காதலுக்கு கை தேவையில்லை... உன்னத காதல் கதை!

காதலுக்கு கை தேவையில்லை... உன்னத காதல் கதை!

2015 அக்டோபர் 12 ல் சந்தித்தோம் 22 ல் ஆக்ஸிடண்ட் ஆனது. இவனுக்கு கை வலது கை மணிக்கட்டோடு சேர்ந்து துண்டாகி விட்டது. அதன் பிறகு தான் எங்களுக்குள் காதலே மலர்ந்தது.

ஆவடி ரயில்வே ஸ்டேஷனில் வைத்து வெறுமே ஒரு பொது நண்பன் மூலமாகத்தான் எங்களுக்குள் அறிமுகம் ஆனது. சும்மா பேசிக் கொண்டோம். ஸ்கூல் பையன் போல இருக்கிறானே என்று தான் முதலில் நினைத்தேன். இவனைக் கலாய்த்தேன்…

சிரிப்புடன் நிஜமும், நிதர்சனமும் பகிர்கிறார் சீதளா…

இவரது காதல் கணவர் கோகுல்.

7 ஆண்டுகள் தீவிர காதலுக்குப் பின் இருவருக்கும் சமீபமாகத்தான் திருமணம் நடந்திருக்கிறது.

இவர்களது காதலில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று பலருக்கும் தோன்றலாம். கை துண்டான ஒரு இளைஞனை இந்தக் காலத்து இளம்பெண் ஒருவர் எவ்வித உறுத்தலும் இன்றி காதல் திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சர்யமான விஷயம் தானே! இதெல்லாம் நிஜம் தானா?!

சினிமாக்களில் வேண்டுமானாலும் இப்படியெல்லாம் நடப்பதாகக் காட்டுவார்கள். நிஜத்தில் இப்படி ஒரு தெளிவான, மெச்சூர்டான காதலா? என்று யோசிக்கிறீர்கள் இல்லையா?

இது நிஜமாக நடந்த சம்பவம் தான்.

சில வருடங்களுக்கு முன்பு தனது கல்லூரிப் பருவத்தில் கோகுல் குடும்பச் சூழல் காரணமாக மசாலாக் கம்பெனி ஒன்றில் பார்ட் டைமாக வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு விபத்தில் மசாலா கம்பெனி இயந்திரத்தில் சிக்கி அவரது வலது கை மணிக்கட்டிற்கு மேல் பகுதியில் இருந்து துண்டாக கட் ஆகியிருக்கிறது. அடுத்த வாரம் செமஸ்டர் பரீட்சை வருகிறது என்கிற பதை பதைப்பில் இருந்த கோகுலுக்கு அடந்த இந்த விபத்து மிகவும் பயங்கரமானது. சாதாரண மனநிலை கொண்டவர்கள் எனில் இந்த விபத்து அவர்களது எதிர்கால வாழ்வையே நிர்மூலமாக்கி இழந்ததை நினைத்து நினைத்து நொந்து முற்றிலும் நடைபிணமாகியிருப்பார்கள்.

ஆனால் கோகுல் அப்படி இருந்து விடவில்லை. இழப்பு குறித்த ஆரம்ப கட்ட மன உளைச்சல்களும், பரிதவிப்புகளும், பயங்களும் இவருக்கும் நிறையவே இருந்திருக்கின்றன. ஆனால், இது முடிவல்லவே, வாழ்க்கை இன்னும் மீதமிருக்கிறதே. அப்போது எல்லாவற்றுக்கும் யாரையாவது சார்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது நரகமல்லவா?

எனவே தனக்குத் தேவையானவற்றை ஒற்றைக் கையையும், குறைபட்ட மற்றொரு கையையும் கொண்டு எப்படித் திறன் படச் செய்வது என்று பயிற்சி எடுத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார். ஸ்கூட்டி பெப்பை நண்பர் ஸ்டார்ட் செய்து கொடுத்தால் ப்ரேக் மூலமாகவே அதை அட்ஜஸ்ட் செய்து பாதுகாப்பாக ஓட்டிச் செல்லும் அளவுக்கு கோகுல் இப்போது திறமைசாலி.

நடுவில் வராது வந்த மாமணியாய் சீதளாவின் அப்பழுக்கற்ற காதல் அவரை மேலும் தனது இழப்பிலிருந்து மீட்டெடுக்க உதவி இருக்கிறது.

இவர்களது காதல் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு முகிழவில்லை என்பதால், ஆரம்பம் முதலே மனதால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒத்த மனதை மேலும் கிட்ட நெருங்க வைக்க முகநூல் உதவியது என்கிறார்கள் இருவருமே.

விபத்தின் பின் இப்போது வரையிலும் கூட தன்னை ஒரு ஸ்பெஷல் கேர் கொண்டு தன் மனைவி அணுகாதது மட்டுமே தன்னை இந்த உலகில் தானுமொரு நார்மல் மனிதனே, கையை இழந்ததால் தனக்கு ஸ்பெஷல் அனுதாபம் எல்லாம் தேவையே இல்லை. ஒரு கை போய் விட்டது அதனால் என்ன? அது இல்லாமலும் கூட இந்த வாழ்க்கையை என்னால் எப்போதும் போல எதிர்கொள்ள முடியும். எதிர்கொண்டாக வேண்டும் எனும் மன உறுதியைத் தனது காதல் மனைவியின் அணுகுமுறையும் கூடத் தனக்குக் கற்றுத் தந்ததாகக் கூறுகிறார் கோகுல்.

அடுத்த ஜென்மம் என்று வந்தாலும் கூட நான் உன்னையே மணக்க வேண்டும் எனும் உறுதிமொழி கவிதை வாசிக்கும் இவர்கள் இன்றைய காதலர்களுக்கு இனிமேல் காதலிக்கப் போகிறவர்களுக்கும் கூட மிகச்சிறந்த முன்னுதாரணக் காதலர்கள்… தம்பதிகள் என்றால் அது மிகையில்லை.

இவர்களது கதையை இணையம் மூலமாகத் தெரிந்து கொண்ட பலரும் இவர்கலது காணொளி பேட்டி வெளியிடப்பட்டுள்ள தளத்துக்குச் சென்று ‘இதல்லவோ உண்மைக் காதல்’ இப்படி ஒரு மனைவி அமைய நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும் தம்பி’ என்றெல்லாம் புகழ்ந்தும் இவர்களை இந்தக் காதலர் தின சிறப்புத் தம்பதிகளாய் கருதி வாழ்த்துக்களைப் பகிர்ந்தும் வருகிறார்கள்.

சீதளாவிற்கு, கோகுலின் கை இழப்பு பெரிதாய் படவில்லை. அவரது மன உறுதியும், கலகலப்புமே காதலுக்கான மிகப்பெரிய காரணங்களாய் அமைந்து விட்டன.

இதல்லவோ காதல்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com