கடன்களைத் தவிர்ப்பது எப்படி ?

நமக்கு ஒரு செலவு உள்ளது; அதனை ஈடு செய்யும் அளவுக்கு நம்மிடம் பணம் இல்லை என்கிறபோது, பணப் பற்றாக்குறை உள்ளபோது , கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.
கடன் வாங்காமல் எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
செலவுகள் பொதுவாக இரண்டு விதங்களில் வரும்.
எதிர்பாராத செலவுகள்;
இவற்றில் இரண்டு வகைகள் உண்டு.
நம்மால் தாங்க முடிந்த எதிர்பாராத செலவுகள் - இவை நம்மால் தாங்கக் கூடிய குறைந்த பணமுள்ள செலவுகள்
நம்மால் தாங்க முடியாத எதிர்பாராத செலவுகள் - இவை நம்மால் தாங்க முடியாத அதிக பணமுள்ள செலவுகள்
தாங்க முடிந்த எதிர்பாராத செலவுகள்:
வீட்டு மராமத்து வேலைகள், வீட்டில் சம்பாதிக்கும் நபர் திடீரென உடல்நலக்குறைவு அடைதல், வேலை இழந்தால் குடும்பத்தின் செலவுகள், திடீரென வாகனப் பழுது என எந்த ஒரு எதிர்பாராத செலவுகளும் வரலாம். இத்தகைய எதிர்பாராத செலவுகளை கையாள அவசரகால நிதி (emergency fund) வைத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான செலவுகளுக்கு அவசரகால நிதி வைத்திருந்தால் இத்தகைய எதிர்பாராத செலவுகளை, பிறரிடம் கையேந்தாமல், எளிதில் கையாள முடியும். 12 மாதங்களுக்கு அவசரகால நிதி வைத்திருந்தால் உத்தமம். இதற்கு மாதா மாதம், வங்கி சேமிப்பு கணக்கில் பணம் சேமித்து, 12 மாதங்களுக்கான செலவுத் தொகை அளவிற்கு சேமிக்க வேண்டும். செலவழித்தால், மறுபடி பழைய அளவிற்கு கொண்டு வர வேண்டும்.

தாங்க முடியாத எதிர்பாராத செலவுகள் -
மிக அதிகமான பொருட்செலவு உடைய, நம்மால் தாங்க முடியாத செலவுகளுக்கு காப்பீடு வைத்திருக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு தாங்க முடியாத மருத்துவச் செலவுகளை தாங்க வைக்கிறது. வாகனக் காப்பீடு வாகனச் செலவுகளை, விபத்து சார்ந்த செலவுகளைத் தாங்க வைக்கிறது. கால வரையறையுள்ள ஆயுள் காப்பீடு வீட்டின் சம்பாதிக்கும் நபர் திடீரென இறந்துவிட்டால், வீட்டின் நபர்கள் கடனில் மாட்டிக் கொள்ளாமல் எதிர்காலத்தைக் காக்க உதவுகிறது. குடும்பத்தின் நிதி நிலைமையைக் காக்க உதவுகிறது.
எதிர்பார்த்த செலவுகள் -
வருடா வருடம் தீபாவளிக்கு உடை,பட்டாசு வாங்குவது, வருடாந்திர சுற்றுலா, வீட்டிற்கு தேவையான பெரிய மின் உபகரணம் வாங்குவது, குழந்தைகளின் எதிர்கால மேல்படிப்பு, எதிர்காலத் திருமணம், ஓய்வு காலத்திற்கு தேவையான சேமிப்பு போன்றவை எதிர்பார்த்த செலவுகள். இவற்றில் ஒவ்வொரு செலவும் , ஒரு நிதிக் குறிக்கோள். இந்த நிதிக் குறிக்கோள்களுக்கு, காலவரையறை (duration) மாறுபடும். உதாரணமாக, வருடாந்திர தீபாவளி செலவுகளுக்கு காலவரையறை ஒரு வருடம். குழந்தைகளின் மேல்படிப்பிற்கு காலவரையறை 18 வருடங்கள்.
இந்த செலவுகளுக்கு சேமித்தால் மட்டும் போதாது. சேமிப்பு பணவீக்கத்தினை சமாளிக்க உதவாது. இந்த செலவுகளை சமாளிக்க, முதலீடு செய்ய வேண்டும். குறிக்கோளினைச் சார்ந்து முதலீடு அமைய வேண்டும்.
ஒவ்வொரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு.
பணத்தின் வளரும் விகிதம் (rate of return)
பணத்தின் நீர்ப்புத்தன்மை (liquidity)
பணத்தை இழப்பதற்கான மறையிடர் (risk)
எந்த ஒரு முதலீட்டினாலும், இந்த மூன்று விஷயங்களை ஒருங்கே வழங்க முடியாது. ஏதாவது இரண்டை மட்டுமே வழங்க முடியும்.
உதாரணமாக, வங்கி தொடர் வைப்பு நிதி முதலீடு. வளரும் விகிதம் சுமார். நீர்ப்புத்தன்மை அதிகம். பணத்தை இழக்கும் மறையிடர் குறைவு.
பங்குச்சந்தை முதலீடு. வளரும் விகிதம் அதிகம். நீர்ப்புத்தன்மை அதிகம். பணத்தை இழக்கும் மறையிடர் மிக அதிகம்.

எனவே, குறிக்கோளுக்குத் தகுந்த முதலீட்டினை தேர்ந்தெடுக்க வேண்டும். வருடாந்திர தீபாவளி செலவுக் குறிக்கோளுக்கு, தொடர் வைப்பு நிதிகள் சிறப்பானவை. குறுகிய காலத்தில், அவற்றில் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. சுமாரான பணப்பெருக்கம் இருக்கும். ஓய்வுகாலச் செலவுகளுக்கு , பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றில் நீண்ட காலத்தில் நல்லதொரு பணப்பெருக்கம் இருக்கும். நீண்ட கால செலவுகளுக்கு பணவீக்கத்தினை தாண்டி, முதலீடு வளர வேண்டும்.
இவ்வாறு, எதிர்பாராத செலவுகளுக்கு அவசரகால நிதி, காப்பீடு போன்றவற்றைக் கொண்டும், எதிர்பார்த்த செலவுகளுக்கு முதலீட்டினைக் கொண்டும் சமாளிக்க வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு பணத்தை ஒதுக்கி வைத்தால், கடன் வாங்குவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.
வீடு போன்ற அத்தியாவசியமான பெரிய செலவுகளுக்குக் கூட, முடிந்த அளவு பணத்தை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும். கடன் வாங்கும் பட்சத்தில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அடைக்கப் பார்க்க வேண்டும்.
கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.