இயர் போன் உபயோகிப்பதால் ஆபத்து?

காதுகளைக் காப்போம்! கவனமுடன் கேட்போம்!
இயர் போன் உபயோகிப்பதால் ஆபத்து?

ஸ், ரயில், ஷாப்பிங் மால் என்று பொது இடங்கள் பலவற்றிலும் இளைய தலைமுறையினர், செல்போனை வைத்துக்கொண்டு காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு இருப்பதை பார்க்க முடியும் .குழந்தைகள் ஹெட்போனை மாட்டிக் கொண்டு, அதிரும் ஓசைகளை கேட்டபடி வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார்கள். அதிகாலையில் வாக்கிங் போகிறவர்கள் பலரும் காதுகளில் இயர் போன் மாட்டி எதையோ கேட்கிறார்கள். வாகனம் ஓட்டும்போது கூட பலரும் இதை மாட்டியபடி இசையை ரசித்துக் கொண்டு செல்வதைப்பார்க்க முடிகிறது. இது ஆபத்தான பழக்கம். பின்னால் வரும் வாகனத்தின் ஹார்ன் ஓசையைக்கூட கேட்க விடாமல் செய்து விடும் இந்தப் பழக்கம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும், காதுகளைக் காக்க நாம் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும்  இதில் காண்போம். 

பிரச்னைகள்:

சில இயர் போன்கள் காதுகளுக்குள் நுழைந்தால் முழுமையாக காது துவாரத்தை அடக்கும் விதமாக உள்ளன. இதை பயன்படுத்தினால் காதுகளுக்கு காற்று இயல்பாக போகாது .இது காதில் நோய் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். 

இயர் போன்களும், ஹெட் ஃபோன்களும் மின்காந்த அலைகளை உருவாக்குகின்றன. நீண்ட நேரம் இவற்றைப் பயன்படுத்துவது மூளைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

நீண்ட நேரம் இயர் போன் மற்றும் ஹெட் போன் பயன்படுத்தினால் காதுகளுக்குள் வலி ஏற்படும். மரத்துப் போனது போன்ற உணர்வு தோன்றும் .காதுகளுக்குள் வினோதமான ஓசைகள் கேட்கும். 

ஒருவர் பயன்படுத்தும் இயர்போனை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது. 

இது ஒருவர் காதில் இருக்கும் பாக்டீரியா தொற்றை இன்னொருவர் காதுக்கு பரவச் செய்துவிடும். 

15 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக இயர் போன் மாட்டி எதையும் கேட்கக்கூடாது. நீண்ட நேரம் பயன்படுத்துவது காதுகள்  கேட்கும் திறனை செயலிழக்கச் செய்யும் என்கின்றனர். 

இயர் போன் அல்லது ஹெட் போன் மாட்டிக்கொண்டு இருக்கும் போது சத்தம் நேரடியாக காதுகளைச் சென்றடைகிறது .இந்தச் சத்தம் தொண்ணூறு டெசிபலைத் தாண்டியதாக இருக்கக் கூடாது. இதைவிட அதிக சத்தம் நம் காதுகளுக்கு ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர். 

பாதிப்பு:

காது கேட்கும் தன்மையில் ஒருவருக்கு ஏற்படும் இழப்பு அவர் எவ்வாறு சத்தமாக கேட்கிறார், எவ்வளவு நேரம் கேட்கிறார் ஆகிய இரண்டையும் பொருத்தது .பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினர்  சத்தம் நிறைந்த சூழலிலேயே அதிக நேரம் இருக்கின்றனர் ..வாகன ஓசையும் இரைச்சல் மிகுந்ததாக உள்ளது. வீட்டிலும் மியூசிக் சிஸ்டத்தில் சத்தமாக இசை கேட்கிறார்கள். டிஸ்கொதே போன்ற  அவர்கள் போகும் இடங்களும் சத்தம் நிறைந்ததாக உள்ளன. இவை எல்லாம் காதுகளுக்கு கூடுதல் சேதத்தை விளைவிக்கின்றன. அதிக சத்தத்தைக் கேட்பதால் காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு படிப் படியாகவே நிகழ்கிறது. திடீரென ஒரே நாளில் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதனால் பெரும்பாலானவர்கள் இதை கவனிப்பதில்லை. 

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:

தூரத்தில் இருந்து ஒருவர் பேசுவது ஏதோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போலக் கேட்கும்.

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பேர் பேசினால் எதுவுமே புரியாது. எரிச்சல் ஏற்படும். டெலிபோன் மணி அடிப்பது போன்ற ஓசை காதுக்குள் அடிக்கடி கேட்கும். போனில் எதிர் முனையில் இருப்பவர் பேசுவது சரியாக கேட்காது. 

கேட்கும் கேள்வி ஒன்றாகவும் அதற்கு சொல்லும் பதில் வேறொன்றாகவும் இருக்கும். 

"என்ன சொன்னீங்க? திரும்பச் சொல்லுங்க" என்று கேட்கத் தோன்றும். இதெல்லாம் இதனின் அறிகுறிகள். 

முன்னெச்சரிக்கைகள்:

ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காக குட்டி இயர் போன்களை பயன்படுத்தினால், அவை காது துவாரத்தை முழுசாக அடைத்துக் கொள்ளும். ஆதலால், பெரிய ஹெட் போன்களை பயன்படுத்துவது மேலானது.  குடும்ப உறவுகளுக்குள் கூட ஒருவர் இயர்போனை இன்னொருவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. 

இயர் போன் மேலே இருக்கும் ஸ்பான்ஜ் அல்லது ரப்பர் உறையை அவ்வப்போது மாற்ற வேண்டும். மியூசிக் சிஸ்டம் அதிகபட்சமாக 100 டெசிபல்களுக்கு மேல் ஓசை எழுப்பும். அதில் 60 சதவீத அளவு சவுண்ட் வைத்து கேட்டால் போதும். 

பேருந்துப் பயணம் போன்ற இரைச்சல்  மிகுந்த சூழல்களில் இயர் போன் பயன்படுத்தாதீர்கள். சூழலின் சத்தத்தை மிஞ்சி இசை கேட்க வேண்டும் என்பதற்காக அதிக சவுண்டு வைத்து கேட்பீர்கள் அது அதிக ஆபத்தைத் தரும். ஆதலால் அதை தவிர்ப்பது நல்லது. 

சூழலின் சத்தத்தைக் குறைத்து இசையை மட்டும் கேட்கச் செய்யும் நவீன மாடல் ஹெட் போன்கள் இப்போது வந்து விட்டன. அவை ஓரளவு பாதுகாப்பானவை.

காதுகளைக் காக்க;

நெடுஞ்சாலை நெரிசல், தொழிற்கூடங்கள் என சத்தமாக இருக்கும் சூழல்களில் நீண்ட நேரம் இருக்காதீர்கள். தவிர்க்க முடியாமல் இருக்க நேர்ந்தால் காதுகளை மூடிக்கொள்ளுங்கள். 

வீட்டில் பயன்படுத்தும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற வையும் சத்தம் குறைவாக எழுப்புவதாகப் பார்த்து வாங்குங்கள். 

புகைப் பிடிக்கும் பழக்கம் காதுகளையும் பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். காதுகளை கவனமாக சுத்தம் செய்யுங்கள். 

நீண்ட காலம் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் ஏதேனும் இருந்தால், அவை காதுகளுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுத்துமா என்று டாக்டரிடம் கேளுங்கள். 

நெருங்கிய ரத்த உறவினர்கள் காது கேளாத பிரச்னைக ளோடு இருக்கிறார்கள் என்றால், கவனமாக இருக்க வேண்டும். ஆரம்ப அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால், உடனே டாக்டரிடம் போக வேண்டும். 

காது கேளாமை என்பது ஏதாவது ஒரு காதில் தான் ஆரம்பிக்கும். அது லேசாகத்தான் இருக்கும். அதைக் கண்டுபிடிப்பது சிரமம். பெரும்பாலான நேரங்களில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் தான் கண்டுபிடித்து சொல்வார்கள். அப்படி அவர்கள் சொல்லும் போது  அதை அலட்சியப்படுத்த வேண்டாம். காது களுக்குள் பொறுத்துக் கொள்ள முடியாத வலியும் அவஸ்தையும் ஏற்பட்டால், அடிக்கடி உடல் சமநிலை தவறி மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு தோன்றினால், காதுகளுக்குள்ளி ருந்து ஏதாவது திரவம் வடிந்தால், ஏதாவது ஒரு பக்க காதில் எதுவுமே கேட்காதது போன்ற உணர்வு எழுந்தால் உடனடியாக டாக்டரிடம் செல்வது அவசியம். 

'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்', செவிக்கு உணவு இல்லாத போழ்து 'என்றெல்லாம் செவியைப் பற்றி திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். தொழில் நுட்பமும் நவீன கருவிகளும் நம் வாழ்வை மேம்படுத்தவும் இன்னும் மகிழ்ச்சி ஏற்படுத்தவும் தான் பயன்பட வேண்டும் . எதிலுமே அளவு முக்கியம் . இதை உணராமல் உடலைநிலையைக் கெடுத்துக்கொண்டு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நாம் நினைவில் வைத்து, எல்லா நேரங்களிலும்  காதுகளைக் காப்போம்; எதையும் கவனமுடன் கேட்போம்!.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com