மார்கழி அலப்பறைகள்... நாஸ்டால்ஜியா

மார்கழி அலப்பறைகள்... நாஸ்டால்ஜியா

‘காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை...’

கவியரசரின் அழகான வரிகளில் மறக்க முடியாத பாடல் - பி பி எஸ் அவர்களின் திரை இசை வாழ்க்கையில் மணிமகுடம் பதித்த பாடல்களில் ஒன்று. ஒரு பெண்ணை மனதில் நினைத்து மிக அருமையாக வர்ணித்து பாடிய பாடல். படம் பாவமன்னிப்பு!

*************

தெய்வீகமும் கலை நயமும் கைகோர்த்து உள்ளத்தை உற்சாக ஊஞ்சலில் ஆடவைக்கும் மாதம் மார்கழிதான். மார்கழியில் வரும் பண்டிகைகளில் நைவேத்தி யங்களைத் தயாரித்து கடவுளுக்குப் படைத்து குடும்பம், உறவு, நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பகிர்ந்து அளித்து, அவர்களின் பாராட்டுகளைப் பெற்றதை மறக்க முடியுமா? மறுக்கத்தான் முடியுமா??

மார்கழி வந்தாலே என் நான்கு சகோதரிகளும் அவரவர் கற்பனை செய்த காட்சிகளைப் பூமியின்மேல் அழகாய் தூவுவர் அசத்தலான கோலங்களாக. ஒவ்வொன்றும் ஒரு அழகிய கவிதை என்றே சொல்லலாம்.

* ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதோ, அதேபோல்தான் புள்ளிகள் வைத்து கோலம் போடுவது என்று புள்ளிகள் அதிகம் வைத்து, வளைவுகளை அதிகமாக்கி கோலம் போடும் சகோதரி... அழகாய் அர்த்தம் சொல்வார்.

சிக்கிய புள்ளிகளில் வரைந்தகோலம் சொக்கிட வைக்கும்.

* ஓவிய ஆசிரியர் திரு. வர்ணம் அவர்களிடம் ஓவியம் கற்றுக்கொண்ட சகோதரியோ பெரும்பாலும் அச்சு அசலாய் உருவங்களைப் பிரதிபலிக்கும் கோலங்களை வாசலில் போடுவார். உதாரணத்துக்கு அவர் மயில் கோலமிட்டால் மயில் தோகை விரித்து ஆடும். சிங்கத்தை வரைந்தால் கம்பீரமா கர்ஜனை செய்யும்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணை வரைந்தால் போதும்...(அக்கா..நீயே சிறிது நேரம் வாசலில் உட்காரு போதும் என்று நான் சொல்வதுண்டு) அவ்வளவு தத்ரூபமாக இருப்பாள்… பாரதி கண்ட புதுமைப்பெண் அக்காவைப் போலவே!

* இன்னொரு சகோதரி சிலந்தி வலை பின்னுவது போல் அழகாய் போடுவார் ரங்கோலி. கோலம் போடுவது என்பதே ஒரு கலை. அதிலும் ரங்கோலி போடுவது என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மனதை ஒருமுகப் படுத்தும் சிறந்த பயிற்சி. கோலத்தின் கோடுகளைத் தாறுமாறாக வளரவிடாது, நெறிப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி வரையப்படும் ரங்கோலி அக்காவின் கைவிரல்களால் மின்னும். ரங்கோலி கோலம் ஒரு வரைகலை வெளிப்பாடு.

பவானி ஜமுக்காளத்தை ரங்கோலியாக வரைவாள் பாருங்கள், அப்படியே படுத்துக் கொள்ளலாம் போல் இருக்கும்.

* ன் இன்னொரு சகோதரி செம்பருத்தி, பவழமல்லி, மனோரஞ்சிதம், ஊதாப்பூ, தாழம்பூ இப்படி மனம் மகிழ, மணம் பரப்பும் பூக்களை கோலங்களில் பூக்க வைப்பார். இறைவன், அவருக்கு தேவையான பூக்களை வாசலில் வந்து எடுத்து கொள்ளலாம் போல இருக்கும் அவரது கோலங்கள். அவரது பூக்கோலம், பொறுமையின் அருமையையும், முழுமையின் பெருமையும், திறமையின் புதுமையையும், எடுத்துச் சொல்வதாக இருக்கும். இவர்கள் எல்லாம் இவ்வளவு அழகாய் கோலம் போடுவதற்கு என் அம்மாதான் காரணம்.

அம்மாவின் 'கோலங்களோ மாயாஜாலங்கள்' செய்யும்.

ருட சேவையின் பொழுது அம்மா வாசலில் போடும் கோலத்தை பார்ப்பதற்காகவே ரங்கமன்னார்... எங்கள் வீட்டு வாசலில் கூடுதல் நேரம் நிற்பார். வாசல் முழுவதும் மறைக்கப்பட்டு மிதிக்காமல் நடக்க, பழகிக்கொள்வதன் அவசியத்தை அம்மாவின் கோலம் புரியவைக்கும்.

கோலம் முடித்த கையோடு குளித்துவிட்டு பக்தி பழமாக கோயிலுக்குச் சென்று (பெருமாள் கோயிலில் இருந்து இரண்டாவது வீடு எங்கள் வீடு) திருப்பாவை, திருவெம்பாவையை மனப்பாடமாக சத்தம் போட்டு ராகமாக பாடிவிட்டு சுவாமியை வணங்கி கோயில்களில் சுடச்சுட விநியோகிக்கப்படும் வெண்பொங்கலை கையில் வாங்கிக்கொண்டு வர... (தொண்ணை சில சமயம்) உள்ளங்கை அப்படியே சிவந்து விடும். நெய் ஒழுக ஒழுக முந்திரி மினுமினுக்க, மிளகு சீரகம் கண் சிமிட்ட சாப்பிட்டதெல்லாம் அழகான கனாக்காலம். (என்னதான் சொல்லுங்கள்...சுடச் சுட கோயில்களில் விடியற் காலையில் விநியோகிக்கப்படும் வெண் பொங்கல்/ சர்க்கரை பொங்கலுக்கு உள்ள ருசியே தனிதான்)

இவ்வளவு சொல்லிவிட்டு டிசம்பர் பூக்களை சொல்லாமல் விடுவதா?

மார்கழியில் டிசம்பர் பூக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. தினம் ஒரு நிறத்தில் டிசம்பர் பூ வைத்து சென்றதெல்லாம்... இரட்டை ஜடை பின்னி இரண்டு ஜடையையும் மடித்து கட்டி இந்த ஜடையிலிருந்து அந்த ஜடைக்கு ஒரு பாலம் போல தினம் ஒரு நிறத்தில் அடர்த்தியாக கட்டிய டிசம்பர் பூக்களைத் தொங்க விட்டு சென்றதெல்லாம் கவிதை போங்கள்...

அதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்...

பி.கு: இவ்வளவு எழுதிவிட்டு மார்கழி நைவேத்தியங்கள் ஏதாவது எழுதி இருக்கலாமே... என்று நீங்கள் கேட்பது (சொல்வது) காதில் விழுகிறது. எழுதிவிட்டால் போச்சு அடுத்த பதிவில்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com