அபுதாபியில் சமீபத்தில் நடைபெற்ற ஐஃபா விருது நிகழ்வினை பாலிவுட் நடிகர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் விக்கி கவுஷல் தொகுத்து வழங்கினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “‘பொன்னியின் செல்வன் 2’ பார்த்தபின் மனைவி ஐஸ்வர்யா ராயைப் பாராட்டினீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அபிஷேக், “இது மாதிரியான ஒரு கதாபாத்திரத்தைக் கையாள்வது நம்ப முடியாத சாதனைதான். வெவ்வேறு லேயர்களைக் கொண்ட நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா அற்புதமாக நடித்திருந்தார். அவரைக் கண்டு நான் பெருமைப் படுகிறேன். இதுநாள் வரை ஒரு நடிகையாக ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களில் ‘பொன்னியின் செல்வன் 2’தான் சிறந்தபடமென அவரிடமே நான் கூறவிட்டேன்” என்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் குறித்துப் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற அருமையான படத்தில் பணியாற்றியது திருப்தி மற்றும் மகிழ்வை அளிக்கிறதெனக் கூறியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.
சீதாவாக கீர்த்தி சனோன்!
ஓம் ராவத் இயக்கியுள்ள ‘ஆதிபுருஷ்’ ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பான் இந்தியா படமாகும். ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதை வேடத்தில் கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். ஜூன் 16 அன்று திரைக்கு வரவிருக்கும் படத்தில் சீதையாக நடித்தது குறித்து கீர்த்தி சனோன் கூறியதாவது,
“எனக்கு அசைவம் சாப்பிடுவது மிகவும் பிடிக்கு மென்றாலும், சீதை கேரக்டரில் நடித்த காரணம் ஷூட்டிங் நடந்து முடியும்வரை அசைவம் சாப்பாட்டைத் தொடவில்லை. மேலும், மாடர்ன் உடைகளை விரும்பும் நான், ‘ஆதி புருஷ்’ படப்பிடிப்பு முடியும்வரை புடவை மட்டுமே அணிந்து காட்சி அளித்தேன். சீதை கேரக்டர், பல்வேறு நடிகைகளின் கடுமையான போட்டிக்கு மத்தியில் எனக்குக் கிடைத்தது பெருமையாக இருக்கிறது.
சீதை மாதிரியான சிறந்த கேரக்டர், ஒரு நடிகையின் வாழ்நாளில் ஆபூர்வமாகக் கிடைக்கக்கூடியது. சீதையாக நடிப்பதற்கு முன், முந்தைய தலைமுறை நடிகைகளின் படங்களைப் பார்த்தேன். அது சம்பந்தப்பட்ட அநேக புத்தகங்களைப் படித்தேன். நிறைய ஹோம்வொர்க் செய்தேன். இந்தக் கதாபாத்திரம் தெய்வீகமாக காட்சியளிக்க, என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டேன்” என்பதாகும்.
பாலியல் உறவிற்காக திருமணம் செய்யவில்லை!
ஆஷிஷ் வித்யார்த்தி தனது இரண்டாவது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் மனம் திறந்து கூறியதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ள 60 வயதாகும் ஆஷிஷ் வித்யார்த்தி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதாகும் ஆடை வடிவமைப்பாளரான ரூபாலி பருவாவை சமீபத்தில் இரண்டாம் விவாகம் செய்துகொண்டது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.
வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: “நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வந்தாலும், நம்மிடையே இருக்கும் பொதுவான ஒற்றுமை என்னவென்றால், நாம் அனைவரும் மகிழ்வாக இருக்க விரும்புகிறோம்.
எனது 55ஆவது வயதில் ரூபாலியை சந்தித்தேன். பல மாதங்களாக ஒருவரிடம் ஒருவர் பேசி விவாதித்து இறுதியில்தான் இந்த முடிவை எடுத்தோம்.அவரும் அநேக வலிகளைக் கடந்து வந்தவர். தன் கணவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ரூபாலி, மீண்டும் ஒரு திருமணம் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. எனக்கு ஒரு நல்ல தோழியாக இருந்தார். எங்களுக்கிடையே, சுவாரஸ்யமான ஒற்றுமை இருப்பதைக் கண்டறிந்தோம். இது பாலியல் உறவுக்காக நடந்த திருமணம் கிடையாது. வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும், சுயமாக முன்னேறத் துடிக்கும் அவருடன் இணைந்து பயணம் செய்யவே திருமணம் செய்துகொண்டேன்.
எனது முதல் மனைவியை வெறுக்கவில்லை. எங்களது அழகான திருமணத்தில், அற்புதமான நினைவுகள் பல உண்டு. என்னுடைய மகனின் அம்மாவாக மட்டும் பார்க்கவில்லை. அவரும் ஒரு நல்ல தோழி. இப்பிரிவு வலியின்றி நிகழ்ந்துவிடவில்லை. வலியடன் கூடிய பிரிவை எளிதாக கடந்துவிட முடியாது. காலம் சரி செய்யும்.