டிசம்பர் -1 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்!

டிசம்பர் -1 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்!

சில வருடங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டு, பார்த்தவர் கண்களில் நீர் கசிய விட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு தந்த ‘அருவி’ திரைப்படத்தைப் பார்த்தீர்களா? பார்க்காதவர்களுக்கு...

தவறே செய்யாமல் எய்ட்ஸ் நோயால் தன் சொந்தப் பெற்றோர் முதல் சமூகம் வரையிலான அத்தனை பேரின் புறக்கணிப்புக்களோடு பாலியல் கொடுமைக்கும் உள்ளான ஒரு துறுதுறுப் பெண்ணின் உணர்வுகளைக் காட்சிப்படுத்தி, சமூகஅக்கறையுடன் எய்ட்ஸ் நோயாளிகளின் வேதனையைப் பதிவுசெய்துள்ளது படம்தான் அது. எய்ட்ஸ் என்றாலே இன்னும் அச்சத்துடன் பார்க்கப்படும் நிலையில், இப்படி ஒரு படத்தைத் தந்த அதன் இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.

எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்படவேண்டியவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ளும் காலம் எப்போது வரும்? எய்ட்ஸ் பற்றிய முழுமையான புரிதல்கள் இல்லாத தாலேயே அந்த நோயினால் பாதிக்கப்படுவதும், நோய் கண்டவரை ஒதுக்குவதும் நடைபெறுகிறது. சரி, எய்ட்ஸ் பற்றி சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

1981ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்கதையாய் உலகை ஆட்டிப்படைக்கும் கொடூர நோய்களுள் ஒன்றுதான் எய்ட்ஸ். முழுவதும் பல லட்சக்கணக்கானோர் இறந்தும், நோயின் பிடியை எதிர்த்துப் போராடி வாழ்ந்தும் வருகிறார்கள். மக்களை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோய் மற்றும் அது சார்ந்த விளைவுகள், தடுக்கும் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு போன்றவைகளை நோக்கமாகக் கொண்டு 1988ல் நடைபெற்ற எய்ட்ஸ் நோய்க்கான உலக சுகாதார மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு, டிசம்பர் முதல் தேதி எய்ட்ஸ் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

தொடக்கத்தில் பாலியல் அடிப்படையில் இளைஞர்கள் மீது மட்டுமே தங்கள் கவனத்தைப் பதித்த எய்ட்ஸ் நோய்க்கான பிரச்சாரம் நாளடைவில்  பொது மக்களுக்கான பிரச்சாரமாக மத்திய, மாநில அரசுகளால் சுகாதாரத்துறை மூலம் செயல் படுத்தப்பட்டது. தற்போது எய்ட்ஸ்க்கான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் அரசு மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் கல்வி மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரமாகவும் மாறி, விழாக்கள், மருத்துவ முகாம்கள், வீதிநாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்கள் கூடும் இடங்களில் நிகழ்த்தப்படுகிறது.

எய்ட்ஸின் அடையாளமாக ரெட் ரிப்பன் சின்னமாக உள்ளது. 2005-06ம் ஆண்டு முதல் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆதரவுடன் ‘ரெட் ரிப்பன் கிளப்’ தொடங்கப்பட்டு பாலியல் குறித்த விளக்கங்களையும் எய்ட்ஸ் பற்றிய புரிதல் களையும் மாணவர்களிடையே ஏற்படுத்தி மேலும் நோய் ஏற்படாமலும், பரவாமலும் கட்டுப்படுத்தி வருவது சிறப்பு.

அரசு தரப்பில் எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்கான வழிமுறைகளும், பாதிக்கப்பட்டவர்கான நிவாரண உதவிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சக மனிதராக நாம் அவர்களை ஒதுக்காமல் அந்நோயாளி களின் துயரத்தைப் போக்க ஆதரவு தரவேண்டும். அத்துடன்  இன்றைய தலைமுறைகளிடம் பாலியல் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த பெற்றோரும், ஆசிரியரும் முன் வர வேண்டும். வாழும் காலம் சிறிதே அதில் சக உயிர்களின் வேதனைகளை அறிந்து ஆறுதல் தர முயல்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com