மதுரகாளிக்கு மாவிளக்கு!

மதுரகாளிக்கு மாவிளக்கு!

மாமதுரையினைத் தீப்பற்றி எரிந்திட வைத்த கண்ணகி தான், சற்றே கோபம் தணிந்தவளாக அதுவும் மதுரகாளியம்மனாக மாற்றுருவம் கொண்டு வீற்றிருக்கிறாள் என்று திருக்கோயில் தல வரலாறு கூறுகிறது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளாள் மதுரகாளியம்மன். ஒரு காலத்தில் கோயிலுக்கு சற்று தூரத்தில் சிறு மலைதனில் செல்லியம்மன் வீற்றிருந்திருக்கிறாள். அங்கிருந்த ஒரு மந்திரவாதி, செல்லியம்மனுக்கே பில்லி சூனியம் வைத்து செல்லியம்மனை அடக்கி ஆண்டு வந்துள்ளான். அந்த மந்திரவாதியின் தலையினக் கண்ணகியேக் கொய்து எடுத்து வந்து பலியிட்டு, செல்லியம்மனைக் காக்கிறாள். அதன் பின்னர் அந்த மலையடிவாரத்தில் இருந்து சற்றுத் தள்ளி வந்து, கண்ணகியானவள் மாற்றுருவம் கொண்டு மதுரகாளியாக வந்தமர்கிறாள். மதுரகாளியம்மனாகக் கோயில் கொள்கிறாள்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு முன்னதாக, சாலையில் இருந்து விலகி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சிறுவாச்சூர் கிராமம். அங்கு பெரிய திடல் ஒன்றில் அமைந்துள்ளது மதுரகாளியம்மன் திருக்கோயில்.

வடக்கு திசை நோக்கி திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. கருவறையில் மதுரகாளியம்மன் வடக்கு திசை நோக்கியே சாந்தமாக வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்களுடன் வலது கால் மடித்து வைத்து, இடது காலினைத் தொங்க விட்டு முற்றிலும் சாந்த சொரூபியாக எழுந்தருளி இருக்கிறாள். திருக்கோயிலின் உள்ளே கருவறைக்கு கிழக்கே ஒரு நீண்ட மண்டபமும். மேற்கே ஒரு மண்டபமும் அமைந்துள்ளன. இதில் கிழக்கு புற மண்டபத்தில் ஆங்காங்கு உரல்களும் உலக்கைகளும் உள்ளன. அதுவும் பத்துப் பதினைந்து உரல்கள் உலக்கைகள் இருக்கும். இவைகள் எதற்காகவாம்?

துரகாளியம்மனுக்கு மிகச் சிறப்பான வேண்டுதலும் வழிபாடும், மாவிளக்குப் படையலிட்டு வணங்குவது தானாம். பக்தர்களின் வசதிகளுக்காகவே இத்தகைய ஏற்பாடுகள் அங்கு அமையப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது. பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம். கோயிலுக்கு வந்திருக்கும் பெண்களில் பலரும், மாவிளக்குக்காக ஆங்காங்கு உரல்களில் மாவு இடித்துக் கொண்டிருந்தனர். ஒரு உரலுக்கு மூன்று பெண்கள் என இருந்தனர்.

உரலில் போட்டிருக்கும் பச்சரிசியினை உலக்கையால் ஒரு பெண், உலக்கையினைத் தூக்கித் தூக்கிப் போட்டு இடிக்கிறார். அப்போது உரலுக்கு வெளியே சிதறும் அரிசியினையும் மாவினையும் இரண்டு பெண்கள் உரலின் உள்ளே தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டே இருக்கின்றனர். நைஸ் பதமாக மாவு இடிக்கப்பட்ட பின்னர், சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்கின்றனர். வெல்லப்பாகு, தேங்காய்த் துருவல், ஏலக்காய் போன்றவைகளை அந்தப் பச்சரிசி மாவுடன் இட்டுப் பிசைந்து மாவிளக்கு உருண்டை பிடிக்கின்றனர். அதன் மேலே குங்குமப் போட்டு வைக்கின்றனர். மாவிளக்கு உருண்டையின் மேலே நடுவில் சிறு பள்ளமிட்டு அதனுள்ளே எண்ணெய் ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்றி, மதுரகாளியம்மன் சந்நிதியில் வைத்து வழிபடுகின்றனர்.

இதற்கென பெண்கள் தங்கள் ஊரில் இருந்து வரும் போதே பச்சரிசி, தேங்காய், வெல்லம், ஏலக்காய் போன்றவைகளைக் கொண்டு வந்து விடுகின்றனர்.

“திருக்கோயில் வார நாட்களில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே நடை திறந்திருக்கும். மாதத்தில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே கோயில் நடை திறந்திருக்கும். காலை ஆறரை மணிக்கு நடை திறக்கப்படும். மதியம் கோயில் நடை சாத்தப்படுவது இல்லை. இரவு ஒன்பதரை மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

பூசாரி மன்னாதி
பூசாரி மன்னாதி

மிகவும் சக்தி வாய்ந்தவள் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன். பில்லி சூனியம் ஏவல் போன்ற மந்திர செய்வினை களினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்வார்கள். பில்லி சூனியம் ஏவல் போன்றவைகள் அவர்களை விட்டு அகன்றோடி விடும். அதுபோல காத்துக் கருப்பும் எவருக்கும் அண்டாது. அதுமட்டுமல்லாது வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் தந்து காத்து வருபவள் இந்த சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்.” என்கிறார் கோயிலின் பூசாரி மன்னாதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com