இளம்பிள்ளை சேலை - என்ன ஸ்பெஷல்?

இளம்பிள்ளை சேலை  - என்ன ஸ்பெஷல்?

ணம் இருப்பவர்கள் மட்டுமே பட்டுப் புடவைவாங்கி அணிந்து அழகு பார்க்க முடியும் என்பது அந்நாளைய பெண்களின் தீராத ஏக்கமாக இருந்தது எனலாம். அந்தக் குறையைப் போக்கி அனைவரும் வாங்கக் கூடிய மலிவான விலையில், பெரும் விலை கொண்ட அசல் பட்டுத்தயாரிப்புகள் போன்ற நேர்த்தியுடன், அழகிய டிசைன்களில் புடவைகளை அள்ளித் தந்து பெண்களை மனம் மகிழ வைக்கிறது சேலத்தின் ஜவுளி நகரமான இளம்பிள்ளை.

ஆயிரக்கணக்கான டிசைன்களில் விதவிதமான வண்ணங்களுடன் அழகான புடவைகளின் அணிவகுப்பு... தூய்மையான விசாலமான இடம் கொண்ட பெரிய கடைகள்  மற்றும் சிறு கடைகள்... வருபவரை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்குத் தேவையானதை சலிக்காமல் காட்டும் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள். ஒரு புடவை எடுக்க வருபவர்கள் கண்டிப்பாக நான்கோ ஐந்தோ எடுத்தும் மீண்டும் வந்து இன்னும் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் திரும்பும் காட்சி. முக்கியமாக நடந்து வந்தும் பேருந்தில் வந்தும் காரில் வந்தும் எடுக்கும் அனைத்து தரப்பு பெண்களின் தேவையை பூர்த்தி செய்கிறது இளம்பிள்ளை! என்று சொன்னால் மிகையாகாது.

அந்தக்காலத்தில் இருந்த கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கைக் குறைந்து விட்டதால் இப்போது பவர் லூம் எனப்படும் மெஷின் தறிகளில் மட்டுமே புடவைகளை நெய்து தருகிறார்கள். இளம்பிள்ளையைச் சுற்றி உள்ள 25 கிராம மக்களின் மொத்த வாழ்வாதாரமே இந்த பவர்லூம் தறித்தொழிலில் தான் உள்ளது. கடை முதலாளிகள் சொந்தமாக தறிகளைப் போடுவதை தவிர்த்து நெசவாளர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நெய்து தரும் புடவைகளை அதற்கு ஏற்ற சன்மானத்தை தந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

நெசவாளர்களுக்கு அரசின் இலவச மின்சாரம் வசதி இருப்பதாலும் அவர்களால் தேவையான வருமானத்தை தங்களது  உழைப்புக் கொண்டு ஈட்ட முடிகிறது.

ஒவ்வொரு சேலையின் உருவாக்கமும் சுவாரஸ்யம் தருகிறது. சேலைகளை நெய்ய தரமான நூல்கள் சூரத்திலிருந்து வாங்கப்படுகின்றன. அவற்றில் கலர் ஏற்றப்படுகிறது. கட்டுகட்டான நூல்களை முதலில் பெரிய கோனில் சுற்றிப் பின் தேவைக்கு ஏற்றார்போல் சிறிய கோனில் சுற்றுகிறார்கள். பின் வார்ப்பு எனப்படும் அடிப்படை கலர் நூல் கொண்டு அதில் வண்ண நூல்கள் கோர்த்து டிஸைன் அட்டைகள் வாயிலாகத் தறியின் உதவி கொண்டு புடவை தயாராகிறது.

கைத்தறியில் ஒருவாரத்தில் ஒரு புடவைதான் நெய்ய முடியும் .ஆனால் பவர் லூம் எனப்படும் விசைத்தறியில் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று புடவைகளை நெய்யும் வசதி இருக்கிறது. இதனால் உற்பத்தி அதிகமாகிறது. அதற்கேற்றவாறு இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ,மகாராஷ்டிரா போன்ற நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இங்கு உள்ள உற்பத்தி நிறுவனங்கள் மூலம் அதிக கனமில்லாத கோட்டா சேலைகள், செமி சில்க் காட்டன், ஆர்ட் சில்க், டானா சில்க் போன்றவை வெகு குறைந்த விலைக்குத் தரப்படுகிறது. மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரத்திலும் இளம்பிள்ளை புடவைகள் பல இடங்களுக்குச் செல்கிறது.

அனைவரும் வாங்கக் கூடிய பட்டுப்புடவை போன்ற தோற்றமுடைய கரீஷ்மா சேரீஸ் 350 ரூபாய் முதல் 500 வரையும், ஆர்ட் சில்க் எனப்படும் வேலைப்பாடு கொண்ட புடவைகள் 380ரூபாய் முதல் 1500 வரையும், செமி சில்க் 500 ரூபாய் முதலும், கல்யாணப்பட்டுபுடவைகள் போன்ற வேலைப்பாடுகள் கொண்டவை ரூபாய் 1000 முதலும் இங்கு கிடைக்கும்.

எல்லோராலும் அதிக விலை போட்டு பட்டுப்புடவைகளை வாங்க முடிவதில்லை எனும் குறையைப் போக்குகிறது இந்த ரகங்கள்.

என்ன உங்களுக்கும் இளம்பிள்ளை சேலைகள் மீது ஆசை வருகிறதா?

நீங்களும் சேலம் பக்கம் வாங்க... நேரம் ஒதுக்கி இளம்பிள்ளை சென்று மலிவான விலையில் சேலைகளை அள்ளிக்கிட்டு போங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com