
’’கொண்டாட்டங்களை விட எங்களுக்கு அவசியம் தேவை எங்கள் பொருள்களுக்கு நல்ல விலையும் எங்கள் வாழ்வாதாரமும்...’’ விவசாயிகள் வேதனை.
மனிதன் உயிர்வாழ அவசியமானது உணவு .அந்த உணவை உற்பத்தி செய்யும் மனிதர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். சேற்றில் அவர்கள் கால் இறங்கினால் தான் நம் வயிற்றுக்குள் சோறு இறங்கும். அப்படி எந்நாளும் உழைக்கும் சிறப்புமிக்க விவசாயி களுக்காக ஒரு நாள். அதுதான் இன்று. விவசாயக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமரான முன்னாள் இந்திய பிரதமர் சவுத்திரி சரண்சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23. இவர்தான் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தைக் கொண்டு வந்தவர். அது மட்டுமின்றி நிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் உழைப்பை சுரண்டிய நிலச்சுவான் தார்கள், விவசாயிகளின் தேவையை பயன்படுத்தி வட்டிக்கு பணம் தருபவர்களை கடுமையாக விமர்சனம் செய்தவர். விவசாயிகளின் நலனுக்காக அவர்களின் விளைபொருள் விற்பனைக்காக வேளாண் விளைபொருள்சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தியவர்.
விவசாயிகளின் தேசிய பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் சரிதான். ஆனால் இப்படி ஒரு தினம் இருப்பதை எத்தனை விவசாயிகள் அறிவார்கள்? இன்னும் தங்கள் உழைப்பிற்குத் தகுந்த அங்கீகாரமும் வாழ்வாதாரமும் இல்லாமல் கடனில் தவிக்கும் எத்தனையோ விவசாயிகள் உள்ளனர். அவர்கள் அறிவார்களா இந்த தினம் அவர்களுக்கானது என்று? இந்தக் கேள்விக்கான பதிலை நமக்காக சொல்கிறார் 2022 ன் பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பாரம்பர்ய நெல் பாதுகாவலர் விருது பெற்ற அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெண் விவசாயி லட்சுமி.

“ பெரும்பாலான விவசாயிகளுக்கு இப்படி ஒரு தினம் இருப்பதே தெரியாதே! விவசாயத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கும் விவசாயப் போராளிகள் மற்றும் படித்த விவசாயிகளுக்கு வேண்டுமானால் இந்த நாளின் சிறப்பு தெரியுமே தவிர உண்மையிலேயே தெரிந்து மகிழ வேண்டிய வயலில் எந்நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் வறிய விவசாயிகளுக்கு நிச்சயம் தெரியாது என்பதே உண்மை . ஆகவே இந்த நாள் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.
அடுத்து தங்கள் பொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்காமல் விற்பனை செய்ய முடியாமல் பொருட்கள் வீணாகிப் போகும் தகவல்களை இணையதளம் மற்றும் பல ஊடக செய்திகள் மூலம் அடிக்கடி காண்கிறோம். ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் மழை வெயிலைப் பாராமல் உழைக்கும் விவசாயிகளுக்கு தங்கள் உழைப்பில் வந்த பொருள்களின் மதிப்பை அறிந்து அதற்கான விலையைக் கேட்பதற்கான உரிமையும் விழிப்புணர்வும் வர வேண்டும்.
இதில் மேலும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். பயிர் பாதுகாப்பீடு செய்திருந்தாலும் ஏதோவொரு காரணத்தினால் பயிர்கள் வீணாகி பாதிக்கப் படும்போது தனி நபர் காப்பீடுகள் கிடைப்பதில்லை என்பது, இது பெரும்பாலான விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. அடுத்து நான் பாரம்பர்ய விதை நெல்களை சேகரித்து பயிர் செய்கிறேன். அரசு எங்களைப் போன்றவர்களுக்கு ஊக்கம் தந்து நம் நாட்டிலேயே இன்னும் கண்டு பிடிக்கப்படாத பாரம்பரிய விதை நெல்களை மீட்டெடுக்க ஆதரவு தந்தால் நம் நாட்டின் விவசாயமும் வளரும். நெற்பயிர் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள்.“
இவர் கூறுவது போல் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் இந்த நாளில் பெருமை அடைய வேண்டு மெனில் முதற்கண் விவசாயிகளின் மனம் மகிழ வேண்டும். அவர்களின் விளைபொருள்களுக்குத் தகுந்த விலை நிர்ணயித்து அதனால் அவர்களின் பொருளாதாரம் உயர வேண்டும். அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்பதே விவாயிகளின் தினமான இன்று பெரும்பாலான விவசாயிகளின் வேண்டுகோள்.