ஆன்லைன் மோசடியில் பணம் மீட்பு.

ஆன்லைன் மோசடியில் பணம் மீட்பு.

ன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையும் சைபர் கிரைமும் எவ்வளவு எச்சரிக்கைகள் தந்தாலும் சரியான விழிப்புணர்வு இல்லாமல் பணத்தை இழந்து வருத்தப்படுகின்றனர் பலர். இதில் படிக்காதவர்களை விட படித்தவர்களே அதிக அளவில் ஏமாறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடந்த ஒரு சம்பவத்தில் ஒருவர் இழந்த பணத்தை மீட்டுத்தந்து பாராட்டுகளை பெற்றுள்ளனர் சேலம் சைபர்கிரைம் போலீசார்.

     சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார், கடந்த 14 ந்தேதி இவரது செல்போனுக்கு உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது; எனவே உங்களுக்கு அனுப்பியுள்ள லிங்கில் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது.

       சற்றும் யோசிக்காமல் முருகேசன் தன் வங்கிக் கணக்கு விவரங்களை அந்த எண்ணுக்கு அனுப்பியுள்ளார். அனுப்பிய சிறிது நேரத்தில் அவரது கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக வங்கியிலிருந்து குறுந்தகவல் வந்துள்ளது.

         இதைப் பார்த்ததும் அதிர்ச்சியான முருகேசன் இது குறித்து சேலம் மாநகர சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசனின் வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக எடுக்கப்பட்ட பணம் தனியார் வங்கிக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

        உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் சட்டப்பிரிவைத் தொடர்பு கொண்ட சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் மோசடி விபரங்களைக் கூறி அந்தப் பணத்தை உரியவருக்கு திரும்பக் கிடைக்கும்படி செய்யக் கோரியது. இதன் மீதான நடவடிக்கையில் அந்த வங்கியிலிருந்து ரூபாய் 99, 978 மீட்கப்பட்டு முருகேசனின் வங்கியில் சேர்க்கப்பட்டது. மேலும் மோசடியில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தன் கவனக்குறைவுக்கு  வருந்திய முருகேசன் துரிதமாக செயல்பட்டு பணத்தை திரும்பக் கிடைக்க உதவிய சைபர்கிரைம் போலீசாருக்கு நன்றி சொன்னார்.

இவர் மட்டுமல்ல நகரமெங்கும் இன்னும் பலர் இவரைப்போல் பணத்தை இழந்து அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு சில சந்தர்ப்பங்களில் குற்றவாளி கண்டு பிடிக்கப் பட்டு பணம் மீட்கப்படுகிறது. பல வழக்குகள் இன்னும் நிலுவையிலே உள்ளன. இந்த சம்பவத்தில் முருகேசன் குறுஞ்செய்தி வந்ததும் பதட்டப்படாமல் தன் வங்கியை அணுகி உண்மையா என்று விசாரித்திருந்தால் இவ்வளவு அலைச்சல்கள் இருந்திருக்காது. யாரென்றே தெரியாமல் வரும் குறுஞ்செய்திகளை உண்மையென்று நம்புவதை முதலில் தவிர்க்க, வேண்டும். வங்கி விவரங்களை யாரேனும் கேட்டால் உடனே தராமல் நன்கு விசாரித்துப் பின்பே அவசியமென்றால் மட்டுமே தரவேண்டும். இது போன்ற ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க, நாம் ஏமாளிகளாக இல்லாமல் எச்சரிக்கையாக இருப்பதுதான் சிறந்த வழி.  

எத்தனை காலம்தான் ஏமா(ற்று)றுவார்கள்..?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com