும் முடியாது.

பாயோன் கோவில் வந்துவிட்டோம். இது  900 வருடம் பழமையான  அழகிய புத்தர் கோவில். அங்கோர் வாட் - விஷ்ணு ( மெயின் ) கோவிலில் இருந்து -5-6 கீ.மீ. தொலைவில் உள்ளது. பாயோன் கோவில் , அங்கோர் வாட் விஷ்ணு கோவிலைப் போல் இல்லாமல் முழுவதும் முகங்களால் வடிவமைக்க பட்டவை.

புத்தர்  கோவிலின் கிழக்கு நுழைவாயிலில் ஒரு சிவலிங்கமும் இருந்தது என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது . ஒரு கம்போடியப் பெண் மற்றும் பலரும்  மனமுருக வழிபடுவதை கண்டேன்.

ஒரு கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு கம்போடிய குடிசை உணவகத்திற்கு மதிய உணவிற்காக சென்றோம். என்  நண்பர்  சுத்த சைவம். ஆனால் அங்கு உள்ளவை அனைத்தும் அசைவ உணவுகளே. என்ன சாப்பிடு வதென்று தெரியாததால், ஒரு பெரிய இளநீர் வாங்கி குடித்தோம். அதில் 1 1/2 லிட்டர் தண்ணீருக்கும் மேல் இருந்தது.

தொம்பீராம் என்னும் பழைய பிரம்மா கோவிலை பற்றியும் , மற்றும்  “சியாம் ரீப்”  கம்போடிய  நகரம் பற்றியும் அதன்  தினசரி வாழ்க்கை முறை, மக்கள், தெருக்கள் குறித்தும் பார்க்கலாம் .

தொம் பிராம் என்னும் பழைய பிரம்ம கோவிலின் புனரமைப்பு வேலை இந்திய அரசாங்கத்தின் செலவில் செய்யப்படுகிறது. கோவில் கிழக்கிலிருந்து மேற்காக 2-3 கீ. மீ இருக்கும். கோவிலுக்கு உள்ளேயும்  சில அழகான  படங்களை எடுத்தோம்.

கோவிலின் வடக்கு வழியில் ஒரு சிவலிங்கமும் இருந்தது .

சிறிய செடிகளாக இருந்து வளர்ந்து விட்ட மரங்கள் 500-600 வருடங்களில் கோவிலையே  பெயர்த்து எடுத்துவிட்டது போல இருந்தது.

கோவிலில் இருந்து காட்டு வழியில் வரும் பொழுது சில  கம்போடிய கிராமத்து வாசிகள் ( சிலர் ஊனமுற்றவர் களாகவும் இருந்தனர்) பழைய கம்போடிய இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டிருந்தனர் .

அவர்களுக்கு உதவினோம். அவர்கள் இசைத்ததை போலவே  நானும் இசைப்பேன் என்று கூறினேன். ஒரு நிமிடம் வாசித்தும் காண்பித்தேன். உள்ளுக்குள் ஊறியிருந்த இசை ஆர்வம் சும்மா இருக்குமா? அதை என் நண்பர் வீடியோவும் எடுத்தார்.

வார இறுதியை மற்ற சுற்றுலா  பயணிகளைப்போல கொண்டாட சியம் ரீப் நகரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். சுத்தமான , மற்றும் விசாலமான சியம் நகர தெருக்கள். கொஞ்சம் ஷாப்பிங் கொஞ்சம் உணவு என்று  ஒரு வழியாக சியம் ரீப் நகரை இரவு 11:30 மணிவரை சுற்றிவிட்டு விடுதிக்கு வந்து உறங்கினோம்.

அடுத்த நாள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் சிங்கப்பூர் பயணம். சில வேலைகளை முடித்துவிட்டு அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பிவிட்டேன்.

மொத்தத்தில் கம்போடியா பயணம் மிக மகிழ்ச்சியாக நிறைவுபெற்றது. உலகின் மிக பிரம்மாண்டமான பழமையான இந்து கோவிலை பார்த்ததில் எங்களுக்கும் பேரின்பம் மற்றும் பெருமகிழ்ச்சி. அனைவருமே  தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்லவேண்டிய மிக முக்கிய நினைவாலயம் அங்கோர் வாட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com