தாய்மையைப் போற்றும் தினம்!

அன்னையர் தினம் -  மே - 14
தாய்மையைப் போற்றும் தினம்!

வ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தன்னுடைய குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய் செய்யும் தியாகம், பரிவு, குழந்தையிடம் அவர் காட்டுகின்ற எதிர் பார்ப்பில்லாத அன்பு ஆகியவற்றை நினைவு கூறும் தினமாக இந்த நாள் கொண்டாடப் படுகின்றது, ஒரு பெண் தாயாய், சகோதரியாய், உற்ற தோழியாய், மனைவியாய் பற்பல அவதாரங்களை எடுக்கின்றாள்.

வாழ்க்கை என்ற தண்டவாளத்தில் குடும்பம் என்ற வண்டி பாதை மாறாமல் சீராக ஓடுவதற்கு அன்னையின் பங்கு அளவிட முடியாதது. இன்றைய சமுதாயச் சூழலில் பெண்கள் பணிக்குச் செல்வது இன்றியமையாத தேவையாகிவிட்டது. குடும்ப பாரத்துடன், வேலைப் பளுவையும் சேர்த்து சுமக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு.

முதன் முதலில், அன்னையர் தினம், அமெரிக்காவில் 1908ஆம் வருடம், கொண்டாடப்பட்டது. அன்னா ஜார்விஸ் என்ற பெண் அவளுடைய தாய்க்காக சர்ச்சில் ஒரு நினைவுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தினாள். இந்தப் பெண்மணி 1905ஆம் வருடம் முதல் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததுடன், அந்த நாள் பொது விடுமுறை நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள். 1911ஆம் வருடம் முதல் அமெரிக்காவில் அன்னையர் தினம் பொது விடுமுறை நாளானது. 1941ஆம் வருடம், அன்றைய அமெரிக்க அதிபர் வுட்ரூ வில்சன், மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்படும் என்று பிரகடனம் செய்து அந்த நாளை பொது விடுமுறை நாளாகவும் அறிவித்தார்.

அன்னா ஜார்விஸ்
அன்னா ஜார்விஸ்

குடும்பத்தில் பல உறவு முறைகள் இருக்கும்போது அன்னைக்கு மட்டும் எதற்கு ஒரு சிறப்பு நாள் என்ற கேள்வி எழுந்தது.  ஆகவே இந்த தினம் தாயைப் பற்றி மட்டுமல்ல, தாய்மையைப் போற்றும் தினமாகவும் கருதப்படுகிறது.

பெரும்பாலான மேலை நாடுகளில் கூட்டுக் குடும்பங்கள் பழக்கத்தில் இல்லை. வயது வந்த ஆணும், பெண்ணும், படிப்பு முடிந்த பின், தத்தம் தனி வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். அவர்கள் விருப்படியான வாழ்வு, கல்யாணம் என்று பெற்றோரின் தலையீடு இல்லாமல் வாழ்கின்ற தன்மை. வயதான பெற்றோர் தனிமையில். ஆகவே பெற்றோர்களிடம் சேர்ந்து ஒரு சில நாட்கள் அல்லது சில மணி நேரங்கள் இருக்க அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவை அவசியமாகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை கூட்டுக் குடும்பங்கள். வயதான பெற்றோர் மகன் அல்லது மகளுடன் வசிக்கின்றனர். ஆகவே அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவையின் தேவை சிறிதளவே. இருப்பினும் இந்த நாட்களில் அவர்களுக்குப் பிடித்தவற்றைச் செய்வதோ பிடித்த பொருளை வாங்கித் தருவதோ நல்ல செய்கையாகும்.

கூட்டுக் குடும்பங்கள் என்ற நிலை நம் நாட்டிலும் மாறி வருகிறது. மகன் அல்லது மகள் வெளி நாட்டிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ வேலை நிமித்தமாகப் புலம் பெயர்ந்து செல்லும் போது, பெற்றோர்கள் தனிமையில் இருக்க நேரிடுகிறது அல்லது முதியோர் இல்லம் செல்கின்றனர்.

நாம், நாடு, மொழி எல்லாவற்றையும் தாயாகப் பார்க்கின்றோம். நாட்டைத் தாய்நாடு, பாரதமாதா என்கிறோம். தமிழ் மொழியை “தமிழ் தாய்” என்கிறோம். நம்முடைய மதத்தில் பெண் தெய்வங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களுக்கான பண்டிகைகளும் அதிகம். பெண்களைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் என்று நமது சமய நூல்களும் அறிவுறுத்துகின்றன. இருப்பினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

தமிழ் மொழி தமிழ் பேசுபவர்களின் தாய் என்றால் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுபவர்களுக்கு அவரவர்களுடைய மொழி தாயல்லவா? என்னுடைய தாயின் மீது அன்பு செலுத்தும் நான் மற்றவர்களின் தாய்க்கு மரியாதை செலுத்த வேண்டும் அல்லவா?  நம்முடைய தாய் மொழியைப் போற்றுவோம். அதே நேரத்திம் மற்றவர்களின் தாய் மொழியையும் மதிக்கக் கற்றுக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com