
தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மக்கள் மாளிகையாக மாறி வருகிறது. சென்னை கிண்டியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லம், ஆளுநர் மாளிகை அலுவலகங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன.
விசாலமான தர்பார் மண்டபம், பசுமையான புல்வெளி, கட்டடக் கலையமைப்புடன் கூடிய கட்டடங்கள் அமைந்துள்ளன. மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள், அலுவல் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய உயர் பதவியில் உள்ளோரு க்கான தங்கும் அறைகள் இங்கு உள்ளன. அற்புதமான விருந்து மண்டபமும் கலைப்பொருள்களைக் கொண்ட கட்டடக் கலையமைப்புடன் கூடிய அழகிய கட்டடங்களும் அமைந்துள்ளன. பாரம்பரிய கலைநய கட்டடங்கள் 400 ஆண்டுகால பாரம்பரியத்தை நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தாலும் ஆளுநர் மாளிகை துள்ளியோடும் புள்ளிமான்களுடன் கூடிய வனச் சூழலுடன் காணப் படுகிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையான மரங்களைப் பாதுகாப்பதுடன் பலவகையான பறவைகள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக திகழ்கிறது.
1946ல் இந்த இல்லம் ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லமாக ஆனது. மேலும் நாடு சுதந்திரம் அடைந்தபோது ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை) எனப் பெயரிடப்பட்டது. ஆளுநரின் குடியிருப்பு 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவின் பிரபலமான பண்டைய ரோமின் பல்லேடியன் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகும். இருபத்தைந்தாண்டு நினைவு பூந்தோட்டம், நீள் உருண்டை வடிவிலான பூந்தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டங்களும் நீரூற்றுகளும் உள்ளன.
ஆளுநர் மாளிகை பொதுமக்களின் பார்வைக்கு விரைவில் திறக்கப்பட உள்ளது.