'ஆஞ்சநேயர் மண்ணிலிருந்து அயோத்தி வரை!

'ஆஞ்சநேயர் மண்ணிலிருந்து அயோத்தி வரை!

காசி தமிழ் சங்கமப் பயண அனுபவம் - (22/11/2022 - 29/11/2022)

த்திய அரசு செலவில் கல்வி, கலாச்சாரம், இரயில்வே, பாதுகாப்பு அமைச்சகங்கள், பிரதமர் அலுவலகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி,காசி தமிழ்ச்சங்கம் இவை முன்னெடுத்து ஒருங்கிணைத்த காசி தமிழ்ச்சங்கமப் பயணத்தில் பங்கேற்க தேர்வானேன்.  மாதவனைப் பூசித்த அந்தச் சிறுமி எனக்குள் மீண்டும் புகுந்துகொண்டாள். முறையாக எங்கள் குழுவில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களும்,  கிறித்தவர்களும், ஒரு சேரப் பயணித்தார்கள்.

    மறக்க முடியாத வாழ்நாள் வாய்ப்பான அந்த  ‘காசி முதல் அயோத்தி வரை’ யிலான பயணத்தின் வண்ண நினைவுகளை இக் கட்டுரை வாயிலாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

எங்கள் கயா எக்ஸ்பிரஸ் ரயில் விரையத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என் பெட்டியிலிருந்த திருவண்ணாமலைக் குழுவினர்  தேவாரம், திருவாசகம் பாடத் தொடங்கிவிட்டார்கள். மற்றொரு பெட்டியில் விஷ்ணு சஹஸ்ரநாமம், மஹாலட்சுமி அஷ்டகம் களை கட்டியது. ஒவ்வொரு வேளையும் கச்சிதமான பேக்கிங்கில் தமிழ்நாட்டு உணவோடு  தவறாமல் சப்பாத்தியும் நல்ல தேநீரும் எங்கள் இருக்கைக்கே வந்தன. மாறுதலான வட இந்திய எள்ளுச் சட்னி அபாரமாக இருந்தது.

       விஜயவாடா, ஜபல்பூர், கட்னீ என வழியெங்கும் பொதுமக்களும் பா.ஜ.க வினருமாக எங்களுக்கு மேளதாளம், ஆடல் சகிதம் நெற்றியில் திலகமிட்டு, மாலையிட்டு ‘பாரத் மாதா கி ஜய்’, ‘வந்தே மாதரம்’ ‘ஜய் ஶ்ரீராம்’ கோஷங்களோடு உற்சாக வரவேற்பளித்தார்கள்.  எங்களுக்கு அன்பளிப்பாக சீமை இலந்தைப் பழங்கள் வந்து சேர்ந்தன.  

24.11.22 காலை உணவுக்குப் பின் காசி விஸ்வநாதரை தரிசிக்க அழைத்துச் செல்லப் பட்டோம். மசூதிக்குள்ளிருந்த அசல் மூலவரான மிகப் பெரிய லிங்கம் கண்டறியப் பட்டு அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதை அறிவோம். 'ஞான் வாபி' (ஞானக்கடல் என்று பொருள்படும் சமஸ்கிருதப் பெயர்!) மசூதியைத் தாண்டித்தான் காசி விஸ்வநாதரைப் பார்க்கப் போகவேண்டும்.

வேதமந்திரங்கள் முழங்க இருபுறமும் கை கூப்பி நின்று வணங்கி மலர் தூவி எங்களுக்குச் சிறப்பு வரவேற் பளித்தார்கள். நேர் எதிரேயுள்ள ஞான் வாபி மசூதியைப் பார்த்தவாறு நந்தியின் அமைவு.  இப்போதும் மசூதித் தரப்பு விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார். முறையான நீதிமன்றத் தீர்ப்பு வரும் என்றே நம்புவதாகவும் சொன்னார்.

      எங்களுக்கென சிறப்பு ஏற்பாடாக ஒவ்வொருவருக்கும் கங்கை நீருடனான தாமிரக்குவளை, தாமரை இதழ்கள் மிதக்கத் தரப்பட்டு காசி விஸ்வநாதருக்கு எங்கள் கைகளாலேயே   அபிஷேகம் செய்தோம். சொல்லிலடங்கா மனநிறைவு பெற்றோம்!

அன்னபூரணியை வணங்கி சிலிர்ப்பூட்டும் தீபாராதனை, கணகண மணியோசை, பிரார்த்தனை, ஹர ஹர மஹாதேவா கோஷத்துக்குப் பின் அங்கேயே மதிய உணவு. இங்கே அதியற்புதமான அசோகா அல்வாவை (பாசிப்பருப்பாலானது) ருசித்தோம். உணவை யாரும் வீணாக்க வேண்டாம் என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டது.

      மாலையில் இரு க்ரூஸ் படகுகளில் பயணித்து புகழ்பெற்ற கங்கை ஆரத்தியைப் பார்க்கச் சென்றோம். அங்கேயே மண் குவளைகளில் தேநீரும் பிஸ்கட்டும்(ஓம வாசனையுடன் வட இந்தியாவில் மட்டுமே கிடைப்பது) தந்தார்கள். வேதமந்திரங்களுடன் தொடர் மணியோசை முழங்க கண்கொள்ளா தீபாராதனைக் காட்சியைத் தரிசித்தோம்.

25.11.22 அன்று விடியல் 5.30க்கு வாராணசி கங்கையில் குளியல். பாரதியார் இங்கு வாழ்ந்த காலத்தில் தவறாமல் அதிகாலையில் கங்கை நீராடி இதே படித்துறையில் அமர்ந்து நண்பர்களோடு அளவளாவி பாடல்களும் இயற்றியிருக்கிறார். இந்தக் காற்றில் இன்னும் அவர் கலந்திருப்பாரா!  ‘நமாமி’ கங்கைத் திட்டத்தின் பலனாக மிகத் தூய்மையான கங்கை கடலாய் விரிந்து கண்களுக்கு எதிரே காட்சியளித்தது. சொல்லொணா அற்புதம்! உத்திரப்பிரதேச அரசின் உத்தரவால் இப்போது பிணங்களை வீசுவதைத் தடை செய்தாயிற்று என்று அறிந்துகொண்டோம்.

       பிறகு காசி சிவ மடம் மற்றும் அருகிலிருந்த சிவன் கோயிலைக் கடந்து  தற்போது மேம்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பார்த்தோம். இங்கிருந்துதான் பனாரஸ் இந்துக் கல்லூரியிலும் அலஹாபாத் (தற்போது பிரயாக்ராஜ்) பல்கலைக் கழகத்திலுமாக நான்காண்டுகள் பயின்றிருக்கிறார். அருகிலேயே பூங்கா மற்றும்  பாரதியார் திருவுருச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. மனதார வணங்கி மாலையணிவித்து மரியாதை செய்தோம்.

காசித் தெருக்களில் முன்பின் தெரியாதவர்களும் எங்களைப் பார்த்து கைகூப்பி 'வணக்கம் காசி' என்று தமிழில் கூறி இன்முகத்தோடு வரவேற்றார்கள். தெருவோர காவித்துறவியொருவர் வருவோர் போவோருக்கெல்லாம் திருநீறு தந்து ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.

      காசியில் காகங்கள் கரைவதில்லை. கருடன் வட்டமிடுவதில்லை.

     நாய்கள் குரைப்பதோ சண்டையிடுவதோ இல்லை.

      பசுக்கள் யாரையும் முட்டுவதில்லை.

      பூக்கள் வாசம் வீசுவதில்லை.

      சதா பிணங்கள் எரிக்கப்பட்டாலும் காற்றில் பிணவாடை இல்லை.’

      கேள்வியுற்ற அத்தனையும் முற்றிலும் உண்மை. முக்தி தரும் காசி கற்பனைக்கு எட்டாத சாத்தியக் கூறுகளைக்கொண்டிருக்கிறது.

      நாங்கள் கண்ட சாலைகள் நல்ல அகலமாகவும் நகரக் கட்டமைப்புகள் கொண்டு மிக அழகாகவும் இருந்தன.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்துக்கு வந்தோம். விழா மேடையில் பிரசித்தி பெற்ற இந்தியக் கோயில்கள் பிரம்மாண்ட டிஜிட்டல் திரையில் வலம் வருவது போல வடிவமைத்திருந்தார்கள். நான் பாரதியார் குறித்த என் கவிதையை வாசித்தேன்.

      அங்கிருந்து கிளம்பி அசோகர் கால அற்புத வடிவமைப்பான சாரநாத் ஸ்தூபியைக் காணச் சென்றோம். திபெத் பயணிகள், புத்த பிட்சுக்கள் குழுவாக வந்திருந்தார்கள். மாலையில் மீண்டும் காசி சங்கம விழா. கரகாட்டம், மயிலாட்டம் தொடங்கி தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. எங்களுக்கு நினைவுப் பரிசாக காசி தமிழ் சங்கம கேடயம் மற்றும் விலையுயர்ந்த அசல் உல்லன் சால்வை வழங்கி விழா நிறைவுக்கு வந்தது.

26.11.22 காலை பிரயாகை எங்களை தமிழிலேயே வரவேற்றது.

கங்கா, யமுனா, சரஸ்வதி (கண்ணுக்குத் தெரியாமல்) சங்கமிக்கும் புண்ணியத்தலம் திரிவேணி சங்கமம் என்றறியப்படுகிறது. கங்கை நீரடி மண்தான் அழகு சாதனப் பொருளாக நாம் பார்க்கும் முல்தானி மட்டி எனும் சருமத்தை மேம்படுத்தும் வழுவழுப்பான களிமண் வகை.அங்கிருந்து லட்சுமி நாராயண மந்திர் சென்றோம். கலையெழில் மிளிரும் சுவரோவியங்கள், சிற்பங்கள் வசீகரித்தன.

          அடுத்து  25 வயதில் தேசத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த சுதந்திரப் போராளி சந்திரசேகர ஆசாத் நினைவிடம். அவர் உயிர்நீத்த அதே இடத்தில் மீசையை முறுக்கியவாறு நிற்கும் வீரம் செறிந்த தோற்றத்தில் பிரம்மாண்டச் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.   

27.11.22 நான்காம் நாள் அயோத்தி ராம ஜென்ம பூமி நோக்கியப் பயணம். எப்படிப்பட்ட மகோன்னத வாய்ப்பு! என்னைத் தேர்ந்தெடுத்தது உண்மையில் யார்! இந்த மண்ணின் ஆகச்சிறந்த தலைமகன், குரு மெச்சிய சீடன், கனிவு மிக்க தமையன், காதல் கணவன், குகனுக்கு நண்பன், முதியவள் சபரியின் அன்புக்கு அடிமை...  பாரத புண்ணிய பூமியை பார் அறியச் செய்த உன்னத அரசனாயிற்றே இராமன்! அனைத்துக்கும் சிகரமாக ஏகபத்தினி விரதன்!

       ராம ஜென்மபூமி நுழைவு வாயிலுக்கு முன் கடும் சோதனை உண்டு.

       தமிழ்ப்பாணியில் கட்டப்பட்டு தமிழர்களால் நிர்வகிக்கப்படும் பட்டாபிஷேக ராமர் கோயில் நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த கட்டடங்களுக்கு நடுவே இருந்தது. இங்கும் அர்ச்சகர்கள் எங்களை வேதமந்திர முழக்கத்தோடு திலகமிட்டு வரவேற்றார்கள். முன்னதாக கோசாலை போதிய இட வசதியோடு அமைந்திருந்தது. பசுக்கள் இங்கே சுதந்திரத்துடன் பராமரிக்கப் படுகின்றன. ராம ஜென்ம பூமி வளாகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் வானரர்கள் உலவிக் கொண்டி ருந்தார்கள். ராமாயணம் எப்படிப் பொய்யாகும்?

2024 ல் மிகப் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமர் கோவிலின் மூலவரான ராம் லல்லா என்றறியப்படும் குழந்தை ராமரை கண்களும் மனமும் ஒருசேரக்  குளிர தரிசித்தோம்.

     ராம ஜென்ம பூமி வளாகத்தில் ஒவ்வொன்றும் ஒரு டன் எடை கொண்ட 17,000 கிரானைட் கற்கள் தமிழ்நாடு, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதி களிலிருந்து வரவழைக்கப்பட்டு, கட்டுமானத்துக் காகக் குவித்து வைக்கப் பட்டிருந்ததைப் பிரமிப்புடன் பார்த்தோம். ராம ஜென்மபூமி அறங்காவலர் குழுவைச் சேர்ந்த திரு. வினோத் துபே, திருமதி.அனுசுயா, பொறியாளர் கவுதம் (தமிழர்) ஆகியோர் எங்களை வரவேற்றுப் பேசினார்கள்.

     பாபர் மசூதிக்கு முந்தைய கோயில் வரலாற்றை விளக்கச் சொல்லி நான் திரு.துபே அவர்களிடம் ஒலிவாங்கியில் வேண்டுகோள் விடுத்தேன்.

கி.மு 100 ல் முதலில் பிரம்மாண்டமாக இங்கே கோயில் எழுப்பிய விக்கிரமாதித்தன், அரசர் நேமிகேதுவின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வரலாற்றில் தொடங்கி 90களிலேயே கேரளாவைச் சேர்ந்த கே.கே.முகமது தலைமையிலான குழுவின் அகழ்வாராய்ச்சியில் இது முழுக்க முழுக்க இந்துக்களின் கோயில்தான் என்பதை உறுதிப் படுத்திய தூண்கள், கல்வெட்டுகள் கிடைத்தது என்ற செய்தி உட்பட இறுதித் தீர்ப்பு வரையிலான அதிமுக்கியச் செய்திகளை திரு.துபே ஹிந்தியில் தெளிவாக விளக்க அனுசுயா தமிழில் மொழிபெயர்த்தார். இந்தப் பயணத்தின் முக்கியமான பகுதியாக நான் கருதும் திரு.துபே அவர்களின் விளக்கத்தை மறக்காமல் காணொளியாகப் பதிவு செய்தேன். தமிழ்நாட்டுக்காக!

       ராம ஜென்ம பூமியிலிருந்து பிரிய மனமின்றிப் புறப்பட்டு இறுதியாக காப்பிய இராமனும் சீதையும், கொடுத்து வைத்த அயோத்திவாசிகளும் கால் நனைத்த சரயூ நதிக்கரையை வந்தடைந்தோம்.

      ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இராமகாதைக்கு சாட்சியம் வகித்து வற்றாத பாரதீயப் பண்பாட்டின் இணையற்ற பெரும் பிரவாகமாய் இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் சரயூவின் குளிர்ச்சி மனதிலும் படர்ந்தது!

      குழுவாக கடைசிப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் அழகிய குடை பரிசளிக்கப் பட்டது.

இம் மண்ணிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாத ஆன்மிக உணர்வும்  பக்தித் தமிழும் வடஇந்திய மக்களின் சிவப்புக் கம்பள ராஜ மரியாதையும் களங்கமற்ற அன்புமாக கலந்துறவாடி இறுதியாக நாக்பூரில் எங்களுக்கு ஆரஞ்சுகள் தந்து ஆரவாரத்துடன் அவர்கள் வழியனுப்பி வைத்த வாஞ்சையையும் சுமந்து பயணம் இனிதே நிறைவடைந்தது.     

    இனி மீண்டும் ஒருமுறை முன்னோர் மரபுகளை மீட்டெடுக்கும் நாட்களுக்கும் இது போன்று வரலாற்றின் முடிவறியாப் பாதையில் உலவவும் எங்கே போவது என்ற ஆதங்கம் அழுத்த மறக்க முடியாத காசி தமிழ்ச் சங்கம நினைவின் இனிப்போடு ஆஞ்சநேயன் அருள்பாலிக்கும் நாமக்கல் வந்தடைந்தேன்.

       ஒரே பாரதம்! உன்னத பாரதம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com