
இக்கால பெண்கள் பெரும்பாலும் காலில் விழுவது கலாச்சார குற்றம் என்று புறம் தள்ளுகிறார்கள். அதிலும், கணவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று சொன்னாலே அவர்களை கேலியாக பார்க்கின்றனர். அது பத்தாம் பசலித்தனம் என்று சொல்கிறார்கள். பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது நல்லது என்பதை அவர்களின் பெற்றோர்களும் சொல்லிக் கொடுப்பதில்லை. பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றால் நம்முள்ளே நேர்மறை சக்தி அதிகரிக்கப்படும். ஆசீர்வாதம் என்பது மிகப் பெரிய சக்தி. அது நமக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கிறது. ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. ஆய்வின்படி மனிதனின் காலில் தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறதாம். ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும்போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும்போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.
ஏன் அவ்வளவு தூரம் நமது அத்தை, மாமா மற்றும் பெற்றவர்களின் காலில் விழுந்து அவர்களின் காலை தொட்டு ஆசி பெறும்போது, அவர்கள் மனமுவந்து ஆசீர்வதிக்கும் வார்த்தைகள் இருக்கிறதே அதற்கு ஈடு இணை இல்லை. அதேபோல் ஆசீர்வாதம் பெறுவது மட்டுமல்ல... ஆசீர்வாதம் செய்வதும் ஒரு கலை. ஒரு நல்ல சக்தியை நமக்கு கொடுக்கும் நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில் தான் அதன் சூட்சமமே இருக்கிறது. சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எழுந்திருங்கள் என்பார்கள். அடடா... என் கா(ல்)ல விழுந்துட்டீங்களே!? என பதறுவர். இது எல்லாம் மிகவும் தவறு. நம்மை விட வயதானவர் என்றாலும் ஆசி கொடுக்காமல் புறக்கணித்தால் பாவம் என்கிறது சாஸ்திரம்.
பிள்ளைகள் காலில் விழுந்தால் 'தீர்க்காயுஷ்மான் பவ' என ஆணுக்கும், 'தீர்க்க சுமங்கலிமான் பவ' என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்.
சகல தோஷங்களும் இன்றோடு நீங்க பெற்று, சகல செல்வங்களும் பெற்று, குடும்ப ஒற்றுமையுடன், நல்ல தொழில் வளத்துடன், நீண்ட ஆயுளுடன், நல்ல விதியோடு நல்ல மதியுடன்... வாழுங்கள். வாழ்க வளமுடன் என ஆசிர்வதிக்கலாம்.
அழகுத் தமிழில் அழகான வார்த்தைகளுக்கா பஞ்சம்? உங்களுக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ அதை மற்றவர்களுக்கு ஆசியாக கொடுங்கள். அது அவர்களுக்கும் கிடைக்கும். உங்களுக்கும் அது திரும்ப கிடைக்கும். (பூமாராங் மாதிரி நீங்கள் கொடுக்கும் நேர்மறையான மகிழ்ச்சியான ஆசி உங்களுக்கும் திரும்ப... கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.)
மகிழ்வுடன் வாழ்க! என வாழ்த்துவதால் பிரபஞ்ச சக்தி அந்த வார்த்தைகளை உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் நலமாக வாழ வைக்கிறது என்பது அனுபவ உண்மை. (ஸ்ரீ கிருஷ்ண மந்திர உச்சாடனம், ஆராதனை எல்லாமே பகவானுக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்து தான் என இந்துமதம் மறைப்பொருளாக உணர்த்துகிறது.
எனவே இனிமேலாவது காலில் விழுவது தவறல்ல... காலில் விழுந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதென்பது... நம்மையும் நம் சந்ததியினரையும் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் வாழவைக்கும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
ஆசிர்வாதம் பெறுங்கள்; நீங்களும் மனமுவந்து நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து ஆசீர்வதியுங்கள்.