காகிதப் பைகளாக மாறிய புது பாட புத்தகங்கள்!

மும்பை பரபர
காகிதப் பைகளாக மாறிய புது பாட புத்தகங்கள்!

ராட்டிய மாநிலத்தில், ஒவ்வொரு பாடத் திட்டத்திற்கும் தனித்தனியாக நோட்டு, புத்தகம் என மாணவர்கள் எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த பாடப் புத்தகத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் மாநில அரசு தொடங்கியது. மகாராஷ்டிர மாநில பாடநூல் வாரியமான ‘பால பாரதி’ புதிதாக அறிமுகப்படுத்திய இந்த பாடநூல் திட்டத்தின்படி, அனைத்து பாடங்களும் ஒரே புத்தகத்தில் தயார் செய்யப்பட்டிருக்கும். தனித்தனியாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மராத்தி மொழி மாணவர்களுக்காக நான்கு பாகங்களாக தயாரிக்கப்பட்டு, அவைகள் மாணவர் களுக்கு வழங்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் தற்சமயம் முதல் பாகம் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மற்றவைகள்...?

ஔரங்காபாத்தில் உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மருந்துக்கடையில் மருந்துகளை வாங்குகையில், அவருக்கு வழங்கப்பட்ட காகிதப்பை, ‘பாலபாரதி’ வெளியிட்டுள்ள புத்தகத்தின் பக்கங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது எனத் தெரியவர, அதிர்ச்சியடைந்த ஆசிரியர் அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

“புத்தகம் வெளியிடப்பட்டு 15 நாட்களுக்குள், காகிதப் பைகளாக மாறியது வேதனைக்குரிய விஷயம். புத்தகங்களில் குறைபாடுகளிலிருந்தால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவ வேண்டும். புத்தகங்களின் பக்கங்கள் பிரிந்திருந்தால், ஒட்டவோ, தைக்கவோ முயற்சி செய்திருக்கலாம். எங்கு தவறு நடந்து உள்ளதென்பதைக் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

மேலும், இந்தப் பாடப்புத்தகத்தின் 4.5 கோடி பிரதிகளை மாநில முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘பாலபாரதி’ விநியோகம் செய்துள்ளது. இது தவிர, வெளிச்சந்தைக்கு 15 லட்சம் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

41,300 பொருட்கள் பறிமுதல் யாரிடம்? எங்கே?

2023 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் விமான நிலையப் பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்ததில் 41,300 தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பயணிக்க, சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே விமான நிறுவனம் அனுமதிக்கும். எளிதில் தீப்பிடிக்கும் வகையான பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இ-சிகரெட், சிகரெட் லைட்டர், அதிகளவு லித்தியம் பேட்டரி கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள், தேங்காய் போன்றவைகளை எடுத்துச்செல்ல இயலாது.

மும்பை விமான நிலையத்தைப் பொறுத்தவரையில், மே மாதம் என்பது அதிகளவிலான பயணிகள் விமானங்களில் பயணம் செய்யும் மாதமாக இருக்கும். மே மாதம் 16.3 லட்சம் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டதில், சராசரியாக நாளொன்றுக்கு 130 பவர் பேங்க் மற்றும் அதிகபட்சமாக 15,283 இ-சிகரெட்கள் கைபற்றப்பட்டுள்ளன. 943 தேங்காய்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறாக கடந்த 5 மாதங்களில் 41,300 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

மும்பையில் இறங்கி டிரான்ஸிட் வழியே வேறொரு விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகள் குறித்து, முன்னதாகவே அவர்கள் கிளம்பிய விமான நிலையத்திடம், தகவல் கேட்டறியப்படும். இதன்மூலம் திரும்பவும் பயணிகளை சோதனை செய்து தவிர்க்கப்படுமென மும்பை விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உபரித் தகவல்:

மும்பை விமான நிலையத்தில் டெர்மினல் 1இல் மணிக்கு 4,800 பைகளையும், டெர்மினல் 2இல் மணிக்கு 9,600 பைகளை சோதனை செய்ய முடியும்.

ஜனவரி முதல் மே வரை மொத்தம் 92,44,585 பைகள் சோதனை செய்யப்பட்டு இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com