தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தை தவிர்ப்பது எப்படி?

தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தை தவிர்ப்பது எப்படி?

'எதற்கும் தீர்வு தற்கொலை அல்ல!' நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் 18வயது மகள் மீராவின் தற்கொலை செய்தியை ஊடகங்களில்  கேட்டபோது, மனம் தாங்கொணாத் துயரத்தில்...வேதனை அடைந்தது.

பெற்றோர்கள் எப்படி வேதனைப்படுவார்கள். கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாளே... பள்ளி படிக்கும் மாணவிக்கு அப்படி என்ன பிரச்சனை இருக்கும்.. அப்படியே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அப்பா அம்மாவிடம் சொல்லி இருந்தால் அதற்கு தீர்வு கிடைத்திருக்குமே.

இறைவன் படைத்த உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இவ்வுலகில் யாருக்கும் உரிமை கிடையாது. இந்த வாழ்வு இறைவன் நமக்கு கொடுத்த பரிசு. நாம் வாழும் ஒவ்வொரு வினாடிக்கும்...

நாளை நம்மை படைத்த இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும்.

வானம், பூமி இவற்றுக்கிடையே எண்ணற்ற வாழ்வாதாரங்கள்... இவற்றையெல்லாம் இறைவன் எதற்காக படைத்துள்ளான்? நாம் இவ்வுலகில் எதற்காக படைக்கப்பட்டுள்ளோம்??

என்பது போன்ற எண்ணற்ற  கேள்விகளுக்கு விடைகாண முயன்றாலேபோதும் தற்கொலை எண்ணம் கண்டிப்பாக மனதிற்குள் எழாது.

சரி... அப்படி என்றால் தற்கொலை எண்ணத்தை எப்படி தவிர்ப்பது என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது?!

* கோபம், இயலாமை, துக்கம் ,சோகம் போன்ற எதிர்மறையான தாக்குதல்களால் மனம் தொய்வை சந்திக்கும் போது மனதை உற்சாகப்படுத்தும் நபர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.

* உறவு, நட்பு என பலர் இருந்தாலும்,  தனிப்பட்ட கருத்துக்களை யாரிடமும் வெளிப்படுத்தாமல் தனக்கு நல் வழிகாட்டியாக இருப்பர் என நினைக்கும் சில நபர்களை  எப்போதும் மனதில் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

* எந்த ஒரு பிரச்சினைக்கும் பதிலுக்கு பதில் தீர்வல்ல. யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவே வேண்டியிருக்கும். எனவே, பதற்றம் தணிந்து சகஜ நிலைக்கு வந்த பின் தீர்க்கமாக யோசியுங்கள்.

* ஒருவர் கோபமாக பேசும்போது, அடுத்தவர் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது, பிரச்சினையை ஆறப்போடும்நிலைக்கு கொண்டு போகும். மனம் சற்று அமைதியானவுடன் தெளிவாக யோசிக்கும் பக்குவம் உண்டாகி சரியான முடிவெடுக்கும் நிலைக்கு வர வாய்ப்புள்ளது.

இதை  எழுதிக் கொண்டிருக்கும்போது 25 வருடங்களுக்கு முன் நான் நேரே பார்த்த ஒரு காட்சி கண்முன் விரிகிறது. எங்கள் வீ ட்டின் அருகில் கணவன், மனைவி அவர்களின் சிறு குழந்தையுடன் குடித்தனமிருந்தார்கள்.

காலை என் கணவர் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது நான் எப்பொழுதுமே வழி அனுப்புவது வழக்கம். அப்போது திடீரென்று ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் கேட்க, (குழந்தை வீல் வீல் என்று அழும் சத்தம் வேறு) நான் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு செல்ல, அந்தப்பெண் கழுத்தில் கயிற்றைக் மாட்டிக்கொண்டு கையைக் காலை உதைத்துக் கொண்டு இருக்கிறார்‌. ஒரு நிமிடம் என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. பச்சைக் குழந்தை கீழே அழுகிறது. நான் உடனே சத்தம் போட்டு  உதவிக்கு ஆட்களை கூப்பிட்டு, அவளை இறக்கி ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து இப்படி எல்லாம் செய்யலாமா? என்ன காரணம் என்று கேட்க ,உப்பு சப்பு இல்லாத காரணத்தை அவள் சொல்ல, வந்த கோபத்திற்கு பளாரென்று கன்னத்தில் ஒன்று கொடுத்தேன். அழுதாள். அவள் கணவருக்கு போன் செய்து அவரை வரவழைத்தேன். இது எல்லாம்  சில மணி நேரத்தில் நடந்தது. நான் ஒரு வினாடி தாமதித்து இருந்தாலும் ஒரு உயிர் அனாமதேயமாக போயிருக்கும்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் கடந்த வாரம் அவள் (இப்போது கொரட்டூரில் சொந்த வீட்டில் இருக்கிறாள்) (இரண்டு பிள்ளைகள்) எங்கள் வீட்டிற்கு வந்து மகளின் (அழுத பச்சைக் குழந்தை) திருமண பத்திரிக்கை கொடுத்து விட்டுச் சென்றாள். என்னைக் கட்டி பிடித்து அக்கா நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை அக்கா என்று கூற அதைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாம். கண்டிப்பாக திருமணத்திற்கு வருகிறோம் என்று கூறி இரவு உணவளித்து அனுப்பினேன்.

சரி... மீண்டும்பிரச்சனைக்கு வருகிறேன்.

* குழப்பமான மனநிலையில் மனச் சோர்வுடன் இருக்கும் போது உற்ற நண்பரோ, உறவினரோ இல்லாத பட்சத்தில், மனநல வல்லுனர்களை சந்தியுங்கள். அவர்களிடம் மனம் விட்டுப் பேசி தனிப்பட்ட விஷயங்களை பகிருங்கள்.

* ஒரே மாதிரியான வாழ்க்கை முறை சலிப்பையும், சோர்வையும், மன உளைச்சலையும் தருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வப்போது சிறிய மாற்றம் தரும் இடங்களுக்கு சென்று வருவதை கட்டாயமாக வைத்து கொள்ளுங்கள். இயற்கை வளங்களுக்கு நம்மை ஆற்றுப்படுத்தும் தன்மை அதிகம் உள்ளது.

* எல்லாவற்றிற்கும் மேலாக அவரவருக்குப் பிடித்த ஏதாவது ஒரு பயிற்சியான ஓவியம் வரைதல், வீணை வாசித்தல், நடனம், மாடி தோட்டம் அமைத்தல், செல்லப்பிராணி வளர்த்தல், புத்தகம் வாசித்தல் இப்படி ஏதாவது ஒன்றை தினம் தோறும் சிறிது நேரமாக செய்வது மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும்.

* நம் வாழ்க்கை பல்வேறு சவால்கள் நிறைந்தது. வயதும், அனுபவமும் கூடக்கூட மனிதனின் குணமும், நடத்தையும் தான் கற்றுக்கொள்ளும் அனுபவங்களிலிருந்து பக்குவமடையும்.

* தனிப்பட்ட விஷயமோ(அந்தரங்க) தொழில் விவகாரமோ, பிறருடன் கருத்து வேறுபாடோ... இப்படி எத்தனை விதமான துயர் வந்தாலும் சுயமாக உழைத்து முன்னுக்கு வந்த சாதனையாளர்களின் சுயசரிதையை படியுங்கள். மனம் விசாலமடையும்.

* பிள்ளைகள் வளரும்போதே, சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழுதல், தன்னம்பிக்கை, சிக்கல்களை எதிர் கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல்… போன்ற பண்புகளை பிள்ளைகளிடம் விதைப்பது அவசியம்.

* அதேபோல் பிள்ளைகளும் எந்த விஷயமாக இருந்தாலும் அம்மா, அப்பாவிடம் மனம் விட்டு பேச பிரச்சனை காற்றில் சூடம் கரைவது போல் கரையும் என்பதை உணரவேண்டும்.

* அம்மா அப்பாவைப் போல் சிறந்த நண்பர்கள் இவ்வுலகில் யாருமில்லை.

நாம் நன்றாக வாழ வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் லட்சியம்,  கனவு, ஆசை எல்லாம்!

அழுங்கள்…

கோபப்படுங்கள்…
ஆத்திரப்படுங்கள்...

அத்தனையும் செய்து முடித்தபின் ஆரம்பத்திலிருந்து யோசியுங்கள். வாழ்வை எப்படி எதிர் கொள்வதென?!

துயரங்கள் நிலையில்லை.
இதுவும் கடந்து போகும்.

இறுதியாக,

இறைநம்பிக்கை,

கடின உழைப்பு,

பொறுப்பை உணர்ந்து செயல்படுதல்,

ஒழுக்கம்...


இவை நான்கும் இன்றைய உலகில் வாழ்வதற்கு தகுதியான கருவிகள். இவை நான்கும் நம்மிடையே இருந்தால்,

எந்த இயல்பிற்கு மாறான சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும் .

சுவாசம் தானாய் நிற்கும் வரை இறப்பைப் பற்றி சிந்திக்காதீர்கள்!

எதற்கும் தீர்வு தற்கொலையல்ல!!
மீராவைப் போல்... இனி ஒரு பெண் தற்கொலை செய்ய முயற்சிக்கக் கூடாது.

Sneha Helpline: (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com