மூக்கும் முழியுமாக !

மூக்கும் முழியுமாக !

ஒருவரின் முகத்திற்கு கம்பீரம் அளிப்பது எதுவாக இருக்கும் என நினைக்கிறீர்கள் ? கண்களா செவிகளா வாயா அல்லது கன்னங்களா ? இவை எதுவுமில்லை ! மூக்கு தான் அந்தப் பெருமையை அடைகிறது ! முகத்தில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் மூக்குதான் முகத்துக்கே பொலிவைத்தருகிறது. நெற்றியின்நடுவே இரு புருவங்களுக்கு மத்தியில் தொடங்கி வாய்க்கு மேலே வந்து முடியும் மூக்கின் கம்பீரம் தனிதான். கண்ணில் பிரச்சினை என்று  அணியும் கண்ணாடியை மூக்கு தாங்குகிறது அதனாலெயே மூக்குக் கண்ணாடி என்று பெயர் பெற்றுவிட்டது ! உலகப்பேரழகி கிளியோபாட்ரா என்றதுமே அந்த அழகிய நாசிதானே முதலில் நினைவுக்கு வருகிறது !கருடபுராணம் என்னும் பழைய நூல் சொல்கிறது நீண்ட நாசி உள்ளமனிதர்கள் அதிர்ஷ்டக்காரர்களாம் !

'மகாகவி வால்மீகி' தனது ராமாயணத்தில் ராமனின் அங்கங்களை வர்ணிக்கும்போது மூக்கையும் வர்ணிக்கிறார். சுனாசிகா என்று. அதாவது அழகிய நாசி என்று! அனுமனுக்கு தாமிரசிவப்பில் சுந்தரமான நாசியாம் ! இதையும் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடுவார். சூர்ப்பனை மூக்கறுபடலம் ராமாயணத்தில் முக்கியமான ஒன்று. ராமனை விரும்பி தன் ஆசையை அவள் சொல்லும் போது லஷ்மணன் கொதிப்படைந்து அவள் மூக்கினைதான் முதலில் வெட்டுகிறான்! மூக்கறுபட்ட தங்கை நிலைகண்டு இரக்கப்பட்டதை விடவும் அவள் வாயினால் சீதாவின் அழகினைக் கேட்டதும் தான் ராவணனுக்கு சீதாதேவியைக் கவர்ந்துவர தோன்றுகிறது.

ஓவியர்களுக்கு கண் காது உதடுகள் வரைவதில் பிரச்சினை இருக்காது நாசி வரையும் போது தான் தூரிகையில் அவர்கள் கவனம் அதிகமாகும் ! கழுகு கருடன் போன்ற பறவைகளை நினைக்கும்போதே அந்த மூக்குகள் கண்முன் பிரும்மாண்டமாகும். கிளி மூக்கு அழகாக இருக்கும். சற்றே முன்பக்கம் வளைந்த மூக்கு முகத்துக்கு எடுப்பாக இருக்கும். மூக்கும் முழியுமாக இருந்தால் ஒருவர் அழகாக இருப்பதாக் சொல்கிறோம் ! முழியும் மூக்குமாக என்று சொல்வதில்லை, இங்கே கூட மூக்குதான் முதன்மையாய் வருகிறது ! பெண்கள் காதில் அணியும் நகைக்கு காதுப்பொட்டு என்றோ காதுக்குத்தி என்றோ பெயரில்லை மூக்கில் அணிந்தால் மூக்குத்தியாம் மூக்குப்பொட்டாம் ! அதிலும் எட்டுக் கல்லு பேசரி அணிந்தால் எடுப்பாயிருக்கும் மூக்கு, என்கிறார் கவிஞர் ! மூக்கு அமைப்பில் தான் ஒருவர் முகமே வேறுபாடுகிறது அல்லவா?

ஜப்பானியர்கள் மற்றும் சீனர்களை மூக்கைப்பார்த்தே பெரும்பாலும் நாம் அடையாளம் தெரிந்து கொண்டு விடுகிறோம். ஆனாலும் பாருங்கள், நீரின்றி அமையாது உலகுபோல நாசியின்றி இயங்காது உடம்பு ஆமாம் ஒருவர் இறந்தால் மூச்சடங்கிவிட்டது என்கிறோம். அதை உறுதி செய்துகொள்ள விரல்களை மூக்கின் கீழே தான் வைத்துப் பார்க்கிறோம். பிராணவாயு எனும் மூச்சுக்கு உதவும் காற்றினை மூக்கு வழியாக உடலுக்கு செலுத்துகிறது. தியானத்துக்கு மூக்குதான் அவசியம்.

பிராணாயாமம் செய்ய, வாசனைகளை நுகர, கோபம் வந்தால் (மூக்குக்குமேல் கோபம்) என்று மூக்கின் பயன்பாடுகள் அதிகம் இருக்க  நாம் எந்த விஷயத்திலாவது தலையிட்டால் 'உன் மூக்கை நுழைக்காதே’ என்று அதட்டுகிறார்கள். நம்மால் மூக்குக்கு கெட்டபெயர் பாருங்கள் !யாரையாவது மட்டம்தட்ட வேண்டுமானல் 'நல்ல நோஸ்கட் கொடுத்தேன்' என்கிறார்கள். நாமும் எந்தவிஷயத்திலாவது நுழைந்து தோற்றால் 'மூக்கறுபட்டோம்' என்கிறோம் ! எப்படியோ போங்கள் மூக்கு விஷயம் மேலும் எழுதிக்கொண்டேபோனால் மூக்கின்மேல் விரலை வைத்து நீங்கள் வியக்கலாமோ என்னவோ...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com