சாதனைப் பொற்கொல்லர் முத்துக்குமார்!

சாதனைப் பொற்கொல்லர் முத்துக்குமார்!

குண்டுமணி தங்கத்தில் என்ன செய்ய முடியும்? என்று கேட்பவர்களுக்குச் சவால் விடும் வகையில் குறைந்த அளவில் தங்கத்தில் பல்வேறு விதமாக பிரமிக்க வைக்கும் கலைப்பொருட்களை உருவாக்கி வரும் சிதம்பரத்தை சேர்ந்த முத்துக்குமார் அவர்கள் பற்றி தெரியவந்து, அவரது நகைக்கடையில் பரபரப்பான சூழ்நிலையில்  பணியாற்றிக்கொண்டிருந்த அவரிடம் பேச முற்பட்டபோது,

 “சார் வணக்கம். நாளைக்கு காலையில வீட்டுக்கு  வந்துட்டீங்கன்னா பரபரப்பு இல்லாமல் பேசலாம்...” என தொழிலில் மும்முரமாக இருந்த முத்துக்குமாரை தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் மறுநாள் காலை அவர் வீட்டுக்குச் சென்றோம். “வாங்க சார் வாங்க” என அழைத்து, அமர வைத்து உபசரித்தார்.

 முத்துக்குமார் சார்! உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்களேன்.

“என் பேரு முத்துக்குமரன். நான் சிதம்பரத்தில் வசித்து வருகிறேன்.  எனது அப்பா பெயர் ஜெயபால் பத்தர். மனைவி மற்றும் இரு குழந்தைகள். நான் கடந்த
28 ஆண்டுகளாக எனது பாரம்பரியமான பொற்கொல்லர் நகைத் தொழிலைச் செஞ்சிகிட்டு இருக்கேன்.” - ஒரு சாதனையாளர் சாதாரணமாகத் தன்னைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.

குறைந்த அளவு தங்கத்தைக் கொண்டு இப்படி அசத்தலா கலைப் பொருள்கள் பண்றீங்க. இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தோணுச்சு?

“குறைந்த எடையில் கலைப் பொருள்கள் செய்வது எனக்கு யதேச்சையாக நடந்தது. எனது ஓய்வு நேரங்களில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சித்தேன்.  முதல் முதலில் 090 மில்லி கிராமில் திருமாங்கல்யம் செய்தேன். பொதுவாக திருமாங்கல்யம் கம்மி எடை என்றால் ஒரு கிராமில் செய்வார்கள். நான் செய்த திருமாங்கல்யம், ஒரு கிராமிற்கு 11 செய்யலாம். முதலில் திருமாங்கல்யம் செய்தபொழுது நிருபர்களை அழைத்து விவரங்களைக் கூறினேன். அவர்கள் எனக்கு உற்றத் துணையாக இருந்து செய்திகள் வெளியிட்டது எனக்கு மிகப்பெரிய உற்சாகம் அளித்தது.”

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

உங்களுடைய சாதனையைப் பற்றி உங்கள் மனைவி, பிள்ளைகள் என்ன கூறுவார்கள்?

“கண்டிப்பாக... இதுபோல் நாம் சில சாதனைகள் செய்ய வேண்டுமென்றால் சில நிகழ்ச்சிகளை, உடல் நலத்தை இழந்து ஆக வேண்டும். பொதுவாக நேரம் நமக்கு வந்து நிறையாக செலவாகும். அப்படி பொழுது இதை போல் செய்யும் என் மனைவி மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் கண்டிப்பாக என்னை ஊக்கம்தான் படுத்துறாங்க. அடுத்தது என்ன செய்ய போறீங்க என்ன ஏதுன்னு உற்சாகப்படுத்துவாங்க. நானும் இதபோல ஒரு பொருளைச் செஞ்சதுக்கு அப்புறம் என்னோட மனைவி மற்றும் சில நண்பர்களிடம் காட்டுவேன். அவங்க சில ஆலோசனைகள் சொல்லுவாங்க. நமக்கு வந்து சில ஐடியாக்கள் இருக்கும். இன்னும் ஒருத்தவங்களுக்கு வேறு ஒரு ஐடியா தோணும்.  அதுக்கு தகுந்தார் போல் நானும் சில மாற்றங்கள் செய்வேன்.”

பயிற்சி பட்டறை ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா முத்துகுமார்?

“பயிற்சி பட்டறை என்பதை விட நமக்கு ஆக்கமும் ஊக்கமும் இருந்தால் கண்டிப்பாகச் சாதனைகள் செய்யலாம். சொல்லிக் கொடுத்து இதெல்லாம் வராது. எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்கவில்லை. கடவுளோடு அனுகிரகமும் நமது முழு முயற்சியும் தேவை. எதிர்காலத்தில் பயிற்சி பட்டறை ஆரம்பிக்கிற வாய்ப்பு வந்தா, கண்டிப்பா நான் பல பேருக்கு இக்கலையைச் சொல்லிக் கொடுப்பேன்.”

நீங்கள் பொற்கொல்லர். உங்களிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்… நகைக் கடைகளில் விதிக்கப்படும் கூலி சேதாரம் சரியா?

“அருமையான கேள்வி. கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. தங்கத்துக்கு செய்கூலி சேதாரம் ஏன் எதற்காக ஒதுக்கப்படுகிறது. பொதுவாகவே மக்கள் அனைவரும் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு துணிக்கடையில் சட்டைக்காக இரண்டு மீட்டர் துணி வாங்குகிறோம். அந்தச் சட்டை அப்படியே போட்டுக்கொள்ள முடியாது. தையல்காரிடம் கொடுத்து தைக்க வேண்டும். அதற்கு கூலி என்று வாங்குவார்கள்.

தையல் கூலியைச் சேர்க்கும்போது, அந்தச் சட்டையின் மதிப்பு கூடுகிறது. அடுத்து, அரிசியை எடுத்துக் கொள்வோம். அரிசியாக வாங்கும்போது அதன் விலை ஒரு கிலோ ரூ.60/- என்றால், அந்த அரிசியை இட்லியாகவோ, தோசையாகவோ, சாப்பாடாகவோ சமைக்கும்போது, அதன் மதிப்பு கூடுகிறது அல்லவா?

இதுபோல் நீங்கள் தங்கமாக (ரா மெட்டீரியலாக) வைத்துக்கொண்டால் யாரும் சேதாரம் கேட்க மாட்டார்கள். உதாரணத்திற்கு நீங்க தங்க காசாக வாங்கினீர்கள் என்றால் உங்களுக்கு யாரும் சேதாரம் போட மாட்டார்கள். செய்கூலி மட்டுமே போடுவார்கள். அந்தத் தங்கக்காசு செய்யக்கூடிய நேரம் குறைவு. சேதாரம் குறைவு. ஆனால், அதுவே தங்க காசு செய்யாமல் நீங்கள் ஒரு  பொருளாக (ஒரு ஆரம் நெக்லஸ் தோடு ஜிமிக்கி இது போல்)  செய்யும்பொழுது உங்களுக்குக் கண்டிப்பாக அதுக்கு சேதாரம் ஆகும். நாம் ஊதியம் கொடுத்தாகணும். தங்க காசு என்றால் அரை மணி நேரத்தில் செய்துவிடலாம். அதே தங்க காசுக்கு உண்டான பவுனில் நாம் ஒரு தோடு செய்ய வேண்டும் என்றால் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் ஆகும்.  மேலும், தங்க நகை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து பேரிடம் அது சென்று வர வேண்டும். உதாரணத்திற்கு தங்கக் கட்டியை நாம் தகடாகவோ, கம்பியாகவோ மாற்ற வேண்டும். அதற்குப் பிறகு பொற்கொல்லரிடம் வேலை நடக்கும். அதற்கு அப்புறம் கட்டிங் பாலிஷ். அப்போதுதான் நமக்கு ஒரு ஆபரணம் கிடைக்கும். அவர்களுக்கு நாம் பணமாக இல்லாமல், சேதாரம் என்றுதான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு பவுன் நகை என்றால் அது கட்டிங் செய்பவருக்கு 100 மில்லி முதல் 200 மில்லி வரை ஊதியம் கொடுத்தாக வேண்டும். பாலிஷ்க்கும் அதே மாதிரி. அதற்கு அப்புறம் பொற்கொல்லர் செய்யும் பொழுது அவருக்கு சம்பளம் தேவை அல்லவா? அதனால் அவங்களும் ஒரு சிறு பகுதி மில்லி தங்கம் சம்பளமாக கிடைக்கும்.”

தங்கத்தின் தரத்தை, உண்மைத்தன்மையை, எப்படிக் கண்டுபிடிப்பது?

ரிஜினல் தங்கத்தில் முத்திரை இருக்கும். அத பாத்து ஓரளவு கண்டுபிடிக்கலாம். இப்ப ஹால்மார்க் குறியீடு வந்துவிட்டது. முக்கோண வடிவில் இந்தக் குறியீடு சிம்பிள் இருக்கும். அதன் அருகில், 22 CT என்று உள்ளதா அல்லது 916 என்று உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஹால்மார்க் குறியீடு ஐந்து தரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 14 கேரட் 16 கேரட் 18 கேரட் 20 கேரட். 22 கேரட். இதில் நாம் 22 கேரட் வாங்கினால் மட்டுமே சேதாரம் கொடுக்க வேண்டும். மற்றபடி 18 கேரட் 16 கேரக்டோ வாங்கினால் சேதாரம் கொடுக்கத் தேவையில்லை. அடுத்ததாக இன்றைக்கு நிறைய இயந்திரங்கள் வந்துவிட்டன. அந்தந்த கடைக்குச் சென்று நீங்களே தரத்தைப் பரிசோதித்துக்கொள்ளலாம்.”

கின்னஸ் சாதனை, லிம்கா சாதனை அப்படி ஏதும் உத்தேசம் உண்டா?

“கின்னஸ், லிம்கா சாதனைக்கு எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. ஆனால், என்னைத் தேடி நிறைய விருதுகள் வந்தன. உதாரணமாக, அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் நான் விருது பெற்று உள்ளேன். கின்னஸ், லிம்கா சாதனையில் இடம் பிடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. விரைவில் அது நடக்கும்.”

பொற்கொல்லர்களுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

“பொற்கொல்லர்கள் மூலம் நகைகள் தயாரிக்கும் பணி வெகுவாகக் குறைந்து வருகிறது. 70% நகைகள் மெஷின்கள் மூலமே தயாரிக்கப்படுகின்றன. அப்படி தயார் செய்வதால் பொற்கொல்லர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு மிஷின் 500 செயின் செய்யும் ஆனால், பொற்கொல்லர்கள் ஒரு செயின்தான் செய்ய முடியும். இது மிகப் பெரிய பிரச்னை என்றுதான் கூற வேண்டும்.

பொற்கொல்லர்கள் மூலம் செய்யப்படும் கலைநயம் மிக்க நகைகளுக்கும் மெஷின்களால் செய்யப்படும் நகைகளுக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். நீங்க கேட்கலாம் ஏன் நீங்களும் மிஷின் வைத்து செய்யலாமே என்று. ஆனால், இந்த பாரம்பரிய தொழில் மறைந்து போய்விடுமே!”

அரசிடமும் மக்களிடமும் நீங்கள் விடும் வேண்டுகோள்?

“முன்பெல்லாம் தாலி செய்ய வேண்டும் என்றால் தங்கள் குடும்பத்திற்கு என்று ஒரு பத்தரை இருப்பார். அவரிடம் தங்கம் வாங்கி கொடுத்து முறைப்படி அவருக்கு தட்சணை கொடுத்து, தாலி செய்யச் சொல்லி பாரம் பரியமாக வாங்குவார்கள். ஆனால், எல்லாமே மாறி போச்சுங்க. இதுல கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னன்னா பொற்கொல்லர்களால் செய்யப்படும் நகைகள் உறுதியாக இருக்கும். மிஷன்களால் தயார் பண்ணும் நகைகள் அத்தனை உறுதியாக இருக்காது. பொற்கொல்லர் என்பது ஒரு தெய்வீக கலை. இப்படிப்பட்ட தெய்வீகக் கலை அழிந்து விடக்கூடாது என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

தயவுசெய்து பொற்கொல்லர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நீங்கள் பொற்கொல்லரிடம் நகை செய்யுங்கள். அவர்களுக்கு தனிச் சலுகை, ஓய்வூதியம், மாத உதவித்தொகை அரசு வழங்க வேண்டும்.

கண்கள் ஓரம் கண்ணீர் கசிய கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார் முத்துக்குமார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com