பிப்ரவரி - 28 அன்னை கஸ்தூரிபாய் நினைவு தினம்!

பிப்ரவரி - 28 அன்னை கஸ்தூரிபாய் நினைவு தினம்!

ன்னை கஸ்தூரிபாய் மிகுந்த மனவலிமை மிக்கவர். சுதந்திர போரில் முக்கியப் பங்கு வகித்தவர். வார்தா ஆசிரமத்தில் அன்று மகாத்மாவின் பிறந்த நாள் விழாவுக்கு சிலர் வந்திருந்தார்கள். அவர்களிடம் காந்தியடிகள், ‘உங்கள் உணவை நீங்களே கொண்டு வர வேண்டும். இந்த ஆசிரமத்தில் உங்களைச் சாப்பிட அனுமதிக்க முடியாது’ என்று கண்டிப்பாய் சொன்னார்.

பதினேழு பெண்கள் அங்கு வந்தனர். காந்தியடிகளின் குடியிருப்புக்கு எதிரே ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிடத் தொடங்கினார்கள்.

இதை தற்செயலாக கவனித்த கஸ்தூரி பாய், "ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? சாப்பிட வாருங்கள்” என்றார். மகாத்மாவின் நிபந்தனையை அந்தப் பெண்கள் அவரிடம் சொன்னார்கள்.

அதைக் கேட்டு அம்மையார் மனம் சஞ்சலமடைந்தார். "என்ன கேலிக்கூத்தாயிருக்கிறது!”  என சொல்லிக் கொண்டே சமையலறைக்குச் சென்று அங்குள்ள உணவுப் பொருட்களையெல்லாம் கொண்டுவந்து அந்தப்  பெண்களிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.

அந்த வழியாக வந்த மகாத்மா “நான் உங்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன் உணவு எல்லாம் தர முடியாது” என்றார்.

அன்னை கஸ்தூரிபாய் அதெல்லாம் எனக்கு தெரியாது என் விருந்தினர்களை நான் உபசரிக்கிறேன் நீங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை என்றாராம் அன்னை கஸ்தூரிபாய்.

ஒவ்வொரு நாளும் சில புதிய பாடங்களை படித்து எழுத வேண்டும் இதுவும் காந்தியின் கட்டளை. முணு முணுக்காமல் அதையும் செய்தார்.

காந்திஜி தனது குடும்பத்துடன் 1927 ஆம் ஆண்டு மத்தியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார். இலங்கையில் ஒரு ஐரோப்பிய மாது காந்திஜியிடம் கஸ்தூரிபாவை சுட்டிக்காட்டி இந்த அம்மையார் உங்களுக்கு தாயாரா என்று கேட்டுவிட்டாள்.

சிரித்துக்கொண்டே ஆம் என்று கூறினார் காந்திஜி. மறுநாள் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகிவிட்டது. செய்தி வெளியான தினத்தன்று காலை காந்திஜி மாத்தளையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது மேடை மீது கஸ்தூரி இல்லாமல் இருக்கவே, உங்கள்  தாயார் ஏன் வரவில்லை என்று கேட்டார் ஒருவர்.

காந்திஜி உடனே பதில் கூறவில்லை. கூட்டத்தில் பேசும்போது அவர் பின் வருமாறு சொன்னார்:

நேற்று இரவு கஸ்தூரிபாவை என்னுடைய தாயாரா என்று ஒருவர் கேட்டார். இன்றும் அதே கேள்விதான் கிடைத்தது இந்த தவறை நான் ரசிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பே மனைவி ஸ்தானத்தை விட்டுவிட்டாள். சென்ற முப்பது வருடங்களாக கஸ்தூரிபாய் எனக்கு அன்பும் பணிவிடையும் செய்து வருகிறாள். தாய், தோழி, சமையற்காரி, தாதி, துணி துவைத்து போடும் ஊழியக்காரி என்று பலவிதமாக எனக்கு சேவை செய்து வருகிறாள். எனக்கு கிடைக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அதிகாலையிலேயே அவரும் கிளம்பிவிட்டால் எனக்கு உணவு தயாரிக்கவோ என்னுடைய உடைகளை சுத்தம் செய்யவும் வேறு ஆள் தேட நேரிடும். பயண காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் புது ஆள் தேடுவது முடியாத காரியம். ஆகவே எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதாவது உழைப்பு அவளுக்கு கௌரவம். நீங்கள் கஸ்தூரிபாவை பற்றி விசாரித்தீர்கள் என்று என் சகாக்கள் அவளிடம் தெரிவித்துவிடுவர் என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன். இதை கேட்டதும் மக்கள் கைதட்டி ஆரவாரித்தார்கள்.

கஸ்தூரி காலமானதும் அவர் உடல் தகனம் செய்யப்பட்டபோது, காந்தியடிகள் அங்கேயே அமர்ந்திருந்தார். அங்கிருந்த ஒருவர் காந்தியடிகளிடம் வந்து இறுதிவரை இங்கு இருக்க வேண்டுமா என்று கேட்டார்.

அதற்கு காந்தியடிகள், ‘62 ஆண்டுகள் கஸ்தூரிபாவிடம் நான் வாழ்ந்தவனாயிற்றே. இப்போது அவள் உடல் எரிந்து முடிவதற்கு முன் நான் திரும்பி விட்டால் என் கஸ்தூரி பாய் என்னை மன்னிக்கவே மாட்டாள்’ என சோகத்துடன் பதில் அளித்தார்.

ஒருமுறை கஸ்தூரி பாய் சமையல் அறையில் இருந்தார்.

காந்திஜி அவரைத்தேடி வந்து உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ என்றார். கஸ்தூரிபாய் நீ என் மனைவி இல்லையாம் ஜெனரல்ஸ் மில்ஸ் சொல்கிறார்.

இது என்ன புதிது புதிதாக ஏதோ சொல்கிறீர்களே!

அரசாங்கத்தில் பதிவாகாத காரணத்தாலே சட்டரீதியாக என் மனைவி இல்லையாம். சரி உங்களை போன்ற பெண்கள் இப்போது என்ன செய்வீர்கள் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.

நீங்களே சொல்லுங்கள்...

இதற்காகவே காத்திருந்தவர் போல காந்திஜி நாங்கள் எப்படி அரசாங்கத்தோடு போராடுகிறோமோ அது போல நீங்களும் எழுந்து நிற்க வேண்டும். சத்தியாகிரகம் செய்து ஜெயிலுக்குப் போக வேண்டும் என்று கூறினார்.

பெண்கள் ஜெயிலுக்கு போகலாமா?

ஏன் போகக்கூடாது கணவனும் மனைவியும் சரிசமம் இல்லையா? ஆண்கள் அறிவிக்கும் சுக திட்டங்களில் அவர்களுக்கும் பங்கு உண்டு. இராமனுடன் சீதையும், அரிச்சந்திரன் சந்திரமதியும், நலனுடன் தமயந்தியும் கணவரின் துன்பங்களில் பங்கு பெறவில்லையா?

அவர்கள் தெய்வீகத்தன்மை நிறைந்தவர்கள். நான் அப்படி இல்லையே!

நாமும் அவர்களைபோல வாழ்ந்து தெய்வத்தன்மைய அடைய முடியும் அவர்கள் கணவரோடு கஷ்டங்களையும் அனுபவித்ததால்தானே கற்புக்கரசிகள் என்று போற்றப்பட்டார்கள்.

சரி அப்படியானால் நான் ஜெயிலுக்கு போகிறேன்.

அங்கே கொடுக்கும் உணவு மோசமானதாக இருந்தால் பழங்கள் சாப்பிடு. அரசாங்கம் உனக்கு பழங்கள் கொடுக்காவிட்டால் உபவாசம் இரு. 

சிறைச்சென்று பட்டினி கிடந்து சாவு என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் அப்படித்தானே.

அப்படி நீ இருந்தால் உன்னையே நான் ஜெகதாம்பாவாக போதிப்பேன்.

சரி நான் ஜெயிலுக்கு போக தயார் என்றார் கஸ்தூரி பாய்! கடைசி மூச்சையும் தன் கணவனுக்காகவும் தேசத்திற்காகவும் செலவிட்டு காலமானார் அன்னை கஸ்தூரிபாய். அவரது நினைவை போற்றுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com