டென்ட் கொட்டாய் to ஓ.டி.டி...!         

Cinema
Cinema

1960க்கு முன்னால் பொழுதுபோக்கு என்றால் கோயில் விசேடங்கள், விடிய விடியக்  கூத்து, கடைகள், பாட்டுக்கச்சேரி, கதாகாலட்சேபம்  போன்றவைகள் இருக்கும். ஆனால், பிரதான பொழுது போக்கு என்பது சினிமாவாக இருந்தது. திருவிழாவுக்குப் போவது போலேயே, திரைப்படக் கொட்டகைகளுக்கும் படையெடுப்பார்கள். கிராமங்களில் வண்டிக் கட்டிக்கொண்டு வருவார்கள். சில இடங்களில் பேருந்தில் பயணித்தும் போகவேண்டியிருக்கும். ஒரு பரந்த மைதானத்தில் கீற்றுக்கொட்டகை. பின் பகுதியில் சிறியதாய் ஒரு சிமெண்ட் கட்டிடம். அதுதான் ப்ரொஜக்டர் அறை. உள்ளே ஒத்தை ப்ரொஜக்டர் ஆளுயரத்திற்கு நின்றுகொண்டிருக்கும். உள்புறம் முன்பகுதியில், இரண்டு மூங்கில் கொம்புகளுக்கிடையே, வெண்மையான துணிகளைச் சேர்த்துத் தைத்து, திரையை உருவாக்கியிருப்பார்கள். 

திரைக்குப் பின்னே ஒரு பெரிய ஒலிபெருக்கிப் பெட்டி. பாதித் தரைப்பகுதியில் ஆற்று மணலைப் பரப்பியிருப்பார்கள். மீதிப் பாதிப்பகுதியில் பெஞ்சுகளிருக்கும். மணல் பகுதியில் ஒரு சிறிய தடுப்பு காணப்படும். ஒருபுறம் பெண்களுக்கும், மறுபுறம் ஆண்களுக்கும் ஒதுக்கப் பட்டிருக்கும். விருப்பமானவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் இடம் இது.

மாலை ஆறு மணி சுமாருக்கு கொட்டகையின் உச்சியில், இசைத்தட்டுக்களின் உபயத்தால்,  பாடல் ஒலிக்கும். தினசரி இரண்டு காட்சிகள். ஆறரை மணி மற்றும் ஒன்பதரை மணி காட்சிகள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேரும். மாமியாரும், மருமகளும் மற்றும் நாத்தனார், அண்ணியும் ஒற்றுமையாய் இங்கே காணலாம். வெளியில் சில கடைகளிருக்கும்.

ஓலைத்தட்டியூனூடே ஒரு சதுர வடிவ சந்து. அதுதான் டிக்கட் கவுண்டர். கொட்டகை உரிமையாளரோ, வேறு வேலைக்காரர்களோ டிக்கட் வழங்குவார்கள். ஒருவர் எத்தனை டிக்கட்டுகள் வேண்டுமானாலும் வாங்கலாம். ஹவுஸ்ஃபுல் என்றப் பேச்சுக்கு இடமில்லை. மணி அடித்ததும் உள்ளே சாரி சாரியாக அனுமதிக்கப்படுவார்கள். 

உள்ளே உச்சியில் ஒரு நூறு வாட்ஸ் பல்ப் எரிந்துகொண்டிருக்கும். பலபேர் விளக்கையும், பின்புற சுவற்றிலுள்ள புரொஜக்டர் சந்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருப்பார்கள். எப்பொழுது படம் போடுவார்கள் என்பதில் ஆர்வமாய் இருப்பார்கள். படம் ஆரம்பித்ததும்  சத்தமின்றி அமைதியாகி விடும்.  வாசல் வழியே வெளியே வானில் நட்சத்திரங்கள் தெரியும். ரசிக ரசிகைகள் திரைப்படத்தோடு ஒன்றி விடுவார்கள். திரையில் அழுதால் அழுவார்கள். சிரித்தால் சிரிப்பார்கள். வில்லனை சத்தமாகச் சபிப்பார்கள்.

ஒரே ப்ரஜக்டர் என்பதால் நான்கு முறை இடைவேளை வரும். ஃபிலிம் சுருளை கழட்டி மாற்ற வேண்டியிருக்கும் என்பதால் இந்த நிலை. அந்த இடைவேளையில், "சோடேய்...கலர், வேர்கல்லே.......கைமுர்க்.....கமர்கட்டு முட்டாய்...." எனக் கூக்குரலிட்டவாறே, உள்ளே வந்து விற்பனை செய்வார்கள். பீடி, சிகரெட் புகை கொட்டகை முழுதும் நிரம்பியிருக்கும். இடைய ஆப்பரேட்டர் பீடி பிடிக்க சற்று ஒதுங்கி சென்றுவிட்டால், ஒன்று கார்பன் வெளிச்சம் குறைந்துப் படம்  தெளிவாகத் தெரியாது. இரண்டாவதாக, ஃபிலிம் டிராக்கை விட்டிறங்கி கிழிந்து விடும். உள்ளேயிருந்து ஓவென்று கூக்குரலும், விசில் சத்தமும் பறக்கும்.
ஆப்பரேட்டர் பதறியடித்து உள்ளே ஓடி, குறையை சரி செய்வார். அதாவது கார்பனை மாற்றுவார். அல்லது வீணான பிலிமை வெட்டி எடுத்து வீசி, பின் ஒட்டி தொடர்ந்து இயக்குவார். திரையில் குதிரையில் சென்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆர் மீது யார் கத்தி வீசியது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்புவார்கள். அது வெட்டிப்போடப்பட்ட  ஃபிலிமுக்கே வெளிச்சம்!.

காட்சி முடிந்ததும் கலகலவென கதையை சிலாகித்துக்கொண்டே கூட்டம் கலையும். மழைக்காலங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டால், பாதிடிக்கட்டைக் காட்டி, மறுநாள் திரைப்படத்தைப் பார்க்கலாம் போன்ற சலுகைகளும் இருந்தது. (டிக்கட்டைக் காது குடைந்து போட்டு விட்டால் அவ்வளவுதான்).  மூன்று நாளைக்கொருமுறை 'இப்படம் இன்றே கடைசி' என்று  போஸ்டரில் எழுதப்பட்ட வாசகங்களுடன்,  மேளளதாளத்துடன், ஒரு வண்டியைத் தள்ளிக்கொண்டு போவார்கள். அதே போல 'இன்று முதல்' என்ற வாசகங்களோடு வண்டி வலம் வரும். 

இந்தக் காலத்தில், எம்.கே.டி. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி, வைஜெயந்திமாலா, பானுமதி போன்றவர்கள் பிரபலமாயிருந்தனர்.

பின்னர் பெரிய பெரியக் கட்டடங்கள் திரையரங்கங்களாக எழும்பி நின்றன. தரை டிக்கட்டுக்களே இல்லாமல், முழுவதும் இருக்கைகளாலேயே நிரப்பப்பட்டது. பின் பகுதியில் குஷன் இருக்கைகள் போட்ட சிறப்பு வகுப்புகளும், மேலே பால்கனியும் இருந்தன. சுத்தமான கழிப்பறைகள் கட்டப்பட்டன(அதை ரசிகசிகாமணிகள் சுத்தமாக வைத்திருக்கவில்லை என்பது வேறுகதை). வாகனங்கள் நிறுத்த இடமும் இருந்தது.

மதுரை தங்கம் திரையரங்கம் ஆசியாவிலேயே பெரிய திரையரங்கமாக இருந்தது. சுமார் 2560 பேர் அமர்ந்து படம் பார்க்கக் கூடிய திரையரங்கம்.   முன்பகுதியில் வெண்திரை அழகான அலங்காரங்களுக்கு மத்தியிலிருக்கும். வண்ண விளக்குகள் கண்சிமிட்டும். இப்போது இரண்டு புரொஜக்டர்கள் அரங்கங்களில் நிறுவப்பட்டதால், ஒரே ஒரு இடைவேளைதான் உண்டு. கூடுதலா ஸ்லைடுப்ரஜக்டருமிருந்தது. இந்தக் காலக் கட்டங்களில், அதாவது நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் ஆதரவாக ரசிகர்கள் திரண்டனர்.

அவர்கள் அபிமான நாயகர்களின் படம் வரும்போது, விழாக் கோலம்தான். பேனர்களும், கட்அவுட்களும் நிரம்பி வழியும். திரையரங்கம் முன் கூட்டம் மூன்று காட்சிகளுக்குமே நிரம்பி வழியும். திரைப்படங்கள் நூறு நாள், நூற்றைம்பது நாள் என போட்டிப் போட்டுக்கொண்டு ஓடும்.  திரைப்படத்துறை நன்றாக வளர்ச்சிப்பெற்ற காலம் இது. 

நாள்பட நாள்பட திரை அரங்குகளில் வசதிகள் கூடிப்போயின. குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டது. நல்ல கான்டீன்களை ஏற்பாடு  செய்தார்கள். பூமிக்கு அடியிலும் திரையரங்கங்களைக் கட்டினார்கள்(சென்னை:அண்ணா ஏ/சி, தேவிபாலா ஏ/சி. போன்றவை) அரங்கினுள்ளே புகைப்பது தடை செய்யப்பட்டது.
சினிரமா(சென்னை பைலட் திரையரங்கில் இருந்தது), சினிமாஸ்கோப், 70mm, என்றெல்லாம் திரைப்படம் காட்டும் வசதிகள் பெருகின.

ஒரு திரையரங்கம் என்றில்லாமல், இரண்டு மூன்று திரையரங்குகள் ஒரே இடத்தில் கட்டப்பட்டது. பிரமாண்ட ஆங்கிலப் படங்களும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடின.  அந்நாளில் 'ஸ்டீரியோ' ஒலி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.  ஓரிரண்டு திறந்தவெளி 'டிரைவ்-இன்' திரையரங்குகளும் வந்தன. நிறைய திரையரங்குகள் உருவாகிக்கொண்டேயிருந்தன. சென்னையிலேயே சுமார் எழுபது, எண்பது திரையரங்குகள் இருந்தன.  திரைப்படத்தொழில் விரிவாகி, லாபகரமாக இயங்கியது.

வந்தது சோதனை.  வீடியோ கேஸட்டுக்கள் வலம் வரத் தொடங்கின. பின்னாளில் டிவிடி தட்டுக்கள் பரவலாக உலாவந்தன. குறைந்த செலவில் திரைப்படத்தைக் குடும்பத்தோடு கண்டுக் களித்தனர்.  அடுத்து ஒரு ஆபத்தும் வந்தது. செல்ஃபோன்கள் மெது மெதுவாக உதயமாகின. முதலில் உரையாடுவதற்கென்று சிறிய கைப்பேசிகள் வந்தன. பின்னர் 'ஸ்மார்ட் ஃபோன்கள்' வரத் தொடங்கியது. அதில் 'வீடியோ' பார்க்கும் வசதி வந்தது. இணையதளங்களின் சேவை விரிவானது. இதன் மூலம், எந்தவொரு வீடியோவையும், பதிவிறக்கம் செய்து பார்க்கக்கூடிய வசதி ஏற்பட்டது. சாதாரணமாகப் பழையத் திரைப்படங்களை, பார்க்கத் தொடங்கி, திருட்டு வீடியோ தளங்களின் மூலம் புத்தம் புதிய திரைப்படங்களையும் பார்க்கத் தொடங்கினர். டெக்னாலஜி வளர்ந்த நிலையில் திருட்டு விசிடி குற்றங்களை தடுக்க முடியாமல் போனது சோகம்.

இதனால் திரைப்படத்துறை ஆட்டம் காணத் தொடங்கியது. சமாளிக்கப் புது, புது உத்திகள், தொழில்நுட்பங்களைப் புகுத்தித் திரைப்படங்களைத் தயாரித்தனர்.  என்றாலும் திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவது படிப்படியாகக் குறையத் தொடங்கியது. தாக்குப் பிடிக்க முடியாமல், திரையரங்குகள், படிப்படியாக மூடப்பட்டு வந்தன. பல திருமண மண்டபங்களாகின. பல இடிக்கப்பட்டுக் குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறின. செய்வதறியாது திரைப்படத்துறையினர் தவித்தனர்.

அப்போதுதான் விலைஉயர்ந்த ஒரு சிறிய விடிவெள்ளி தோன்றியது. அது மல்டிப்ளெக்ஸ் எனும் மாயாஜாலம். உள்ளே நிறைய கடைகள் இருக்கும். உணவகங்களிருக்கும். நிறைய திரையரங்குகளும் இருக்கும். ஷாப்பிங் செய்யலாம். விதவிதமாக உண்ணலாம். திரைப்படங்களையும் பார்த்து ரசிக்கலாம். முழுதும் குளிரூட்டப்பட்ட, பிரமாண்டமான ஹால்,  நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், மின்விளக்கு ஜாலங்கள் என ஒரு கனவு உலகமாகவே இவை திகழ்ந்தன.

அவைகளில் திரையரங்குகள் சிறந்த ஒலி, படத்தெளிவு போன்றவைகளோடு இருந்தன. இப்போது பெரிய ப்ரொஜக்டர் இயந்திரங்கள் போய், சிறிய சூட்கேஸ் அளவிலான டிஜிட்டல் புரொஜக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. திரைப்படங்கள் 'கியூப் டிஜிட்டல்' மற்றும்  யூஎஃப்ஓ ' போன்ற டிஜிட்டல் முறையில் விநியோகிக்கப்பட்டன.  அரங்கில் சுமார் இருநூறு அல்லது முந்நூறு பேர் மட்டுமே அமர முடியும். இந்தத் திரை அரங்கங்கள் வெகு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த மல்டி ப்ளெக்ஸ்களில் திரைப்படம் பார்ப்பது  என்பது, ஏழைகளுக்குக் கனவாகவும், நடுத்தர வர்க்கத்தினருக்கு மாதங்களுக்கு ஒருமுறையும்தான் சாத்தியம் என்ற நிலை. ஏனெனில் திரையரங்கு நுழைவுச் சீட்டு ஒரு நபருக்கு, இருநூறிலிருந்து, இருநூற்றைம்பது வரை இருக்கும். பாப்கார்ன் விலையோ எழுபத்திஐந்து ரூபாய் முதல் நூறு ரூபாய். குடிதண்ணீர் பாட்டில் சுமார் ஐம்பது ரூபாய்! வெளியில் உள்ள கடைகள், உணவகங்களுக்கு செல்வதென்றால், ஆயிரமாயிராகத் தேவைப்படும்.  மேற்கண்ட காரணங்களால் ரசிகர் கூட்டம் அளவாகவே இருந்தது.

கொரோனா நோய்த் தொற்றுக்காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், திரைப்படங்களை  அமேசானின் ப்ரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளங்களில் வெளியிட்டனர். அந்த நேரத்தில் அது லாபகரமாகவே இருந்தது.தற்போதுபல திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டாலும், ஒருமாதக் காலத்திற்குள், ஓடிடி தளங்களுக்கு, ஒளிபரப்பும் உரிமையை விற்று விடுகிறார்கள்.

செல்ஃபோன் மட்டுமல்லாது, இப்போது வரும் எல்.இடி, எல்.சி., தொலைக்காட்சிப் பெட்டிகளிலும், இது போன்ற ஓடிடி தளங்களை, குறைந்த கட்டணத்தில், பதிவிறக்கம் செய்து, வீட்டிலிருந்தபடியே, அகன்றத் திரையில், சிறந்த ஒலித்தரத்தில் கண்டு மகிழ வசதிகளிருக்கின்றன. தரமான 'ஹெட்ஃபோன்கள்' மூலமாக செல்ஃபோனிலும், சிறந்த ஒலித் தரத்தோடு திரைப்படங்களை ரசிக்கலாம்.படம் பார்த்துக்கொண்டே, "அடி ப்ரீத்தி, படம் ஸுப்பரா போய்கிட்டிருக்கு. ஏதாவது ஸ்நாக்ஸ் கொண்டுவா"  என்று வாங்கி சாப்பிடலாம்.
"பாஸ்கர், கொஞ்சம் போய் பால் பாக்கட் வாங்கி வா" என்று மனைவி குரல் கொடுத்தாலோ,   படம் போரடித்தாலோ, உடல் கொஞ்சம் அசதியானாலோ திரைப்படத்தை நிறுத்திவிட்டு, பின்னர் நேரம் கிடைக்கும்போது விட்ட இடத்திலிருந்து தொடரலாம். விருப்பமான பாடல்களையோ காட்சிகளையோ திரும்ப, திரும்ப கண்டு ரசிக்கலாம். அமர்ந்து கொண்டு, ஸோஃபாவில் படுத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும், செளகரியப் படி பார்க்கலாம்.
பிடிக்காத காட்சிகளை ஓட்டி விடலாம்!
இது இன்றைய நிலை
நாளை...................????

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com