ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் – நடிகர் விஷாலின் கோரிக்கை!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் – நடிகர் விஷாலின் கோரிக்கை!

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடிகர் விஷாலின் லத்தி திரைப்படத்தின் அறிமுகவிழா மற்றும் விஷால் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி (14-12-22.) அன்று  நடைபெற்றது .இந்த விழாவிற்காக சேலம் வந்திருந்த நடிகர் விஷால் சமூக அக்கறையுடன் பல விசயங்கள் குறித்துப் பேசினார் .அதில் பணத்தை இழந்து தற்கொலைக்குத் தூண்டும் ஆன்லைன் சூத்தாட்டம் குறித்து அவர் பேசியது அனைவரையும் கவர்ந்தது .

        “ஆன்லைன் சூதாட்டம் குறித்து நான் பேசுவதால் என்மீது வழக்கு போடப்பட்டாலும் பரவாயில்லை .இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலரின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் .

     என்னிடம் சிலர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்கக் கேட்டார்கள். அதற்கு நான் நடிக்கமாட்டேன் என்று மறுத்து விட்டேன் .உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே வாழ்க்கைக்கு உதவும். தவறான வழிகளில் கிடைக்கும் பணம் என்றும் நிலைக்காது “ என்று பேசிய நடிகர் விஷாலின் மனிதநேயப் பண்பு பாராட்டுக்குரியது .நடிகராக கோடிகளில் வாழ்ந்தாலும் சக மனிதரின் சீரழிவுக்கு காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்க்கும் விஷாலை பலரும் பாராட்டினர்.

    மேலும் அந்த விழாவில் தனது நண்பரான திரு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகப் பொறுப்பேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் முதல் அமைச்சரின் மகன் என்று தன்னை எவ்விடத்திலும் அடையாளப் படுத்தாமல் தனக்கென தனி அடையாளத்துடன் வரும் வந்த உதயநிதி ஸ்டாலின்  தனக்கென்று ஒதுக்கிய துறையில் திறம்பட செயலாற்றி சாதனைகளைப் படைப்பார் என்றும் கூறி மகிழ்ந்தார் நடிகர் விஷால்.

   விஷால் கூறியது போல் படித்த இளைஞர்கள் கூட ஆன்லைன் சூதாட்டம் எனும் மீள முடியாத போதையில் மூழ்கி தங்கள் பணம் மனநலம் போன்றவற்றை  இழந்து வாழ்வை முடித்துக் கொள்வது பெரும் வேதனையான விஷயம் . உதாரணமாக கோவை சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையம் ஆர் வி எல் நகரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சங்கர், 29 வயது இளைஞர். என்ஜீனியராக பணியாற்றி வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடன் பட்டதால் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள ஹோட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தன் முடிவுக்கு காரணம் ஆன்லைன் சூதாட்டத்தினால்  பெருமளவு பணத்தை இழந்து கடன் தொல்லைக்கு ஆளானதே என்று குறிபிட்டுள்ளார். இதைப்பற்றிய செய்தி  (15-12-2022) அன்றைய நாளிதழ்களில் வந்துள்ளது.

       இவரைப் போன்ற பலர் ஆன்லைன் சூதட்டத்தினால் பாதிக்கப்பட்டு வருவதை அடிக்கடி பார்க்கிறோம். இந்த சூழலில், இதன் மீதான நடிகர் விஷாலின் கருத்து கவனிக்கப்பட வேண்டியதாகிறது. அரசு மனம் வைத்தால் மேலும் பல உயிர்கள் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது .     

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com