சர்வதேச மனித உரிமைகள் தினம்!

Human rights
Human rights

இன்று உலகமெங்கும் சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது .1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் ஐக்கிய நாடுகள் அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை கவுரவிக்கும் விதமாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது . ஆனால் நாம் சக மனிதரை மதித்து அவர்களுக்கான உரிமைகளை முழுமையாக வழங்குகிறோமா? என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக வரும்

சமீபத்தில் ஒரு ஊரில் குடிக்கும் தம்ளர்களை தனித்தனியே வைத்ததும் , இன்னும் ஒரு ஊர்க் கடையில் மாணவர்களுக்கு பொருள்கள் தராமல் புறக்கணித்ததும் செய்திகளில் வந்ததை அறிவோம் .இது போன்ற நிகழ்வுகள் இன்னும் தீண்டாமை முழுமையாக நீங்காததையே காட்டுகிறது .இந்த இடத்தில் ஜாதிகளின் பெயரால் நம்முடன் பயணிக்கும் சக மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக சொல்லலாம் .

இது ஒரு உதாரணம்தான் .இன்னும் இது போன்ற எத்தனையோ மனித உரிமைக்கான மீறல்கள் இன்னும் வெளியே தெரியாமல் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது .இம்மாதிரியான மனித உரிமைகள் மறுக்கப்படுவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது .சாதி மதம் இனம் மொழிகளை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஒரேமாதிரியான உரிமைகளும் சுதந்திரமும் கிடைக்கச் செய்வதே  மனித உரிமைகளின் அடிப்படை விதி .

இவற்றில் ஒரு மனிதன் வாழ்வதற்கான குடிநீர் கல்வி மருத்துவம் சுகாதாரம் போன்ற அடிப்படை விஷயங்கள் அனைத்தும் அடங்கும் .இது மட்டுமில்லாமல் வாழும் உரிமை கருத்துச்சுதந்திரம் அடிமைத்தனம் பேச்சுரிமை எழுத்துச்சுதந்திரம் போன்ற தனி மனித சுதந்திரங்களும் பெண்கள் மீதான அடக்கு முறைகளும் என நீண்டுகொண்டே போகிறது மனித உரிமைகளுக்கான பட்டியல் .

வார்த்தைகளால் நோகடிப்பதும் , கண்டுகொள்ளாமல் புறக்கணித்து மனதை வருத்துவதும் , சொத்துக்களைத் தராமல் ஏமாற்றுவதும் ,பெற்றோரைப் பார்த்துக் கொள்ளாமல் தவிக்க விடுவதும் போன்ற பல சென்சிடிவான விசயங்களும் மனித உரிமைகளின் கீழ் வருவதால் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில்  சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது .

நம் இந்தியா போன்ற தனி மனித ஒழுக்கத்தைப் போற்றும் நாட்டில் ஜனநாயகம் மேம்படவும் நீதியை சமமாக நிறுவவும் மனித உரிமைகள் முக்கியமாகிறது .அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மதித்து பிறப்பாலும் தொழிலாலும் எழும் வேறுபாடுகளை களைந்து ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் கல்வி முதல் அனைத்துஅடிப்படை வசதிகளும் பெற்று மகிழும் நாள் என்று வருகிறதோ அன்றுதான் இது போன்ற நாட்களின் பெருமையும் உயரும் .இந்த நிலை வர ஆணோ பெண்ணோ , சக மனிதர்களை சமமாக மதித்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்து மனிதநேயத்துடன்  வாழ உறுதி எடுக்க வேண்டும் அப்போதுதான் மனித உரிமைகள் தகுந்த கவுரவம் பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com